Thursday, 2 July 2009

ஒரு வலைப்பூவில் பதிவராக இருப்பது என்பது?!

தமிழில் எழுத வேண்டும் எனும் ஆர்வமும், எழும் சிந்தனைகளை எழுத வேண்டும் என எண்ணிய போது அடித்தளம் எனக்கு தந்தது முத்தமிழ்மன்றம் எனும் வலைத்தளம்.

பல எண்ணங்களை கதைகளாக, கட்டுரைகளாக மூன்று ஆண்டுகளுக்கு மேலாக அங்கே எழுதி வருவதுண்டு. எனக்குத் தெரிந்த நண்பர்கள் வலைப்பூ ஒன்றை ஆரம்பியுங்கள் என்று சொல்ல 'அதெல்லாம் எதற்கு' என்றே வேண்டாம் என இருந்தேன். மேலும் தனியாக வலைப்பூ வைத்து எழுதும் அளவுக்கு எல்லாம் சிந்தனையும் இல்லை, மேலும் எழுதும் எழுத்தில் அலங்காரம் பூசும் அளவுக்கு தமிழ் இலக்கியவாதியும் நான் இல்லை என்றே இருந்தேன். பின்னர் எனது எழுத்துக்களையெல்லாம் சேகரிக்கும் தளமாக பயன்படுத்தலாம் என்றே வலைப்பூ ஆரம்பித்தேன். அவ்வப்போது சேகரிப்பதும், அதிகமாக வலைத்தளத்தில் எழுதுவதுமாகப் பயணம் போய்க்கொண்டிருந்தது.

அந்த வலைத்தளத்தில் எழுதிய போது ஏற்படும் சிறு சிறு சலசலப்புகள் கண்டு 'அட என்ன இது' என்றுதான் தோன்றும். ஆனால் சில தினங்களாக வலைப்பூக்களுக்கு பின்னூட்டம் எழுதுவதில் கவனம் செலுத்த இங்கே நடக்கும் பல விசயங்களைப் பார்த்ததும் 'அட என்னதான் இது' என்றே தோணியது.

நடக்கும் விசயங்களைப் படிக்கும் போது அதற்கு மறுமொழி எழுதலாம் என எண்ணியபோது 'கருத்து கந்தசாமி' என்கிற பட்டங்களும் வழங்கப்படுகின்றன என்பதை அறிந்ததும் மிகவும் கவனத்துடனே செயல்பட வேண்டும் எனத் தெரிய வந்தது.

ஒரு நூலை வெளியிட்டுவிட்டு அதற்குரிய விமர்சனங்களையெல்லாம் பார்த்துப் பழகிய பின்னர் இப்போதுதான் உண்மையான எழுத்துலகம் எப்படியிருக்கும் என்பது தெரிகிறது. நல்லவேளை எவருமே எனது நூலை வாசித்து இருக்கமாட்டார்கள் போல என்கிற ஒருவித நிம்மதியும் இருக்கிறது.

தங்களது எண்ணங்களை வெளியிட உதவியாக இருக்கும் இந்த வலைப்பூவில் இடப்படும் இடுகைகளுக்குக் கொடுக்கப்படும் விலை மிகவும் அதிகமாகவும் இருக்கக் கூடும், எவரின் கவனத்திலும் வராமலும் போகக் கூடும்.

சேராத இடந்தனில் சேர வேண்டாம்
போகாத இடந்தனில் போக வேண்டாம்
போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்

என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டு இந்த வலைப்பூவில் சுதந்திரமாக எவரது பார்வையிலும் தவறுதலாக பட்டுவிடாமல் தொடர்ந்து பயணிக்கிறேன்.

மிகவும் நன்றி.

18 comments:

கோவி.கண்ணன் said...

//தங்களது எண்ணங்களை வெளியிட உதவியாக இருக்கும் இந்த வலைப்பூவில் இடப்படும் இடுகைகளுக்குக் கொடுக்கப்படும் விலை மிகவும் அதிகமாகவும் இருக்கக் கூடும், எவரின் கவனத்திலும் வராமலும் போகக் கூடும். //

விலை என்றால் நாம அதில் செலவிடும் நேரம் தான். சில சமயம் பலரும் படிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்படுன் எழுதப்படும் கட்டுரைகள் கவனம் பெறாமல் போவதுண்டு.

மற்றபடி எழுத்துப் பயிற்சிக்கான சிறந்த களம் வலைப்பதிவு.

மயாதி said...

இங்கே இருப்பவர்கள் எல்லோரும் எழுதுகிறார்கள், ஆனால எல்லோரும் எழுத்தாளர்களா( நான் உட்பட)?
இன்னும் எனக்குச் சந்தேகம், போகப் போக நீங்களும் உணர்வீர்கள்...


வாழ்த்துகள்.

சிநேகிதன் அக்பர் said...

நல்ல எழுத்தை எல்லோரும் விரும்புவார்கள்.

மற்றவர்கள் விஷயத்தில் கருத்துசொல்ல தேவைஇல்லை ஏனெனில் எல்லாம் தெரிந்தவர்களே இங்கு சண்டை இடுகிறார்கள்.

