Monday, 3 August 2009

தேடினால் கிடைத்துவிடும் - 6

பணத்தை எடுக்குமாறு அவர்கள் கோவிந்தசாமியை மிரட்டினார்கள். தன்னிடம் இருந்த சிறிதளவு பணத்தை எடுத்துக் கொடுத்தார். இவ்வளவுதானா என பையினை கோவிந்தசாமியிடம் இருந்து பறித்தார்கள். உள்ளே இருந்த ஆடைகளையும் சில காகிதங்களையும் சாம்பல் பையும் இருப்பதை பார்த்து வெறுப்புற்ற ஒருவன் அதனை எடுத்து பக்கத்தில் சென்று எறிந்தான். கோவிந்தசாமி பதறினார். கோவிந்தசாமியை அடித்துவிட்டு அவர்கள் இடத்தை காலி பண்ணினார்கள். கோவிந்தசாமி வலி பொறுக்கமுடியாமல் அஸ்தி பையினையும் தனது உடைகளையும் எடுத்துக்கொண்டு அந்த இருட்டினில் அங்கேயே அமர்ந்தார்.

இனிமேல் காசிக்கு செல்வது இயலாத காரியம், தனது கனவும் ஆசையும் எப்படி இத்தனை காலம் புறக்கணித்தோமோ அதைப்போலவே இப்பொழுதும் செய்ய வேண்டியதுதான் என மனம் வெதும்பினார். கண்களில் கண்ணீர் கரை புரண்டோடியது. கங்கை கூட அமைதியாகத்தான் ஓடி கொண்டிருந்தது. தனது இனிமையான வாழ்க்கையை விட்டுவிட்டு இப்படி இன்னல் படுகிறோமே என நினைக்கும்போதே அவரால் அழுகையை கட்டுப்படுத்த இயலவில்லை. தனியாக தான் கிளம்பி வந்தது தவறோ என புலம்ப ஆரம்பித்துவிட்டார்.

பசியும் வந்து அவரை பாடுபடுத்தியது. மீண்டும் காய்ச்சலும் இருமலும் வந்து அவரை தொல்லை செய்தது. இனிமேல் இப்படியே இறந்து விடவேண்டியதுதான் என அவரது மனம் அவரை அலைகழித்தது. எங்கும் நடக்க இயலாமல் அங்கேயே அமர்ந்துவிட்டார் கோவிந்தசாமி. ஒவ்வொருமுறை பிரச்சினை வந்தபோதெல்லாம் யாராவது உதவி புரிந்தார்கள், அதுபோல யாராவது இம்முறை உதவி செய்யமாட்டார்களா என ஏக்கத்துடனே இரவினை கழித்தார். இந்நேரம் இந்த கொள்ளையர்கள் வராது போயிருந்தால் காசியை சென்று புதையலை எடுத்து இருக்கலாம் என எண்ணம் ஓடியது. மனதும் உடம்பும் அதிகமாகவே வலித்தது.

தான் செய்தது ஒரு முட்டாள்தனமான காரியம், இனிமேல் இதை தொடரக்கூடது என மனதில் நினைத்துக்கொண்டே பாதி உறக்கமும் மீதி விழிப்பும் என போக்கினார். காலை விடிந்தது. சற்று தொலைவில் கட்டிடங்கள் தெரிந்தது. அதை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அங்கே கை ரேகை பார்க்கும் நிலையம் ஒன்று தெரிந்தது, ஆனால் வீடு போலவே இருந்தது. கோவிந்தசாமி தனது எதிர்கால நிலையை அறிந்து கொள்ள ஆசை கொண்டார். ஏன் இப்படி நிலை வந்தது என தெரிந்து கொள்ள எண்ணினார். ஆனால் அவரிடம் கொஞ்சம் கூட பணம் இல்லை. யோசித்தார். அந்த வீட்டின் அருகில் சென்று அமர்ந்தார். வீட்டில் இருந்து வந்த வயதான ஒருவர் இவரை பார்த்து ஏன் இங்கு அமர்ந்து இருக்கிறாய் எனக் கேட்டார். இவருக்கு மொழி புரியவில்லை. கையை காட்டினார் கோவிந்தசாமி.

