Sunday, 2 August 2009

தேடினால் கிடைத்துவிடும் - 3

தனது கவனக்குறைவினை நினைத்து வேதனையுற்றார் கோவிந்தசாமி. பேருந்தில் மீண்டும் ஏறிச்சென்று பணத்தைத் தேடினார். அவரை இறங்கச் சொல்லி அவசரப்படுத்தினார்கள். தனது கனவும் ஆசையும் நிறைவேறாமல் போய்விடுமே எனும் கவலைதான் அவருக்கு மிகவும் அதிகமாக இருந்தது. பணம் அங்கே சிதறியிருக்கவில்லை. பணம்தனை எடுத்தவரை இனிமேல் இதுபோன்று தவறுகள் செய்யாமல் இருக்க வைத்திடு என சிவனை வேண்டிக்கொண்டார் கோவிந்தசாமி. சிக்கனமாக வாழ்ந்த அவருக்கு இப்படி பணம் தொலைந்தது மிகவும் கவலையாக இருந்தாலும் ஒருவரின் தேவைக்கு அது உதவுமே என நினைத்துக்கொண்டார்.

அங்கிருந்தவர்கள் என்ன ஆனது எனக் கேட்டார்கள். அப்பொழுது கோவிந்தசாமி தனது பணம் தொலைந்த விசயத்தைக் கூறினார். அனைவரும் பரிதாபத்துடன் பார்த்தார்கள். காசிக்குச் சென்றே தீர்வது என மன உறுதி கொண்டார். இப்பொழுது எப்படி பணத்தைச் சேர்ப்பது என யோசித்தார். மகன்களையோ மகளையோத் தொடர்பு கொள்ள மனம் இடம் தரவில்லை. எப்படியும் என்னை காசியில் கொண்டு சேர்த்துவிடு என சிவனை வேண்டிக்கொண்டு சென்னையிலிருந்து நடக்கலானார்.

வழியில் இருந்த குளம் ஒன்றில் குளித்தார். நடந்து சென்று கொண்டே இருக்கையில் வழியில் கிராமம் ஒன்றை அடைந்தார். இவரை ஒருவர் விசாரித்தார். இவர் தனது நிலையையும், காசிக்குச் செல்வதையும் சொல்லவே அவர் மிகவும் உற்சாகம் அடைந்தார். தனது பெயர் முத்துச்சாமி என அறிமுகப்படுத்திக்கொண்ட அவர் கோவிந்தசாமியை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். தனது மனைவியை அழைத்து இவருக்குச் சாப்பாடு போடச் சொன்னார். கோவிந்தசாமிக்குப் புரியாமல் இருந்தது. வேண்டாம் என மறுக்க மனம் இடம் தரவில்லை. நல்ல பசியாகவும் களைப்பாகவும் இருந்தது. உணவு அருந்திய பின்னர் முத்துச்சாமி இவரை ஓய்வெடுக்கச் சொன்னார். கோவிந்தசாமியும் அந்த வீட்டில் ஓய்வு எடுத்தார்.

பின்னர் முத்துச்சாமி, கோவிந்தசாமியிடம் தனது தந்தையின் அஸ்தியை வைத்திருப்பதாகவும் அதனை கங்கையில் கரைக்க வேண்டும் எனும் ஆசையை அவரது தந்தை சொன்னதாகவும், தனக்கு நேரமில்லாத காரணத்தாலும், பிற காரணங்களால் செல்ல இயலாமல் இருப்பதாகவும் அதனால் அதைக்கொண்டு சென்று கங்கையில் கரைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். கோவிந்தசாமி சரியென ஒப்புக்கொண்டார். முத்துச்சாமி கொஞ்சம் பணம்தனை கோவிந்தசாமியிடம் கொடுத்தார். மறுக்காமல் கோவிந்தசாமி வாங்கிக்கொண்டார். ஆனால் பணம் வாங்கியதற்கான ஆதாரம் ஒன்றை எழுதிக்கொடுத்தார். முத்துச்சாமி வாங்கிட மறுத்தார். ஆனால் கோவிந்தசாமி தனது மகன் ஒருவரின் முகவரியைக் கொடுத்து நான் திரும்பி வராமல் போனால் அவரது மகனிடம் இந்த பணத்தைப் பெற்றுக்கொள்ளச் சொன்னார். முத்துச்சாமி தனது தந்தையின் ஆசை நிறைவேற வேண்டும் என்பதிலே அப்பொழுது குறியாய் இருந்தார், இருப்பினும் சரியென வாங்கி வைத்துக்கொண்டார்.

