Thursday, 6 August 2009

வெண்பொங்கல், சாம்பார்- சமையலும் ஒரு கலையே!

நாளை மறுதினம் என் சகோதரியும், மாமாவும் இந்தியா செல்வதால், அவர்களுக்குச் சாப்பாடு செய்து தருகிறேன் என நேற்று வாக்குறுதி தந்து இருந்தேன். நான் ஊரில் இருக்கும்போதும், கல்லூரிக்குச் சென்று திரும்பும் போதும், விடுமுறைக் காலங்களிலும், ராதா கொழுக்கட்டை ஆசையாகச் சாப்பிடுவான் என என் சகோதரி மறக்காமல் செய்து தருவார்கள். அதையே நேற்று நான் அவர்களிடம் சொல்லி வைக்க, சில தினங்களாகச் செய்ய வேண்டும் என முயற்சித்தேன், வறுத்த மாவில் சரியாக வரவில்லை எனக் குறைபட்டுக் கொண்டார்கள். எனது மற்றொரு சகோதரி, வறுத்த மாவில் 'வெதுவெதுப்பான' தண்ணீருடன் கலந்தால் நிச்சயம் நன்றாக வரும், உதவுகிறேன் என சொன்னார்கள். ஆக சில வருடங்கள் பின்னர் கொழுக்கட்டை சாப்பிடும் வாய்ப்பு கிடைத்துவிடும்.

என்ன சமைத்துச் செல்லலாம் என நினைத்துப் பார்த்தபோது எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு உணவு 'வெண்பொங்கல்' எனவே வெண்பொங்கலையே செய்து வருகிறேன் என சொல்லி இருக்கிறேன். சில தினங்கள் முன்னர் சகோதரி காஞ்சனா இராதாகிருஷ்ணன் அவர்களின் வலைப்பூவில் கொழுக்கட்டை பற்றிய விபரம் பார்த்தேன், கொழுக்கட்டைச் செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டேன். நினைத்ததன் பலனாக கொழுக்கட்டை இன்று கிடைத்துவிடும்.

வெண்பொங்கல் தவிர்த்து வேறு என்ன செயலாம் என யோசித்து சகோதரி வித்யாவின் சமையல் அறை வலைப்பூவில் சென்றுப் பார்த்ததில் எதுவும் கிடைக்கவில்லை. திடீரென முத்தமிழ்மன்றத்தில் நான் எழுதியிருந்த வெண்பொங்கல் குறிப்பு ஞாபகம் வந்தது. சரியாக நேரமெல்லாம் பொருந்தி வருகிறதே! அது பின்வருமாறு.

-----
இன்று மதியம் வெண்பொங்கல் செய்யலாம் என இருக்கிறேன். இந்த வெண்பொங்கல் சில வருடங்கள் முன்னர் ஒரு இணையத்தளத்திலிருந்து எடுத்துச் செய்தேன். முழுவதும் ஞாபகம் இல்லையெனினும் எப்படி செய்ய இருக்கிறேன் எனச் சொல்லிவிடுகிறேன்.

புழுங்கல் அரிசி. அமெரிக்கன் நீள அரிசி என இங்கே சொல்வார்கள். அதை ஒன்றரை டம்பளரும், உடைத்த பயிர்த்தம் பருப்பு அரை டம்பளரும் தனியாக எடுத்துக்கொள்ளவேண்டும். பருப்பினை தண்ணீரில் கழுவிவிட்டு சட்டியில் இட்டு வறுக்க வேண்டும். கருப்பாக வறுத்துவிடக்கூடாது. கவனம் தேவை.

அரிசியை தண்ணீரில் கழுவிவிட்டு வறுத்த பருப்பையும் அரிசியையும் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். சிறிது உப்பு இட்டால் மட்டும் போதும். நன்றாக வெந்தபின்னர் மிளகு, சீரகம், கடுகு,கொத்தமல்லி, வேப்பிலை என கொஞ்சமாகச் சேர்த்து நன்றாக கிளறினால் போதும். வெண்பொங்கல் தயார்.

சாம்பாருடனும், சட்டினியுடனும் சாப்பிட்டால் தனி ருசிதான்.

சாம்பார் எப்படிச் செய்வது எனில் அதுவும் வெகு சுலபம். அதையும் எழுதி இருக்கிறேன். இதோ அது பின்வருமாறு.

வெங்காயம் கொஞ்சம், கத்தரிக்காய் கொஞ்சம், பச்சை மிளகாய், உருளைக்கிழங்கு கொஞ்சம், கேரட் கொஞ்சம் என எல்லாம் வெட்டி எண்ணெயில் வதக்கி, எண்ணெய் தோய்ந்த பருப்பு கொதிக்கும் நீரில் இவை அனைத்தையும் போட்டு சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, சீரகப் பொடி என சிறிது உப்புடன் கலந்து கொதிக்க வைத்தால் சாம்பார் ரெடி.

ஆண்கள் சமைக்கக் கற்றுக் கொள்வது நல்லது என சொல்வார்கள், ஆனால் வாக்கெடுப்பு எடுத்துப்பாருங்கள், சமைக்கவே நேரம் போதாது என சொல்வார்கள் பெண்கள்.