அந்த வயதானவர் இவரை உள்ளே அழைத்து சென்றார். வீடு மிகவும் சுத்தமாக இருந்தது. இரண்டு நாற்காலிகள் போடப்பட்டு இருந்தது. ஒன்றில் அமரச் சொன்னார் அந்த வயதானவர். பத்து ரூபாய் என எழுதி காட்டினார். இல்லை என தமிழில் சொன்னார் கோவிந்தசாமி. இல்லையா என தமிழிலேயே பேசினார் அந்த வயதானவர். அவர் சிரித்துக்கொண்டே எனக்கு பல மொழிகள் தெரியும் என்றார். கோவிந்தசாமிக்கு நம்பிக்கை வந்தது.

கோவிந்தசாமியை விசாரித்தார். கோவிந்தசாமி தனது கனவினையும், ஆசையையும் இனிமேல் அது தொடர இயலாது இருப்பதையும் கூறினார். வயதானவர் சிரித்தார். கண்களை மூடி பிரார்த்தனை செய்தார். கோவிந்தசாமிக்கு இப்போது பயமாக இருந்தது. உனது கனவுகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா என சொன்னார் அந்த வயதானவர் கண்கள் திறந்து கொண்டு. சாத்தியமா என்றார் கோவிந்தசாமி.

கனவுகள் கடவுளின் மொழி. நமது மொழியில் கடவுள் பேசினால் நான் அதை சொல்ல இயலும், ஆனால் ஆத்மா மொழியில் பேசினால் அதை நீ மட்டுமே புரியமுடியும் என்றார் அந்த வயதானவர். இதே கனவு எனக்கு பலமுறை வந்து இருக்கிறது என்றார் கோவிந்தசாமி. உனது கனவினை விபரமாகச் சொல் என்றார் அந்த வயதானவர்.

நான் கரடுமுரடான பாதையை கடந்து காசிக்கு போனேன். அங்கே ஒரு கோவில் இருந்துச்சு. அந்த கோவிலுக்கு பக்கத்தில் ஒரு ஆறு ஓடிக்கிட்டு இருந்துச்சு. அந்த ஆற்றுக்கு அருகில் நான் தோண்ட ஆரம்பிச்சேன். எதுவும் கிடைக்கவில்லை. மீண்டும் கோவிலுக்குள்ள போனேன். அப்புறம் வந்து மீண்டும் தோண்ட ஆரம்பிச்சென். தங்கம் கிடைச்சது. அதை எடுத்து கையில் வைச்சி பார்த்ததும் முழிச்சிட்டேன் என்றார் கோவிந்தசாமி.

சரி ரொம்ப சுவாரசியமாக இருக்கிறது. நீ காசிக்கு செல்ல வழி சொல்கிறேன், எனக்கு நீ என்ன தருவாய் என்றார் அந்த வயதானவர். அதற்கு கோவிந்தசாமி அந்த புதையலில் நான்கில் ஒரு பாதி உங்களுக்கு தருகிறேன் என்றார். அதற்கு அந்த வயதானவர் உன்னிடம் இல்லாத ஒன்றை பிறருக்கு தருவதாய் எந்த காலத்திலும் வாக்கு தராதே. இது மிகவும் உண்மையான கனவு தான் நீ புதையலை கண்டுபிடித்து நிச்சயம் பணக்காரனாக ஆவாய் என சொன்னதும் கோவிந்தசாமி எரிச்சலுடன் காசிக்கு செல்ல என்னிடம் பணம் இல்லை, தெம்பும் இல்லை என்றார்.

என்னால் கனவு என்ன சொல்கிறது என சொல்ல முடியும், ஆனால் பணம் எல்லாம் தர முடியாது. அந்த கனவினை உண்மையாக்கும் சக்தியும் என்னிடம் இல்லை என்றார் அந்த வயதானவர். கோவிந்தசாமி மிகவும் சலிப்படைந்தார். இனிமேல் இது போன்ற கனவினை நம்பி செயல்படக்கூடாது என சொல்லிக்கொண்டார்.

ஒரு புத்தகத்தை எடுத்து காண்பித்தார் வயதனாவர். இந்த புத்தகமும் சரி எந்த புத்தகமும் சரி எல்லாம் இந்த உலகத்தில் ஒரே விசயத்தைத் தான் திரும்ப திரும்பச் சொல்கிறது. இந்த புத்தகம் எப்படி மனிதர்கள் தங்களது சொந்த முடிவினை எடுக்க இயலாமல் தவிக்கிறார்கள் என்பதை சொல்கிறது. மேலும் அவர்கள் இந்த உலகத்தில் இதுதான் பெரிய பொய் எனவும் சொல்லிக்கொள்கிறார்கள் என்றார் அந்த வயதானவர். எது மிகப்பெரிய பொய் என்றார் கோவிந்தசாமி.

நமது வாழ்க்கையில் சில நேரங்களில் நம்மால் நமக்கு ஏற்படுவதை கட்டுப்பாடுக்குள் கொண்டுவர இயலுவதில்லை, நமது வாழ்க்கை விதியால் நடத்தபடுகிறது என நினைக்கிறோம். இதுதான் உலகின் மிகப்பெரிய பொய் என சொன்னதும் கோவிந்தசாமி இடை மறித்து அது எப்பொழுதும் எனக்கு நடக்கவில்லை. என்னை டாக்டராக வேண்டும் என வீட்டில் சொன்னபோது வியாபாரியாகத்தான் ஆவேன் என அடம்பிடித்து வியாபாரம் செய்தேன்.

பணம் முக்கியமாக இருந்தது உனக்கு? இப்பொழுது எனது வேலைக்கு உன்னிடம் தரக்கூட பணம் இல்லை. நீ இப்போது புதையலை தேடி பயணித்துக்க்கொண்டு இருக்கிறாய். இந்த உலகின் ஆத்மா மனிதர்களின் சந்தோசத்திலும், துக்கத்திலும், பொறாமையிலும் இருக்கிறது. ஒருவருடைய வாழ்வின் முடிவு அவருடைய செயல்படும் தன்மையில் இருக்கிறது. ஒரு விசயத்தை உண்மையிலே அடைய நினைத்தால் இந்த மொத்த உலகமும் நீ அதை அடைய உதவி செய்யும். கொஞ்சம் நீ நினைத்து பார், நீ இந்த புதையலை அடைய வேண்டும் என நினைத்து கிளம்பி வந்தாய். வழியில் உனக்கு தெரியாதவர்கள் எல்லாம் உதவி செய்தார்கள். இத்தனை தூரம் வந்துவிட்டு இதை கைவிடப்போவதாக சொல்கிறாயே என்றார் வயதானவர். கோவிந்தசாமி மிகவும் யோசித்தார்.

நான் கூட இப்படியொரு வாழ்க்கை எடுக்கும் முன்னர் சிரமம் அடைந்தேன். ஆனால் எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழ்ந்து இந்த வழியை எடுத்துக் கொண்டேன் என்றார் மேலும். இதை ஏன் எனக்கு சொல்கிறீர்கள் என்றார் கோவிந்தசாமி. அதற்கு அந்த வயதானவர் நீ பணத்தை சேர்த்து எப்படியாவது காசியை போய் சேரு, உனது விருப்பத்தை தொலைத்து விடாதே. சிறுவயதிலே மனிதர்கள் தான் எதற்கு இந்த உலகில் இருக்கிறோம் என்பதை கசப்புடன் தெரிந்து கொள்கிறார்கள். கசப்பாக இருப்பதால் அதனை எளிதாக தொலைத்து விடுகிறார்கள். நீ இத்தனை வருடம் முன்னரே உனது விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்து இருக்கலாமே, ஆனால் அது அப்படித்தான். இப்போது விடவேண்டாம். நான் அதிகம் சென்று வாங்கும் ஒருவர் கடை இருக்கிறது. அங்கு வேலை செய்து பணம் சம்பாதித்துக் கொண்டு செல், பணம் யாரும் சும்மா தரமாட்டார்கள் என்றார்.

இப்படித்தான் பணம் இல்லாதபோது நான் மீன் வியாபரம் செய்தேன். அதிக பணம் கிடைத்தது வழியில் பறிபோய்விட்டது என்றார் கோவிந்தசாமி. ஆமாம் அதுதான் தொடக்கத்தில் கிடைக்கும் அதிர்ஷ்டம். உனது கனவினை நிறைவேற்ற இப்படி வாய்ப்புகள் முதன்முதலில் வெற்றியாகவே அமையும் என்றார் அந்த வயதானவர். விடைபெற்றுக்கொண்ட கோவிந்தசாமி அவர் சொன்ன கடையில் வேலையாளாக சேர்ந்தார். அந்த வேலை அவருக்குப் பிடித்தமானதாக இல்லை.

(தொடரும்)

1 comment:

Raju said...

விறுவிறுப்ப போகுது ராதா ஸார்.
அடுத்த பகுதியலாவது புதையல் கிடைக்கும அவருக்கு.காத்திருக்கின்றேன்.