நல்ல எழுத்துக்கள் வரவரத்தான் மாற்றம் ஏற்படும்.

வந்தியத்தேவன் said...

நீங்கள் எழுதியதை ஒருமுறை மறுவாசிப்புச் செய்யுங்கள் நிறைய வித்தியாசம் உணர்வீர்கள். சிலவற்றை நானா எழுதினேன் என்ற ஆச்சரியமும் சிலவற்றில் தவறு இருந்தால் இப்படியெல்லாம் எழுதியிருக்கிறேனா என்ற எண்ணமும் வரும்.

Thekkikattan|தெகா said...

:-) அய்யா வாங்க! இது ஒரு சிறந்த தளம் பல வகையான மீன்கள் புழங்கும் ஒரு கடல்.... இப்படியும் யோசிக்க முடியுமாவென பல தளங்களில் சிந்திக்க வைக்கும் "உடனடி தேநீர்" கடை.

நீங்களும் பருகி மகிழுங்கள்! தங்களின் நூல்கள் இன்னும் வாசிக்கும் வாய்ப்புகிட்டவில்லை. விரைவில் செஞ்சுடுவோம்.

பி.கு: Please uncheck the pop up option in your template, sir!

Radhakrishnan said...

//விலை என்றால் நாம அதில் செலவிடும் நேரம் தான். சில சமயம் பலரும் படிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்படுன் எழுதப்படும் கட்டுரைகள் கவனம் பெறாமல் போவதுண்டு.

மற்றபடி எழுத்துப் பயிற்சிக்கான சிறந்த களம் வலைப்பதிவு//

உண்மைதான் கோவியாரே. பல நேரங்களில் பல நல்ல விசயங்களைப் படிப்பதற்குக் கூட நேரம் இருப்பதில்லை. நீங்கள் சொல்வது போல எழுத்துப் பயிற்சிக்கு மிகவும் துணையாக இருக்கும். மிக்க நன்றி.

Radhakrishnan said...

//இங்கே இருப்பவர்கள் எல்லோரும் எழுதுகிறார்கள், ஆனால எல்லோரும் எழுத்தாளர்களா( நான் உட்பட)?
இன்னும் எனக்குச் சந்தேகம், போகப் போக நீங்களும் உணர்வீர்கள்...


வாழ்த்துகள்.//

நான் படித்தவரை பலருடைய பதிவுகள் மிகவும் தரம் வாய்ந்தவையாகவே எனது கண்களுக்குப் பட்டன. விமர்சித்து எழுதப்பட்ட ஒரு சில பதிவுகளில் இருந்த சில வார்த்தைகளைத் தவிர. எழுதுபவர்கள் மிகவும் கோர்வையாகவும், நேர்த்தியாகவும் எழுதுகிறார்கள்.

எழுத்து அழகிற்கு இல்லாமல், எண்ண அழகினை வைத்துப் பார்க்கும்போது ஒவ்வொருடைய பதிவும் மிகவும் சிறப்பே.

எழுத்தாளர்களாக வேண்டும் என்பதில்லை, சொல்லும் கருத்துக்கள் மூலம் ஒரு தாக்கம் ஏற்படுத்தினாலே அதுவே எழுத்துக்கு ஒரு வெற்றியாக அமைந்துவிடுகிறது.

மிக்க நன்றி மயாதி.

Radhakrishnan said...

//நல்ல எழுத்தை எல்லோரும் விரும்புவார்கள்.

மற்றவர்கள் விஷயத்தில் கருத்துசொல்ல தேவைஇல்லை ஏனெனில் எல்லாம் தெரிந்தவர்களே இங்கு சண்டை இடுகிறார்கள்.

நல்ல எழுத்துக்கள் வரவரத்தான் மாற்றம் ஏற்படும்.//

மிகவும் சரியாகச் சொன்னீர்கள். நிச்சயம் மாற்றங்கள் நிகழும் என்றே பலருடைய எழுத்துக்கள் இயங்கி வருகின்றன. மிக்க நன்றி அக்பர்.

Radhakrishnan said...

//நீங்கள் எழுதியதை ஒருமுறை மறுவாசிப்புச் செய்யுங்கள் நிறைய வித்தியாசம் உணர்வீர்கள். சிலவற்றை நானா எழுதினேன் என்ற ஆச்சரியமும் சிலவற்றில் தவறு இருந்தால் இப்படியெல்லாம் எழுதியிருக்கிறேனா என்ற எண்ணமும் வரும்//

முற்றிலும் உண்மை. பலமுறை அந்த அனுபவங்கள் எனக்கு நேர்ந்தது உண்டு, ஆனால் அந்த நேரத்துக்கு அந்த விசயம் சரியாகவேப் பட்டதாகத் தோன்றும். மிக்க நன்றி வந்தியத்தேவன்.

Radhakrishnan said...