கல்யாணச் சாப்பாடு என்றால் எங்கள் ஊரிலிருந்து ஆண்கள் தான் திருமண மண்டபங்களுக்குச் சமைக்கச் செல்வார்கள். சாப்பாடும் அத்தனை ருசியாக இருக்கும்.

ஹோட்டல்களில் கூட ஆண்கள் தான் சமையல்காரர்கள்.

நளபாகம் அறிந்திருப்பீர்களே.

ஆண்கள் சமையலில் கெட்டிக்காரர்கள், அந்த வேலையையும் எடுத்துக்கொண்டால் வீட்டிலும் அடிமைப்படுத்திவிட்டார்கள் என பெரும் சர்ச்சை எழும் என அந்த காலத்தில் இருந்தே வீட்டில் ஆண்கள் சமைப்பதை விட்டுவிட்டு பெண்கள் சமைக்கட்டும் என விட்டுவிட்டார்கள் போலும்.

8 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஆண்கள் சமையலில் கெட்டிக்காரர்கள், அந்த வேலையையும் எடுத்துக்கொண்டால் வீட்டிலும் அடிமைப்படுத்திவிட்டார்கள் என பெரும் சர்ச்சை எழும் //

சகாதேவன் said...

அறுசுவை நளகிருஷ்ணா
காலை டிபன் ஹோட்டலில்
என்றால் என் தேர்வு
பொங்கல் வடைதான்.
சகாதேவன்

கோவி.கண்ணன் said...

என்றாவது வாய்க்கு சுவையாக சாப்பிட வேண்டுமென்றால், வீட்டுக்கார அம்மாவை தொல்லைப்படுத்தாமல் நானே சமைக்க தொடங்கிவிடுவேன்.

:)

Vidhoosh said...

//ஆண்கள் சமையலில் கெட்டிக்காரர்கள், அந்த வேலையையும் எடுத்துக்கொண்டால் வீட்டிலும் அடிமைப்படுத்திவிட்டார்கள் என பெரும் சர்ச்சை எழும் என அந்த காலத்தில் இருந்தே வீட்டில் ஆண்கள் சமைப்பதை விட்டுவிட்டு பெண்கள் சமைக்கட்டும் என விட்டுவிட்டார்கள் போலும். ///
அப்படி எல்லாம் நீங்களாக கற்பனை செய்து கொள்ள வேண்டாம். விட்டே கொடுக்க கூடாது. மீண்டும் ஆட்சியை திருப்பிக் கொடுக்க நாங்கள் தயார். நீங்கள் தயாரா என்று நன்கு யோசித்து சொல்லுங்கள். ஏற்று கொண்டால் நடுவில் ரிசைன் செய்யும் அலம்பல் எல்லாம் செய்யக்கூடாது. ஓகே-வா?

-வித்யா

Vidhoosh said...

வெண்பொங்கலுக்கு கத்தரிக்காய் அல்லது வெங்காய கொத்சும் நன்றாக இருக்கும்.

என் வலைப் பூவில் (வித்யா'ஸ் கிச்சன்) சமையல் குறிப்புகளை பதிவேற்ற நேரம் சிறிது கம்மியாக உள்ளது. விரைவில் அதுவும் முழுமை அடையும். போட்டோகளுக்காக வைடிங். computer-க்கு மாற்றியதும் பதிவில் வந்துவிடும்.:)

--வித்யா

Radhakrishnan said...

1. மிக்க நன்றி ஐயா.

2. பொங்கல் வடை மிகவும் சிறப்பாகவே இருக்கும். நன்றி சகாதேவன் அவர்களே.

3. ஆஹா கோவியாரே, எனக்கோ என் மனைவியின் சமையல் தான் மிகவும் சிறப்பாக இருக்கும். மிக்க நன்றி.

4. ஆஹா, எப்போதாவது சமைப்போம் எனச் சொன்னதற்கு எப்போதும் சமைக்க வேண்டும் என கட்டாயப்படுத்திவிடுவீர்கள் போலிருக்கிறதே வித்யா. 'தாயோடு அறுசுவை உண் போம்' எனச் சொல்லி வைத்திருக்கிறார்கள். பெண்கள் சமைக்கும்போது அன்பையும் சேர்த்து சமைப்பதாகவும், தாய் என்றால் அன்பு எனும் அர்த்தத்திற்காகவும் சொல்லி வைத்திருக்கிறார்கள். மிக்க நன்றி.

5. ஆவலுடன் எதிர்பார்கிறேன். பலவிதமான கொழுக்கட்டைகள் குறிப்புப் பார்த்தேன். நன்றாக விளக்கமாக எழுதப்பட்டு இருக்கிறது சமையல் குறிப்புகள். மிக்க நன்றி.

Kanchana Radhakrishnan said...

visit my blog for venpongal
http://annaimira.blogspot.com/2008/12/blog-post_18.html

Radhakrishnan said...

மிக்க நன்றி சகோதரி.