8. அமைதியாக எல்லாவற்றையும் அனுசரித்து போவது நல்லதா? கெட்டதா?
நல்லதும் கெட்டதும் ஒவ்வொரு மனிதருடைய சூழ்நிலைப் பொருத்த மனநிலையைப் பொருத்து அமைந்துவிடுகிறது எனலாம். அமைதியாக எல்லாவற்றையும் அனுசரித்து போவது என்பது பேச்சளவில் சரியாகப்படலாம் ஆனால் நல்லதாகப்படாது. அதே நேரத்தில் தீயதாகவும் வந்து விடியாது.
எது அமைதி என்பதை முதலில் நாம் தெளிவுப்படுத்திக் கொள்வது நமக்கு மிகவும் நல்லது. ஒரு செயல் நடக்கிறது, அது பிடித்தமானதில்லை என வைத்துக் கொள்வோம் அப்பொழுது எதுவும் செய்ய முடியாத பட்சத்தில் முடங்கி கிடப்பவர் கொள்ளும் அமைதியை அமைதியாக கருதமுடியாது. பிடிக்கவில்லை எனும்பட்சத்தில் அதனை மாற்ற முடியும் என்ற சந்தர்ப்பம் இருந்தும் மாற்ற வேண்டாம் என கருத்தில் கொண்டு அமைதியுடன் அனுசரித்து செல்வதுதான் உண்மையில் அமைதி. ஆனால் அமைதி கொள்வது போல் இருந்துவிட்டு இதயம் அந்த பிடிக்காத விசயத்தை பற்றி இடி இடியென இடித்துக் கொண்டு இருந்தால் அந்த உண்மை அமைதி வெளிப்பார்வைக்கு மட்டும்தான் என்றாகிவிடும். ஆக அதுவும் உண்மையான அமைதி இல்லை என்றாகிவிடுகிறது. ஆதலால் அமைதியானது உள்ளத்து எண்ணங்களிலும், செய்யும் செயல்களிலும் ஒன்றாய் இருப்பது. நம்மில் எத்தனை பேருக்கு அப்படி இருக்கிறது? எனக்கு இருக்கிறது என நாம் குடுகுடுப்பைக்காரன் போல் நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது என நம்பிக்கையோடு சொல்லிக்கொள்ளலாம்.
இதனையே வேறொரு கோணத்தில் பார்ப்போம், அமைதியாக அனுசரித்து போவது குறித்து மகாத்மா காந்தியடிகளுக்கு தென் ஆப்பிரிக்கா பாடம் கற்றுத்தராமல் இருந்து இருந்தால் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து இருக்காது எனலாம். ஆனால் அந்த சுதந்திரத்தால் பாதிக்கு பாதி பேர் பிரிட்டன் ஆட்சி இருந்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருப்போம் என பேசுவதை உங்கள் காதுகள் கேட்டு இருக்கும், அதே நேரத்தில் உண்மையான சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை என மேடைப்பேச்சுக்கள் திண்ணைப்பேச்சுக்கள் சுதந்திரம்தனை கேலிக்கூத்தாக்கிக் கொண்டு இருப்பதை காணலாம். எனவே எதை அனுசரித்துப் போவது என்பதை முக்கியமாக ஒரு செயலாக எடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கையில் எதற்கு நீங்கள் முன்னுரிமை தந்து வைத்து இருக்கிறீர்கள் என்பதை குறித்துக் கொள்ளுங்கள், அந்த கொள்கையானது மிகவும் உறுதிப்பாடுடன் இருக்குமாறு வைத்துக் கொள்ளுங்கள். அந்த முன்னுரிமை செயலுக்கு ஏற்படும் விசயங்கள் குறித்து அனுசரித்துப் போவதைப் பற்றி சிந்தியுங்கள்.
நீங்கள் உங்களை மட்டும் முன்னிலைப்படுத்துபவராக இருந்தால்....
அமைதியாக அனுசரித்துப் போவதால் உங்கள் மனநிலை பாதிக்காத வண்ணம் இருந்தால் அது நல்லது.
அமைதியாக அனுசரித்துப் போவதின் மூலம் உங்கள் மனநிலை பாதிக்கும் எனில் அது கெட்டது.
எல்லாவற்றையும் அமைதியாக அனுசரித்துப் போவது குறித்து உங்கள் மனதினை நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள். ''இதுவும் கடந்து போகும்'' என்ற ஒரு வசனம் சித்தி நாடகத்தொடரில் மிகவும் பிரபலம். அதை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அமைதியாக அனுசரித்துப் போவதில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என உறுதி கொள்ளுங்கள், யாருக்கும் தீங்கிழைக்காத அமைதியாக அனுசரித்துப் போகும் செயல்கள் மட்டுமே நடக்கும்.
No comments:
Post a Comment