Tuesday, 28 July 2009

ஆண்டாளுக்குக் கல்யாணம் - 6 (நிறைவுப் பகுதி)





மாதங்கள் ஓடிக்கொண்டிருந்தது. ஜீன் தெரபிக்காகச் சென்று விசாரித்ததில் ஜீன் தெரபி எல்லாம் செய்ய முடியாது என சொல்லிவிட்டார்கள். இந்த விசயம் தெரிந்தபின்னர் எப்படி கல்யாணம் செய்து வைப்பது என மேலும் கவலைகொண்டனர் பெற்றவர்கள். ஆனால் இவர்கள் இருவரும் மனது மாறவில்லை.

இத்தனை விசயங்கள் நடந்தாலும் கோபாலகிருஷ்ணன் வீட்டுக்குப் பக்கமே வரவே இல்லை. அவனுக்கு அழைப்பு விடுத்தால் மட்டுமே வீட்டுக்கு வந்து செல்வான். அவனை சென்று பார்க்க அவனோ தொலைதூரத்தில் வேலையில் இருந்தான். அவனைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என பெற்றவர்கள் ஒன்றும் தகவல் சொல்லாமல் இருந்தார்கள்.

ஆண்டாள் பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்தாள். ஒருநாள் திடீரென பாலரங்கன் வீட்டிலிருந்து பெண் கேட்டு வந்தார்கள். கோதைநாச்சியாரிடம் அன்று காலையில் கனவு கண்டதாகவும் தான் மணமேடையில் அமர்ந்து இருந்து திருமணம் நடந்ததாக சொல்லி இருந்தாள் ஆண்டாள். அவர்கள் பெண் கேட்டு வந்ததும் மறுக்காமல் சரியென சொன்னார்கள்.

மருத்துவத் துறையில் முன்னேற்றம் ஏற்படும் எனவும் அப்படி ஏற்படாது போனாலும் அதனால் கவலை வேண்டாம் நாங்கள் எப்போதும் சந்தோசமாக வாழ்வோம் என இருவரும் பெற்றோருக்கு உறுதி சொல்லி சந்தோசம் தந்தார்கள். கல்யாணத் தேதி எல்லாம் குறித்தாகிவிட்டது. இனி பத்திரிக்கை எல்லாம் அடிக்க வேண்டும்.

இப்படி திடீரென நடந்தேறிய முடிவு அந்த அக்ரஹாரம் எல்லாம் தெரிய ஆரம்பித்தது. ஆண்டாள் பெரு மகிழ்வு அடைந்தாள். சின்னஞ்சிறு வயதில் தனக்கு கல்யாண விருப்பம் வந்தது கண்டு இன்று இரண்டாம் முறையாக வெட்கப்பட்டாள்.

''சாதி, இனம், மொழி என எத்தனையோ காதலுக்குத் தடையாய் இருந்து வந்ததுண்டு, ஆனால் நோய் தடையாய் ஒருபோதும் வந்தது இல்லை, நமக்கு இந்த நோயும் தடையாய் வந்து நிற்கவில்லை, ஏனெனில் காதலும் ஒரு நோய் தானே'' என்றான் பாலரங்கன். ''காதல் ஒரு நோய் இல்லை'' என சிரித்தாள் ஆண்டாள்.

''குழந்தைப் பெத்துக்கலாம்தானே'' என்றாள் ஆண்டாள். ''அதைப்பத்தி இப்போ ஏன் கவலை, முதல்ல நமக்கு நல்லா கல்யாணம் நடக்கட்டும். உனக்கு ஜோசியத்துல என்னமோ சொன்னாங்க, இந்த நோய் இருக்கிறதால நாம கல்யாணம் பண்ணக்கூடாதுனும் இருக்கு, ஆனா ஒன்னு தெரியுமா? குழந்தைப் பெத்துக்கிறதுக்கு கல்யாணம் இல்லை'' என்றான் பாலரங்கன். ''ஓ அப்படியா?'' என்றாள் ஆண்டாள். ''கவலைப்படாதே நாம குழந்தைப் பெத்துக்குவோம்'' என்றான் பாலரங்கன். ''எனக்கு கல்யாணம் நடந்தாலே போதும்'' எனச் சிரித்தாள் ஆண்டாள். எல்லாம் சந்தோசமாக இருந்தது. கோதைநாச்சியார், நாராயணன் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். உண்மை அன்புக்கு எதுவும் தடையில்லை.

மண்டபம், பத்திரிக்கை எல்லாம் தயாராகிக்கொண்டு இருந்தது. கோபாலகிருஷ்ணனுடன் வேலைப் பார்க்கும் அவனது நண்பன் அந்த தருணத்தில் இரண்டு நாள் விடுமுறையாக ஊருக்கு வந்திருந்தான். ஆண்டாளின் கல்யாண விசயம் கேள்விபட்டான். வேலைக்குத் திரும்பிச் சென்ற அவன் அன்று இரவு கோபாலகிருஷ்ணனை சந்தித்தான்.

''டேய் ஆண்டாளுக்குக் கல்யாணமாம்டா'' என விசயத்தைச் சொன்னான் கோபாலகிருஷ்ணனின் நண்பன்.

''நமக்கு அழைப்பு வைக்காமலாப் போயிருவாங்க'' என்றான் கோபாலகிருஷ்ணன்.

முற்றும்.

2 comments:

கோவி.கண்ணன் said...

கதை முடிந்துவிட்டதா ?

இந்தக் கதையில் நீங்கள் சொல்வதாக நான் நினைப்பது,

1. ஒரு நோய்
2. அதற்காக திருமணம் வேண்டாம் என்று சொல்லாமல் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை தொடரும் இருவர்
3. ஆண்டாள் போல கனவுகளுடன் காதல் மணம் புரியும் பெண், அவள் மனதிற்கேற்றவன் (அந்த பெருமாளைப் போல்) ஒருவன் அமைவது.
4. அவள் ஆண்டாள் என்றால் அவன் பெருமாளின் அவதாரம்
5.காதல் திருமணத்தை ஏற்கும் பெற்றோர்கள்

Radhakrishnan said...

மிகவும் சரியே, அத்துடன் குடும்ப உறவுகள்தனை விட்டுத் தள்ளி நிற்கும் உறவுகள் என ஆண்டாளின் அண்ணன்.

cystic fibrosis நோய் பற்றிய ஒரு விழிப்புணர்வுக் கதை.

carriers ஆக இருந்தாலும் இது போன்ற திருமணங்கள் கூடாதுதான் ஆனால் இருவர் இணைந்து வாழ்வதுதான் வாழ்க்கை, ஒருவேளை பின்னால் இந்த நோய் பற்றித் தெரிந்திருந்தால் பிரிவார்களா என்ன? எனவே 'விவாகரத்து' போன்ற விசயங்களை சாடுதல். 'குழந்தை இல்லையே' என மறுமணத்தையும் சாடுதல் எனவும் கொள்ளலாம்.

கருத்துக்கு மிக்க நன்றி கோவியாரே.