Saturday, 4 July 2009

நான் சந்தித்த வழக்குகள் - 3

அந்த வாசகம் ''Fortune favours prepared mind''.

ஒருவர், இன்னொருவரையும் அவரது தாயையும் தாக்கியதாக வழக்கு. அந்த வழக்கின் சாரம்சம் இதுதான்.

இரு நண்பர்கள். ஒரே தெருவில் வசித்து வருபவர்கள். ஒருவர் மற்றவரிடம் மிதி வண்டியை வாங்கி இருக்கிறார். மிதி வண்டி சொந்தக்காரர் சில தினங்களுக்கு பின்னர் மிதிவண்டியை திருப்பிக் கேட்டு இருக்கிறார். வாங்கியவர் கொடுக்க மறுக்க சண்டை போட்டு இருக்கிறார்கள். சற்று விசயம் முற்றிப்போக, காவல் அதிகாரிகள் இருவரையும் கைது செய்து கொண்டு சென்று விட்டார்கள். ஆனால் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சொல்ல மறுத்து இருக்கிறார்கள், அதனால் அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

பின்னர் சிறிது தினம் கழித்து மிதி வண்டி வாங்கியவர், மிதிவண்டி கொடுத்தவர் வீட்டு வாசலில் வந்து சத்தம் போட்டு இருக்கிறார். மிதி வண்டி கொடுத்தவர் மாடியிலிருந்து இறங்கி வந்ததும் அவரை மிதி வண்டி சங்கிலியால் அடித்துவிட்டு, தடுக்க வந்தத் தாயையும் அடித்துவிட்டு ஓடிவிட்டார். அடிபட்டதால் மிதி வண்டி கொடுத்தவர் மயங்கி விழுந்து விட்டார். மருத்துவமனையில் பரிசோதித்தபோது இவருக்கு வலிப்பு வரும் என கண்டுபிடித்து இருக்கிறார்கள். அவ்வாறு அடிக்கவில்லை என்று மிதி வண்டி வாங்கியவர் மறுத்து இருக்கிறார். இதுதான் நடந்தது என வழக்கு நடந்து கொண்டிருந்தது.

இந்த வழக்கை கேட்டதும் எனக்கு 'இதெல்லாம் ஒரு வழக்கா' என்றுதான் இருந்தது.இது போன்ற வழக்குகளுக்காக மக்களின் பணம் எவ்வளவு செலவாகிறது என நினைக்கும்போது ஏன் இவ்வாறு அடிதடிகளில் எல்லாம் ஈடுபடுகிறார்கள், அதுவும் மிகவும் சின்ன விசயங்களுக்கெல்லாம் எந்த் தோன்றும். ஆனால் நமக்கு சின்ன விசயமாக இருப்பது அனைவருக்கும் சின்ன விசயமாக இருப்பதில்லை. அடிபட்டவர் மேல் ஒரு காயமும் இல்லை. சம்பவம் நடந்து நான்கு மாதங்கள்.

இப்பொழுது அடிபட்டவர் சொல்லும் விசயத்தை வைத்தும், மற்ற சாட்சிகள் வைத்தும் தீர்ப்புச் சொல்ல வேண்டும்.

கேள்வி கேட்டார்கள். ஆனால் அடிபட்டவரால் சரிவர பதில் சொல்ல இயலவில்லை. நினைவு இல்லை என்றார் அவர். அவரது நினைவுக்கு கொண்டு வர அவர் கொடுத்த வாக்கு மூலம் காட்டினார்கள். படிக்க அவகாசம் தந்தார்கள் அவருக்கு.

ஆனாலும் சரிவர பதில் சொல்லவில்லை. சாப்பிடும் தருணம் வரவே எங்களை போகச் சொன்னார்கள். அன்று திருப்பி அழைக்கவில்லை. அடுத்த நாள் காலை எங்களை வரச் சொன்னார்கள்.

சென்றோம். நாங்கள் வழக்கு குறித்து முடிவு எடுக்கவோ மேற்கொண்டு பேசவோ எதுவும் வாய்ப்பு இல்லை. சாட்சியும், சரிவர பதிலும் இல்லாததால் விடுதலை செய்வதாக முடிவு செய்து இருக்கிறோம், உங்களில் ஒருவர் அவர் மேல் குற்றம் இல்லை என சொல்ல வேண்டுமென்றார்கள். அவ்வாறே எங்களில் ஒருவர் எழுந்து சொன்னார். அத்துடன் வழக்கு முடிந்தது.

பின்னர் வேறு வழக்கு என அழைத்தார்கள். அதுவும் மூன்று நாள். என்னைத் தெரிந்தெடுக்கவில்லை. திருப்பி சென்று அமர்ந்தோம். மாலை சிலரை அழைத்து அடுத்தநாள் தொலைபேசியில் அழைக்கச் சொன்னார்கள். அழைத்த பெயர்களில் எனது பெயரும் சிலரது பெயரும் வரவில்லை. என்ன எனக் கேட்டோம். பத்து நிமிடங்கள் என்றார்.

எங்களது பெயர் அழைத்தார். மொத்த சேவையிலிருந்து விடுவிப்பதாக சொன்னார். மனம் சந்தோசமானது. நான்கே நாட்கள் தான். முதலில் சொன்ன அந்த வாசகம் ஏனோ எனக்குப் பெரிதாகப் பட்டது அன்று.

நீதிபதிக்கு உதவி செய்ய வேண்டுமென நமது பெயர் தெரிவு செய்து நாம் சென்று அமர்ந்ததும் உறுதிமொழி எடுக்கவேண்டும். பைபிள், குரான், கீதை என உறுதிமொழி இருந்தது. இது தவிர்த்து ஒரு உறுதிமொழியும் இருந்தது அது மதம் தனை குறிப்பிடாது, உண்மையின் பெயரால் என இருக்கும். ஒவ்வொருவரும் ஒன்றை எடுத்து உறுதி மொழி எடுத்துக்கொண்டார்கள். நானும் உறுதிமொழி எடுத்தேன்.

நான் எதை தெரிவு செய்து இருப்பேன் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

முற்றும்.

2 comments:

ஆ.ஞானசேகரன் said...

//நான் எதை தெரிவு செய்து இருப்பேன் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.//

உண்மையின் பெயரால்

Radhakrishnan said...

அவர்களுக்குள் உண்மையிலேயே என்ன நடந்தது என்பதை நான் பார்க்காத காரணத்தினால் உண்மையின் பெயரால் என்பதை நான் தெரிவு செய்யவில்லை. மாறாக எல்லாம் வல்ல இறைவனின் பெயரால் என இருந்த பைபிளையேத் தேர்வு செய்தேன்.

இறைவன் பற்றிய உண்மை அதை அறிந்தவருக்கு மட்டுமேத் தெரியும், அதைப் போல அந்த விசயம் அறிந்தவருக்கு மட்டுமேத் தெரியும் என்பதால்.

மிக்க நன்றி நண்பரே.