Thursday, 30 July 2009

இனிய உறவுகள்

'அம்மா ! அம்மா...........'
அழுகையுடன் ஓடி வந்தான் பத்து வயது சிறுவன் அன்பு.

அழுகையை கண்ட அம்மா
'என்ன......... என்ன ஆச்சு '
என அடுப்பங்களையில் இருந்து ஓடி வந்தாள்.

'என்னோட காரை எடுத்துட்டு சீராம் தர மாட்றான்மா'

'ஓ.......
உனக்கும் அவனுக்கும் மூணு நாளா இதே வேளையாப் போச்சு.
இதுக்கா அழுவாங்க
இரு வாங்கி தரேன்'

'காரை தாப்பா'
அம்மா எட்டு வயது சீராமிடம் கேட்க
தர மனம் இல்லாவிட்டாலும்
புரிந்து கொண்டு அவனும் தந்துவிட்டான்.

காரை பெற்றுக் கொண்ட சந்தோசத்தில் அன்புவின் அழுகை மறந்தே போனது.

சீராம் வெகு நேரமாக ஏக்கத்தோடு அன்புவின் காரை பார்த்துக் கொண்டே இருந்தான்.

ஆனாலும் இந்த முறை சிறீராமுக்கு அன்புவின் காரை பறிக்கத் தோணவில்லை.

மாறாக இம்முறை அன்புவிடம் சிறீராம்
'நான் கொஞ்சம் விளையாடிட்டு தரட்டா'
என்று கேட்டான்.

'இந்தா
அஞ்சு நிமிசத்தில தந்துரனும்'

சரியென வாங்கி விளையாடிய அன்பு
ஐந்து நிமிடம் முன்னராகவே சிறீராமின் காரை திருப்பிக் கொடுத்து விட்டு
வீட்டுக்கு போவதாக கூறி வந்துவிட்டான்.

'அம்மா எதுக்குமா சீராம் என் காரையே பறிக்கிறான்?'

அன்புவின் மனதுக்குள் எழுந்த வினாவுக்கு
அவன் அம்மாவிடம் விடை தேடினான்.

'அவனுக்கு அவங்க வீட்டுல கார் வாங்கி தர காசு இல்லப்பா'

அன்பு மெளனமாக திரும்பி சிறீராம் சென்ற திசையை நோக்கி பார்வையை செலுத்தினான்.

அவன் பார்வையில் சிறீராம் தென்படவில்லை.

மனதுக்குள் எதையோ நினைத்தவனாய்
அவன் அறைக்குள் நுழைந்தான்.

தனது வீட்டில் இருந்த தேவைக்கு அதிகமான நல்ல கார்கள் எல்லாம் அவன் கண்ணில் பட்டது.

தனது தேவைக்கு அதிகமான கார்களையும் , கூடவே தான் படித்த மூன்றாம் வகுப்பு புத்தகங்களையும் கையிலெடுத்துக் கொண்டு வெளியேறினான்.

'எங்க கடையில போடப் போறியா'

'இல்லம்மா சீராமுக்கு தரப் போறேன்'
என்றவாறு சிறீராமின் குடிசையை நோக்கி நடந்தான்.

அன்புவின் அம்மாவின் மனது
பேருக்கேத்த புள்ள என்று பெருமைப்பட்டது.

அவளும் அவனோடு சேர்ந்தே நடந்தாள்.
அன்பு அம்மாவோடு சிறீராமை தேடிச் செல்லும் போது
சீராம் தன் குடிசை வீட்டின் முற்றத்தில் அம்மாவுடன் சேர்ந்து முற்றத்து மணலில் வீடு கட்டி விளையாடிக் கொண்டு இருந்தான்.

அன்பு
அம்மாவின் உதவியுடன் புத்தகங்கள் கார்கள் எல்லாம் கொண்டு வந்து சீராமிடம் தந்தான்.

அவற்றில் புத்தகங்களை மட்டும் எடுத்துக் கொண்டான் சீராம்.

'கார் வேணாம்?'

ஊகும்!
வேண்டாம் என்று தலையாட்டினான்.

வீட்டில் இருந்த மோர் கொண்டு வந்து அவர்களுக்கு தந்தார் சீராம் அம்மா.

அம்மாவுடன் திரும்பும் போது தான் கொண்டு சென்ற கார்களுடனே திரும்பினான் அன்பு.

மறுநாள் இருவரும் சேர்ந்தே விளையாடினார்கள்.

இம்முறை சீராமுக்கும் சேர்த்து கார் எடுத்துச் சென்றான் அன்பு.

முற்றும்

5 comments:

GEETHA ACHAL said...

மிகவும் அருமையாக இருக்கின்றது..குழந்தைக்கு எப்படி பக்குவமாக சொல்லனமோ அப்படியே சொல்லி இருக்கிங்க....

குரும்பையூர் மூர்த்தி said...

மிகவும் நன்றாக இருக்கிறது..

சதங்கா (Sathanga) said...

சிறுவர்களுக்கு மட்டுமல்ல நமக்கு நல்ல சிந்தனை ஊட்டும் கதை.

கவிக்கிழவன் said...

கதை நன்றாகச் செல்கிறதுநன்றாக இருக்கிறதுநல்வாழ்த்துகள்

Radhakrishnan said...

அனைவருக்கும் மிக்க நன்றி. இந்த சிறுகதை ஊடகவியலாளர் அஜீவன் என்பவ்ரால் நான் முதலில் எழுத பின்னர் திருத்தப்பட்டது. இணையத்தில் முதலில் எழுதிய சிறுகதை எனலாம்.