//:-) அய்யா வாங்க! இது ஒரு சிறந்த தளம் பல வகையான மீன்கள் புழங்கும் ஒரு கடல்.... இப்படியும் யோசிக்க முடியுமாவென பல தளங்களில் சிந்திக்க வைக்கும் "உடனடி தேநீர்" கடை.

நீங்களும் பருகி மகிழுங்கள்! தங்களின் நூல்கள் இன்னும் வாசிக்கும் வாய்ப்புகிட்டவில்லை. விரைவில் செஞ்சுடுவோம்.

பி.கு: Please uncheck the pop up option in your template, sir!//

உண்மைதான் தெகா அவர்களே. இன்னும் ஏராளமாக நான் படிக்க வேண்டும். தங்களின் விமர்சனத்தை நிச்சயம் அப்படியே ஏற்றுக்கொள்வேன், உள்ளதை உள்ளவாறே நீங்கள் தற்போது எழுதி வருவதைப் போல எனக்குத் தெரிவியுங்கள்.

மறுமொழி வசதியை தங்கள் வேண்டுகோளின்படி சரி செய்து விட்டேன். இது மிகவும் வசதியாக இருக்கிறது. மிக்க நன்றி.

ஷங்கி said...

”சேராத இடந்தனில் சேர வேண்டாம்
போகாத இடந்தனில் போக வேண்டாம்
போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்”
மெத்தச் சரி. நம்ம வேலையை நாம பார்க்க அவங்க வேலையை அவங்க பார்க்கட்டும்!

Radhakrishnan said...

//சங்கா said...
”சேராத இடந்தனில் சேர வேண்டாம்
போகாத இடந்தனில் போக வேண்டாம்
போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்”
மெத்தச் சரி. நம்ம வேலையை நாம பார்க்க அவங்க வேலையை அவங்க பார்க்கட்டும்!//

பல நேரங்களில் நாம் அவ்வாறு இருக்க இயலுவதில்லை. நம்மை சமுதாயச் சீர்த்திருத்தவாதிகளாக காட்டிக்கொள்ள முற்படும்போது ஏற்படும் பிரச்சினைகளே அவை. மேலும் தனிமனிதனின் உணர்வுகளைத் தூண்டும் நடைபெறும் விசயங்கள் சிலருக்கு வேடிக்கையாக இருக்கின்றன, பலருக்கு வேதனையாக இருக்கின்றன.

மிக்க நன்றி.

யாரோ ஒருவர் said...

உங்க பதிவு உங்களுக்கே பல நேரங்களில் ஆச்சரியத்தை தந்திருக்கலாம்.இது தான் உங்கள் எழுத்து திறமையின் ஆரம்பம்.நம் பதிவையும் பலர் படிக்கிறார்கள்,என பார்க்கும்போது,ந்ம்மையுன் இந்த ஏழுத்துலகு வரவேற்ககிறது,என்பது தெளிவாகத் தெரிகிறது.
தொடர்ந்து எழுதுங்க்கள்,வாழ்த்துக்கள்

Radhakrishnan said...

மிக்க நன்றி திருமதி.ஜெயசீலன் அவர்களே.

பிரபாகர் said...

//என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டு இந்த வலைப்பூவில் சுதந்திரமாக எவரது பார்வையிலும் தவறுதலாக பட்டுவிடாமல் தொடர்ந்து பயணிக்கிறேன்//

உயர்ந்த நோக்கம். நிச்சயம் தங்களுக்கு இடையூறு இல்லத பயனமாக இருக்கும்...

பிரபாகர்.

கிரி said...

//நடக்கும் விசயங்களைப் படிக்கும் போது அதற்கு மறுமொழி எழுதலாம் என எண்ணியபோது 'கருத்து கந்தசாமி' என்கிற பட்டங்களும் வழங்கப்படுகின்றன என்பதை அறிந்ததும் மிகவும் கவனத்துடனே செயல்பட வேண்டும் எனத் தெரிய வந்தது.//

எனக்கும் இது நேர்ந்தது (பட்டம் கிடைக்கவில்லை :-D) பிறகு தான் அவசியமில்லாமல் எங்கும் சென்று என் கருத்துக்களை வலியுறுத்துவதில்லை, என் பதிவோடு நிறுத்திக்கொள்கிறேன்

//சேராத இடந்தனில் சேர வேண்டாம்
போகாத இடந்தனில் போக வேண்டாம்
போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்//

ரொம்ப நல்ல விஷயம்..இதை நான் தாறுமாறாக பின்பற்றுகிறேன் :-)

Radhakrishnan said...

மிக்க நன்றி பிரபாகர் அவர்களே. இடையூறு ஏற்படினும் பயணம் தொடர்ந்திட நல்ல நண்பர்கள் எங்கும் நிறைந்து இருக்கிறார்கள்.

Radhakrishnan said...

மிக்க நன்றி கிரி அவர்களே. ஆனால் சில நேரங்களில் எழுத வேண்டிய நிர்பந்தத்தை நாமே ஏற்படுத்திக்கொள்வதுண்டு. நல்ல கருத்துக்களை வரவேற்கும் நல்ல உள்ளங்கள் எங்கும் உண்டு.