காலப்போக்கில் நம்மைச் செலுத்துவது குறித்து ஒரு அறிஞர் சொன்னதை நினைவில் வைத்துக்கொள்வோம். இறந்த மீன் ஒன்றுதான் தண்ணீர் போன போக்கில் போகும், உயிர் வாழும் மீன் தண்ணீர் செல்லும் திசையை எதிர்த்துக் கூட நீச்சல் போடும் வல்லமை உடையது. அதனதன் பாட்டுக்கு போவோம் என்கிற மனப்பான்மையைக் கைவிட்டு விடுவதன் மூலம் மகிழ்ச்சி நிலையாய் நிற்கும் வாழ்க்கையை வாழ இயலும். அதே வேளையில் உணர்ச்சியுள்ள மனிதனுக்கு எல்லா உணர்வும் பொது என்பதை நினைவில் நிறுத்துவோம்.
நான் உண்மையாக மட்டுமே இருப்பேன் என மொத்த மகிழ்ச்சியையும் தொலைத்துவிட வேண்டாம். பல வேளைகளில் எது உண்மை எது பொய் என எவராலும் அத்தனை எளிதாக நிர்ணயித்துவிட முடிவதில்லை. மொத்தத்தில் பாகுபாடு பார்க்கும் எண்ணத்தினாலேயே மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது எட்டாத ஒன்றாக இருக்கிறது.
விவேகாநந்தரின் கூற்றினை நினைவில் நிறுத்துவோம், ஒரு கல் அதன் அளவில் கல்லே! அதை ஆராய்பவரின் கண்ணுக்குக் கல் பலவித கோணங்களை பெற்றுக்கொள்வது போல் தோற்றமளிக்கிறது. ஒரு பொருளின் தனித்தன்மையை எந்த ஒரு ஆராய்ச்சியினாலும் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியாது, அந்த பொருள் அதன் தனித்தன்மையை ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படும்போதே இழந்துவிடுகிறது.
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு முக்கியம் தேவையோ தேவையற்றதோ விளக்கங்களைச் சொல்லி விளங்கப்படுத்திக்கொண்டிருப்பது அல்ல, விளக்கங்களை ஏற்றுக்கொள்வதுடன் தேவையோ தேவையற்றதோ விசயங்களைச் சலிப்பற்று செய்துகொண்டு வாழ்ந்திருப்பதேயாகும். எப்பொழுது ஒன்றை மறுக்க ஆரம்பிக்கிறோமோ அப்பொழுதே மகிழ்ச்சிக்குத் தடை விதிக்கிறோம். மறுக்காமல் மாற்றுவழி ஒன்றைத் தேடுவதே மகிழ்ச்சிக்கானப் பாதையாகும்.
பச்சோந்தியைக் குறை கூற வேண்டாம். பச்சோந்தியாக உயிரினங்கள் இல்லாது போயிருந்தால் உலகத்தில் ஏற்பட்டச் சூழ்நிலை, காலநிலை மாற்றத்துக்கு ஏற்றவாறு மரபணுக்களில் மாற்றம் ஏற்படுத்தி இன்றைய மனிதன் நிலைக்கு உயிரினங்கள் முன்னேறியிருக்க வாய்ப்பு இல்லை. எல்லா உயிரினங்களும் போராடுவதையே மகிழ்ச்சியாகக் கொண்டிருக்கிறது. போராட்டத்துக்குப் பின்னர் மகிழ்ச்சியாக காலத்தைச் செலவழிக்கிறது. டார்வினின் தத்துவப்படி சூழ்நிலை, சந்தர்ப்பத்திற்கு ஏற்ப வாழும் உயிரினங்களே வாழ்க்கையில் வெற்றி கொள்கின்றன அதன் சந்ததிகள் வளர்ச்சியடைகின்றன.
மகிழ்ச்சியைப் பற்றி எழுதத் தொடங்கி கவலைகளையே முன்னிறுத்திக் கொண்டிருப்பது போன்றுச் செயல்பட்டுக் கொண்டிருந்தால் வாழ்க்கையில் ஏதுங்க மகிழ்ச்சி? எனவேத் தேவையின்றி ஆராய்ந்து கொண்டிருப்பதை விட ஒருவருக்கொருவர் உதவியுடன் இருப்பதே மகிழ்ச்சியான வாழ்க்கையாகக் கருதப்படுகிறது.
2 comments:
சார் ஒரு சின்ன விண்ணப்பம்..
இன்னும் உங்கள் எழுத்து நடையை எளிமை படுத்தினால் சிறப்பாக இருக்கும்.
தங்களின் சிறப்பான ஆலோசனைக்கு எனது பணிவான வணக்கங்கள் கிரி அவர்களே. விரைவில் கற்றுக்கொண்டு எளிமையாக எழுத முயற்சிக்கிறேன். மிக்க நன்றி.
Post a Comment