Wednesday, 5 August 2009

தேடினால் கிடைத்துவிடும் - 9

மீண்டும் மழை வந்து சேர்ந்தது. மழையில் சற்று தொலைவுக்குச் சென்றவுடன் ஓட்டுநர் முதற்கொண்டு மற்றவர்கள் தங்களால் இனிமேல் பயணத்தைத் தொடரமுடியாது, இங்கிருந்து நாங்கள் திரும்பிச் செல்கிறோம். நீங்கள் எப்படியாவது போய்ச் சேருங்கள் என அந்த நபரையும், கோவிந்தசாமியையும் தனியாய் விட்டுவிட்டு செல்லத் திட்டமிட்டார்கள். அதற்கு அந்த நபர், பாதை இன்னும் கொஞ்ச தூரம் போனால் சரியாகிவிடும், இப்படி எங்களை தனியாக விட்டுவிட்டால் நாங்கள் செல்ல முடியாது என நினைத்தீர்களா? எனக் கேட்டார்.

பாதை மிகவும் மோசமாக இருக்கிறது, தொடர்ந்து சென்றால் வாகனம் பழுது அடைந்துவிடும். வாகனத்தை தனியாய் விட்டுச் சென்றால் எனது முதலாளிக்கு நான் என்ன பதில் சொல்வது. தங்கத்தை மாற்றும் வழியெல்லாம் நீங்கள் கற்றுக்கொண்டுவிட்டு எங்களுக்கு சொல்லித் தாருங்கள் என அவர்கள் சொன்னதும் கோவிந்தசாமி மிகவும் கவலையுற்றார். ஆனால் அந்த நபர் அதற்கெல்லாம் கவலைப் படவில்லை. மற்றவர்களை நோக்கி கேட்டார், என்ன செய்யப் போகிறீர்கள் என. அதற்கு அவர்கள் இப்போது செல்வது சரியாகப்படவில்லை, பாதை வேறு மிகவும் மோசமாக இருக்கிறது, உங்கள் பேச்சினை நம்பி நாங்கள் யோசிக்காமல் கிளம்பி வந்துவிட்டோம் எனவே எங்களுடன் திரும்ப வாருங்கள் அல்லது எங்களையாவது போக விடுங்கள் என சொன்னார்கள்.

அந்த நபர் உடனே பணத்தில் கொஞ்சம் பிடித்துக் கொண்டு நீங்கள் செல்லுங்கள் என அவர்களை அனுப்பினார். கோவிந்தசாமி புதையைலை எடுத்தே தீர்வது எனவும் இவ்வளவு தூரம் வந்துவிட்டு காசியைப் பார்க்காமல் செல்வதா எனவும், ஒருவர் கொடுத்த வேலையை செய்யாமல் செல்வதா என அந்த நபருடனே செல்வது என முடிவு செய்து அவருடன் நடக்க ஆயத்தமானார்.

கோவிந்சாமியைப் பார்த்து அந்த நபர், இப்படித்தான் வாழ்க்கையில் ஒரு பயணத்தை தொடங்கிவிட்டு ஒழுங்காக முடிக்க இயலாமல் பலர் கஷ்டம் என எண்ணி கைவிட்டு விடுகிறார்கள். நமது செயல் குறிக்கோள், எந்த தடைகள் வந்தாலும் அதனை ஒதுக்கித் தள்ளிவிட்டு அந்த விசயத்தை அடைவதற்கு மனோ தைரியம் வேண்டும், உங்களுக்கு வயதாகிவிட்டதே அன்றி மனோ தைரியம் அதிகம் இருக்கிறது என்றார்.

வியாபாரத்தில் எத்தனையோ பிரச்சினைகள் வந்தபோதும் மனம் தளராமல் எடுத்த காரியத்தில் வெற்றி பெறாமல் அமரந்தது இல்லை, இப்பொழுது இந்த காரியம் எடுத்துவிட்டேன், மனம் தளர்ந்தும் விட்டேன். ஆனால் அந்த வயதானவரை சந்தித்தபின்னர் எப்படியாவது இந்த புதையலையும் காசியையும் கண்டுவிடவேண்டும் என வைராக்கியம் கொண்டேன், பிடிக்காத தொழிலையும் புரிந்து ஓரளவு பணம் ஈட்டினேன், எனது பாதைக்கு வழிகாட்டியாய் உங்களை தந்துவிட்டான் இறைவன் என்றார் கோவிந்தசாமி.

மழை நின்று போயிருந்தது. வழியில் சென்ற ஒரு வாகனத்தை நிறுத்தினார் அந்த நபர். எங்கே செல்ல வேண்டும் என கேட்டார் அந்த வாகன ஓட்டி. காசி என சொன்னதும், காசிக்கு செல்லாது, அதற்கு முன்னால் உள்ள இடத்திற்கு வரை செல்லும், ஏறிக்கொள்ளுங்கள் என்றார். உள்ளே பலர் அமர்ந்து இருந்தனர். அவர்களுடன் இவர்களும் அமர்ந்தார்கள். நெரிசலாக இருந்தது. வாகனத்தை மிகவும் லாவகமாக ஓட்டினார். வாகனம் பழுது அடைந்து விடுமா என கோவிந்தசாமி கேட்டதற்கு அந்த நபர் தடையாகும் என நினைத்துக் கொண்டு ஒரு விசயத்தைத் தொடங்கினால் நிச்சயம் தொடங்கவே முடியாது. வாகனம் பழுது ஆகாது என்ற நம்பிக்கையில் தான் ஓட்டுகிறார் அவர் என்றார்.

இரண்டு நாட்கள் என கரடு முரடான பாதையில் பயணம் தொடர்ந்து ஒரு இடத்தில் இறக்கிவிட்டார்கள். இங்கிருந்து கங்கையை கடந்து சென்றால் காசி வந்துவிடும். இங்கேயே கரைத்துவிடுங்கள் அந்த சாம்பலை என்றார் அந்த நபர். கோவிலுக்கு அருகில் சென்று கரைக்கிறேன் என்றார் கோவிந்தசாமி.

சிரமத்துடன் காசியை அடைந்தார்கள். அங்கு எங்குப் பார்த்தாலும் கோவில்கள்.முதலில் சித்தரை பார்க்கலாம் என்றார் அந்த நபர். காசியைக் கண்டு ஆனந்தம் கொண்டாலும் தனது கனவில் கண்ட கோவில் அங்கே இல்லாதது கோவிந்தசாமிக்கு ஏமாற்றமாக இருந்தது.

(தொடரும்)

No comments: