Friday, 14 August 2009

கடவுள் எழுதிய கவிதை.

எனக்கென்று எதுவுமில்லை என்னையன்றி எதுவுமில்லை
தனக்கென்று என்னை வைத்துக் கொண்டு
பிரித்து வைத்த கொடுமை கண்டு
சிரித்து வைக்கிற வழிதான் எனக்கு!

கண்டதில்லை என்னை ஒருவரும் பொதுமறை
உணர்ந்ததுமில்லை என்னை ஒருவரும் இதுவரை
உள்ளத்து உணர்ச்சியில் உண்மை தொலைத்தவருக்கு
பிள்ளை நோக்கும் தாயாய் நானே!

வட்டம் போட்டு வைத்த பின்னர்
தொட்டு தொடங்கிய இடம் தெரியாது
தெரியாத விசயங்களுக்கு தெரிந்ததை போல்
அறியாத என்னை வைத்தனர் அன்னையாய்!

எல்லையில்லாமல் பரந்து கிடக்கும் வெளியில்
தொல்லையின்றி இருந்த என்னை எடுத்து
காற்றில் நெருப்பில் நீரில் நிலத்தில்
போற்றி ஓரிடம் தந்தனர் ஆகாயத்தில்!

உயிரற்ற பொருளில் உயிராய் இருப்பவன்
உயிருள்ள பொருளில் உணர்வாய் தகிப்பவன்
ஒப்புமைக்கு உட்படாது தனக்கே நிகரானவன்
செப்புமொழியில் வைத்தே சிறப்பித்தனர் என்னை!

பற்றற்றவன் என என்னை சொல்லியே
குற்றமானவனாய் தூதர்கள் அவதாரங்கள் அனுப்பியதாய்
கதைகள் பேசிடும் காவியங்கள் அனைத்திலும்
விதைபோல் இருப்பவனாய் விதைத்தனர் என்னை!

ஓங்கி வளர்ந்துவிட்டேன் ஒன்றுக்கும் உதவாமல்
தாங்கி நிற்கும் தவழும் கைகளாய்
பார்த்து பரவசமாகும் நம்பிக்கை கொண்டோரிடம்
தீர்ந்து போகும் நிலையில்லை எனக்கு!

என்னை வந்தடைய வழிதேடும் பலருக்கு
இன்ன வழியென்று வகுத்து வைத்தே
உள்ளுக்குள் ஒளிந்திருப்பதாய் என்னை கண்டிட
பள்ளிக்கும் செல்லாமல் பாடம் கற்பிப்பர்!

ஞானமற்ற என்னை ஞானிகள் கண்டதாய்
தானமற்ற நெஞ்சம் புண்ணியம் கொண்டதாய்
எல்லாம் கடந்து உள்ளிருப்பதாய் நானிங்கு
சொல்லியதாய் எழுதியது நானல்ல ரெங்கனே!

No comments: