Monday, 21 September 2009

அடியார்க்கெல்லாம் அடியார் - 2

வீட்டுக்குத் திரும்பாமல், திரும்பிச் சென்றால் அம்மா ஏதாவது நினைக்கக்கூடும் என கண்கள் கலங்கியவாறே தொடர்ந்து நடக்கத் தொடங்கினான் கதிரேசன்.

கல்லூரியானது சிங்கமநல்லூரிலிருந்து சற்று உள்ளே தள்ளி அமைந்து இருந்தது. சிங்கமநல்லூர்தனை ஒரு நகரமோ, அல்லது ஒரு கிராமமோ எனச் சொல்லிவிட முடியாதபடி இருந்தது.

மாணவியர்கள் விடுதியானது கல்லூரி வளாகத்திலிருந்து சற்று தள்ளி இருந்தது. மாணவர்கள் விடுதி கல்லூரிக்கு உட்பட்ட இடத்திலேயே அமைந்து இருந்தது. எஞ்சினீயரிங் கல்லூரியும், பாலிடெக்னிக்குடன் சேர்ந்தே இருந்தது. பாலிடெக்னிக்கில் பெரும்பாலும் மாணவர்களே சேர்ந்து இருந்தார்கள். இந்த கல்லூரியை நிறுவி இதோடு எட்டு வருடங்கள் ஆகிறது. இந்தக் கல்லூரியின் முதல்வராக இருந்து வருபவர் சிவநாதன். இவர் ஒரு சிவபக்தர். மிகவும் கண்டிப்பானவர். கருநிற முடியும், துறுதுறுவென இருக்கும் இவரது செயலும் இவரை இளமையானவராகவேக் காட்டிக் கொண்டிருக்கிறது. கல்லூரியை ஒட்டி பெரிய சிவன் கோவில் ஒன்றையும் அவர் கட்டி இருந்தார். கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் மற்றும் சிங்கமநல்லூர் ஊர்க்காரர்களும்அந்த சிவன் கோவிலுக்குச் செல்வது உண்டு.

கதிரேசன் சிங்கமநல்லூர் சென்று அடையும்போது மாலை நேரம் ஆகிவிட்டது. விடுதிக்குச் செல்லும் முன்னர் நேராக தான் கொண்டு வந்திருந்த தகரப் பெட்டியை கோவிலின் வாயிலில் ரசீது கொடுப்பவரிடம் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு சிவன் கோவிலின் உள்ளே சென்றான் கதிரேசன். சிவனை வணங்கிவிட்டு சிறிது நேரம் கோவிலில் அமர்ந்துவிட்டு பின்னர் விடுதியைச் சென்று அடைந்தான். வரிசையாக பல மாணவர்கள் அவரவர் தாய் தந்தையரோடு நின்று இருந்தார்கள். தானும் அவர்கள் வரிசையில் சென்று நின்று கொண்டான்.

அனைவரும் உற்சாகமாகத் தென்பட்டார்கள். அம்மாவை இம்முறையும் உடன் அழைத்து வந்திருக்கலாமோ என கதிரேசனுக்கு மனதில் பட்டது. கண்டிப்பும், கோபமும் அதிகமே நிறைந்த விடுதி காப்பாளர் தெய்வேந்திரனிடம் சென்று அறைக்கான எண்ணையும், அறைக்கதவுக்கான சாவியையும் பெற்றுக்கொண்டுவிட்டு ‘ஒவ்வொரு சனிக்கிழமை ஊருக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை வரலாமா சார்’ எனக் கேட்டான் கதிரேசன். ‘நீ ஊருலேயே இருக்க வேண்டியதுதானே, படிக்க வந்தியா ஊருக்குப் போக வந்தியா’ எனக் கடுமையாகவேச் சொன்னார் அவர். கதிரேசனுக்குப் பின்னால் நின்று இருந்தவர்கள் பயந்துதான் போனார்கள். ஆனால் கதிரேசன் பயப்படாமல் ‘படிக்கத்தான் வந்தேன் சார், வாய்ப்பு இருக்குமானு கேட்டேன்’ என்றான். முறைத்தார் தெய்வேந்திரன். தலையை குனிந்து கொண்டான் கதிரேசன். ‘ரூமுக்குப் போ’ என அதட்டியவர் கதிரேசன் பெயரை மனதில் பதித்தார்.

தயக்கத்துடனே அறையில் சென்று தனதுப் பெட்டியை வைத்துவிட்டு சுற்றிப் பார்க்க தனக்கு முன்னரே இரண்டு பேர் அந்த அறைக்கு வந்திருப்பது தெரிந்தது. ஒவ்வொரு அறையிலும் மூன்று பேர் தங்கிக்கொள்ளலாம். கட்டில் எல்லாம் கிடையாது. தரையில்தான் படுத்துக் கொள்ள வேண்டும். அறையில் புதிதாக வர்ணம் பூசி இருந்தது தெரிந்தது. மிகவும் சுத்தமாக இருந்தது. பெட்டிக்கு அருகில் அமர்ந்து கொண்டான் கதிரேசன்.

பெட்டியைத் திறந்தான். பெட்டியில் உள்புறம் ஒட்டப்பட்டு இருந்த சிவன் அபயம் அளித்துக் கொண்டு இருந்தார்.

‘தென்னாட்டுச் சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’

எனச் சொல்லிக்கொண்டே சின்னத் தலைகாணியும், போர்வையும் எடுத்து கீழே வைத்தான். தட்டு, டம்பளர், மிட்டாய், சேவு, முறுக்கு என எல்லாம் எடுத்து வைத்தான். பெட்டியை மூடினான். கதிரேசன் அறையில் தங்கிக்கொள்ளும் இரண்டு மாணவர்கள் உள்ளே வந்தார்கள்.

சிறிது நேரம் பின்னர் மூவரும் அறிமுகம் செய்து கொண்டார்கள். ஒருவன் நாகராஜன், காரியநேந்தல். மற்றொருவன் கார்த்திகேயன், வடமதுரை. அப்பொழுது அறைக்குள் தெய்வேந்திரன் வந்தார். ஒவ்வொரு பெயராக அழைத்தார். மூவரும் ஆம் என்றார்கள். கதிரேசனுக்கு அருகில் வந்தார் தெய்வேந்திரன். கதிரேசனை ஓங்கி ஒரு அறை விட்டார் அவர். 'சிவனே' என்று அலறினான் கதிரேசன்.

அருகில் இருந்து இருந்தால் அம்மா உன்னையே அழைத்திருப்பேன் என மனதுக்குள் கேவினான். ‘என்ன தைரியம் இருந்தா நீ வந்ததும் வராததுமா என்னை எதிர்த்துப் பேசுவ’ என்றார் தெய்வேந்திரன். மெளனமானான் கதிரேசன். ‘இங்க ஒழுக்கம்தான் முக்கியம். பெரியவங்களை மதிச்சி நடக்கனும். எதிர்த்துப் பேசினா கழுத்தைப் பிடிச்சி வெளியே தள்ளிருவேன், ஒழுங்காப் படிச்சி வெளியேப் போக வழியைப் பாரு’ எனத் திட்டிவிட்டுச் சென்றார். மற்ற இருவரும் நடுங்கினார்கள். கதிரேசன் பெட்டியைத் திறந்தான்.

‘உள்ளூர ஆசையில் ஒருவினாவும் கேட்டு வைத்தேன்
எள்ளிநெருப்பாடி என்மேல் எச்சமிட்டுச் சென்றார்
அம்மாவின் அரவணைப்பில் நானும் இருந்து இருந்தால்
சும்மாதான் அவளும் இருப்பாளோ சொல்சிவனே’

கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது. துடைக்க மன விருப்பமில்லாமல் தொடர்ந்து மெல்லிய குரலில் பலமுறை இதே பாடலைப் பாடினான். மற்ற இருவரும் பயத்துடனே இருந்தார்கள். கதிரேசனின் கண்கள் பெட்டியில் ஒட்டப்பட்டிருந்த சிவன் படத்தின் மேல் நிலையாய் நின்றது.

(தொடரும்)

5 comments:

vasu balaji said...

அழகா எழுதுறீங்க ஐயா. தவிப்பு உணர முடிகிறது

க.பாலாசி said...

கதையின் ஓட்டம் மிகவும் அருமை நண்பரே...

மெல்லிய சோகம் இழையோடுகிறது...கொஞ்சம் நகையும் சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும்...

//அம்மாவின் அரவணைப்பில் நானும் இருந்து இருந்தால்
சும்மாதான் அவளும் இருப்பாளோ சொல்சிவனே’//

இந்த வரிகள் வலிமிகு வரிகள்...தொடருங்கள்...

ஈரோடு கதிர் said...

அருமை...

விடுதி வாழ்க்கை இயல்பாய் சித்தரிக்கப்பட்டிருக்கிறது

தொடருங்கள்

கலகலப்ரியா said...

//
‘உள்ளூர ஆசையில் ஒருவினாவும் கேட்டு வைத்தேன்
எள்ளிநெருப்பாடி என்மேல் எச்சமிட்டுச் சென்றார்
அம்மாவின் அரவணைப்பில் நானும் இருந்து இருந்தால்
சும்மாதான் அவளும் இருப்பாளோ சொல்சிவனே’//

touchy sir..

Radhakrishnan said...

1.மிக்க நன்றி ஐயா. எழுத்தினை மெருகேற்ற இயலுமா என முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.

2. மிக்க நன்றி பாலாஜி அவர்களே. முயற்சி செய்கிறேன்.

3. மிக்க நன்றி கதிர் அவர்களே. விடுதி வாழ்க்கை பலருக்கும் இதுபோன்றே வாய்த்திருக்கலாம்.

4. மிக்க நன்றி கலகலப்ரியா அவர்களே.