Wednesday, 5 August 2009

கால காலமாய்

ஆயகலைகள் அறுபத்தி நான்கு
அறிந்தது இல்லை
புரதங்கள் செய்யும்
அமினோ அமிலங்கள் இருபதை
அழைத்து அமர வைக்கும்
கோடான்கள் அறுபத்தி நான்கு
புரிந்தது இல்லை

சுற்றும் கோமெட்டில் கணக்கற்ற
அமினோஅமிலங்கள்
உயிர் படைக்கத் தெரிவதில்லை
தோன்றியதிலிருந்து எம்மாற்றம்
கொள்ளாத ஆஸ்டிராய்டுகள்
வணங்கத்தக்க கல்லும் இல்லை

படைக்கும் பிரம்மன் நான்முகன்
பார்த்தது இல்லை
செய்தி சுமந்து
செயல் கட்டளையிடும்
நியூக்ளிக் அமில அமினோ நான்கு
அதன் மாற்றுக்காக ஒன்று
நினைவில் நிற்பதில்லை

பஞ்ச பூதங்கள் மந்திர மாயங்கள்
பழகியது இல்லை
இயற்கையோடு உரசி நிற்கும்
செயற்கை விசயங்கள்
இசைந்தது இல்லை

மனிதரை குணத்தால் மூன்றாக
செயலால் நான்காக
பிரித்ததின் காரணம் நல்லதில்லை
சமமென சாதித்திட
எந்த ஒரு பாதையும்
இங்கு ஒழுங்கில்லை

காற்றில் கரியமில வாயு, ஆக்ஸிஜன்
நைட்ரஜன் கணக்கிருக்கும்
கண்டது இல்லை
எந்த காற்று என்ன மொழி
சுமக்கிறதோ தெரியவில்லை
எண்ணற்ற மொழி வந்த
நோக்கம் புரியவில்லை

ஈர்ப்புவிசையால் விலகிச் சுற்றி
ஈர்ப்புக்கள் இழுபடாது இருக்கும்
கோள்களின் இயக்கம்
தெளிந்தது இல்லை
எண்ணற்ற சூரியன்கள் இருந்தும்
சுற்றுகின்ற பல கோள்கள் இருந்தும்
உயிர் சுமக்கும் கோள் ஒன்று
உயிர் படைத்து, காத்து அழித்து
நிலையாய் நிற்பவன் ஒன்று
உறுதி இல்லை

அண்ட செல்லில்
இருக்கும் மைட்டோகாண்டிரியா
சைட்டோபிளாசம்
சேய் செல்லில் மாற்றம் கொள்வதில்லை
விந்து செல்லில்
இருக்கும் மரபணுக்கள் தவிர
சேய் செல்லில் எதுவும் சேர்வதில்லை
சக்தி சக்தி என தாயை
அழைப்பதன் அர்த்தம் புரிவதில்லை
மைட்டோகாண்டிரியா சக்தியின் இருப்பிடம்
மனம் உருக்கும் விசயம் அறிவதில்லை

முடிவில்லா மாற்றம் கொள்ளும் சக்தி
தோற்றம் சொன்னதில்லை
கடவுள் கண்டதாய்
எந்த ஞானியும் சத்தியம்
செய்தது இல்லை
அன்பை சிவமென கூறி
ஏழையின் சிரிப்பில் இறைவனை சொல்லி
காசை கடவுளாக்கிட...
விளங்கமுடிவதில்லை
அவதாரம் வருவதற்கான
காலம் வெகு அருகில் இல்லை.

6 comments:

Anonymous said...

கொன்னுட்டீங்க! கவிதையைக் கூட இப்படி விஞ்ஞானச் சிறுகதை மாதிரி சுவாரஸ்யமாக எழுத முடியுமா?

http://kgjawarlal.wordpress.com

Radhakrishnan said...

மிக்க நன்றி ஜவர்லால் மற்றும் ஐயா.

Vidhoosh said...

super sir. :)

Radhakrishnan said...

மிக்க நன்றி வித்யா.

கோவி.கண்ணன் said...

//முடிவில்லா மாற்றம் கொள்ளும் சக்தி
தோற்றம் சொன்னதில்லை
கடவுள் கண்டதாய்
எந்த ஞானியும் சத்தியம்
செய்தது இல்லை
அன்பை சிவமென கூறி
ஏழையின் சிரிப்பில் இறைவனை சொல்லி
காசை கடவுளாக்கிட...
விளங்கமுடிவதில்லை
அவதாரம் வருவதற்கான
காலம் வெகு அருகில் இல்லை.
//

அவதாரம் சொல்லிவிட்டு வராது ! அப்படி வந்தால் சரிகட்ட முயற்சிப்பாங்கன்னு அதற்கும் தெரியும்.
:)

Radhakrishnan said...

ஹா ஹா, சரிதான் கோவியாரே.

கல்கி அவதாரம், மனித வாழ்க்கை எப்படியெல்லாம் மாறும் என எழுதி வைக்கப்பட்டு இருக்கிறது என ஒரு நண்பர் என்னிடம் கூறினார். எனக்கு அந்த எழுத்துக்களையெல்லாம் படித்துவிட வேண்டும் எனும் ஆவல் உண்டு. படிக்க இன்னும் முயற்சி எடுக்கவில்லை.

மிக்க நன்றி.