அந்த கிராமத்தில் ஒருநாள் தங்கி இருந்தார். ஊர் மிகவும் அழகாக இருந்தது. மரங்கள் செடிகள் கொடிகள் என இயற்கை வளத்துடனும் கிராம மக்கள் சுறுசுறுப்புடன் வேலைப்பார்த்து கொண்டிருந்ததைப் பார்த்தபோது கோடியலூர் ஞாபகத்திற்கு வந்தது. வசந்தராஜ் தனது வீட்டில் சென்று குடியேறி இருக்க வேண்டும் என நினைத்துக்கொண்டார். ஆனால் அவரது நினைவின்படி இல்லாமல் வீட்டைச் சென்று சுத்தப்படுத்துவதோடு நிறுத்திக்கொண்டார் வசந்தராஜ். தோட்டத்தில் விளைந்தவைகளால் வந்த பணம், தோட்டத்திற்குச் செலவாகும் பணம் என பெரிய நோட்டினில் எழுதி வைக்க ஆரம்பித்தார் வசந்தராஜ். சுப்புராஜிடம் மிகவும் கண்டிப்புடன் இதைச் செய்ய வேண்டும் என சொல்லி இருந்தார். முத்துச்சாமி தனது தோட்டம்தனை எல்லாம் இவருக்குச் சுற்றிக்காட்டினார். கோவிந்தசாமி தான் ஊரில் செய்ததை இவரிடம் சொல்லவில்லை.

விடைபெற்றுக்கொண்டு பயணமானார் கோவிந்தசாமி. பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தபோது இவருடன் ஒருவர் பேச்சுக்கொடுத்தார். அவர் ஒரு பெரிய பணக்காரர் எனவும் சொந்தங்கள் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் கூறினார். இப்பொழுது விஜயவாடாவில் உள்ள நண்பரைச் சந்தித்து உதவி கேட்கப்போவதாக சொன்னவர் தன்னிடம் பணம் இல்லாததால் யாராவது உதவமாட்டார்களா என எதிர்பார்த்து சில நாட்களாக இங்கே வந்து போவதாக சொன்னார். அவர் பேசிய தெலுங்கு அரைகுறையாகப் புரிந்தது கோவிந்தசாமிக்கு. கோவிந்தசாமி அவரை தான் அழைத்துச் செல்வதாக சொல்லி விஜயவாடா செல்லும் பேருந்தில் பயணமானார்.

கோவிந்தசாமிக்கு அவர் சொன்ன பேச்சில் இருந்து சுப்புராஜ் ஞாபகம் வந்தது. அனைத்தையும் எழுதிக்கொடுத்த பின் அதனை அவர்கள் திரும்பத் தருவார்கள் எனும் உத்தரவாதம் எதுவும் இல்லை என எண்ணம் வந்தது. அதே வேளையில் கஷ்டப்படும் வசந்தராஜ் குடும்பம் நன்றாக இருக்கட்டும் எனும் எண்ணம் மேலோங்கி எழுந்தது. என்ன யோசனை என கேட்ட அவரிடம் இப்பொழுதும் கோவிந்தசாமி தனது செயலை சொல்லவில்லை. புதையல் பற்றி சொன்னார். அதற்கு அவர் பலமாகச் சிரித்தார். இப்படி இந்த வயதில் புதையலைத் தேடி என்ன செய்யப்போகிறீர்கள்? அதுவும் கனவினை நம்பி என்றார். கோவிந்தசாமி அதற்கு புதையல் மட்டுமே எனது ஆசையில்லை. காசியை எப்படியாவதுப் பார்த்துவிட வேண்டும் எனும் ஆசையும் கூட என்றார்.

விஜயவாடா வந்தது. பேருந்தில் இருந்து இறங்கிய அவர் நன்றி சொல்லிக்கொண்டு தனது நண்பரின் முகவரியை இவரிடம் தந்துவிட்டு கொஞ்சம் பணம் வாங்கிக்கொண்டு கிளம்பினார். கோவிந்தசாமி ஒரு விடுதிக்குச் சென்றார். அங்கே அன்று ஓய்வு எடுத்தார். தன்னிடமிருந்த பணம் குறையத் தொடங்கி இருந்தது. இனிமேல் பணம் சேர்க்காமல் காசிக்குச் செல்வது இயலாது என நினைத்தவருக்கு ஒரு யோசனை வந்தது.

(தொடரும்)

2 comments:

Raju said...

என்ன யோசனை அது..?
நான்காம் பகுதி எப்போ..?

Radhakrishnan said...

அந்த யோசனையை இப்பொழுது அறிந்து கொள்ளலாம் டக்ளஸ் அவர்களே. மிக்க நன்றி.