Saturday, 4 July 2009

கேள்வியும் பதிலும் - 12

12. உலகில் சிலர் துன்புறுவதற்குக் காரணம் பூர்வ ஜென்ம பலாபலன் என்று கூறக்கேட்டுள்ளோம்.

அவ்வாறு பூர்வ ஜென்ம தொடர்ச்சி என்பது உண்மையா..? முற்பிறவியின் நிகழ்வுக்கான பேறோ, தண்டனையோ அடுத்த பிறப்பிலும் தொடரும் என்னும் கருத்து உங்களுக்கு ஒப்புதல் உடையதா..?

எனது பதிலை எழுதும் முன்னர் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ முதல் பாகத்தில் கண்ணதாசன் அவர்கள் எழுதியதில் சில உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

‘ஒவ்வொரு உயிரும் மறுபிறப்பெடுத்து நன்மை தீமைகளை அனுபவிக்கிறது’ எனும் இந்துக்கள் நம்பிக்கை எனக்கும் இருக்கிறது. ‘பத்வீம் பூர்வ புண்ணியானாம்’ என்பது வடமொழி சுலோகம். ‘மேலைத் தவத்தளவே யாகுமாம் தான் பெற்ற செல்வம்’ என்பதும் தமிழ் மூதுரை. முற்பிறப்பின் கரும வினைகள் அடுத்த பிறப்பிலும் தொடர்கின்றன.

‘இட்டமுடன் என் தலையில் இன்னபடி
என்றெழுதி விட்ட சிவன்’

என்றொரு பாடல் சொல்கிறதே, அதன் பொருள் என்ன? ஒவ்வொரு உயிரின் வாழ்வும், தாழ்வும், வறுமையும், வளமும், நோயும், சுகமும், இறப்பும் மறுபிறப்பும் ஆண்டவனின் இயக்கமே என்பதைத் தவிர வேறென்ன? ஆண்டவனின் தீர்ப்புக்கு யாரும் தப்ப முடியாது. ஒரு தலைவருக்குப் புற்றுநோய் வந்தபோது ‘நாத்திகம் பேசியதால் வந்தது’ என்றார்கள். ஆத்திகம் பேசிய இரமணரிஷிக்கு ஏன் வந்தது?

இன்பத்தையோ துன்பத்தையோ தெய்வம்தான் வழங்குகிறது என்பதைத் தவிர வேறு என்ன காரணம்? எந்தக் கணக்கைக் கொண்டு தெய்வம் வழங்குகிறது? ஒவ்வொரு பிறவியின் கணக்கைக் கொண்டும் அடுத்த பிறவியை நிர்ணயிக்கிறது. நூறாண்டுகள் வாழ்வது எப்படி என்ற நூலை எழுதியவர், அறுபது ஆண்டிலேயே காலமானதை நான் பார்த்திருக்கிறேன். ஆகவே நமது கண்ணுக்குத் தெரியாத சூட்சும இயக்கம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. நாம் பிறந்துள்ள இந்தப் பிறப்பில் நடந்து கொள்கிற முறையை வைத்து, அதற்குரிய பரிசையோ தண்டனையையோ இந்தப் பிறப்பில் பாதியையும் அடுத்த பிறப்பில் பாதியையும் அனுபவிக்கின்றோம்.

‘’முன்னர் நமதிச்சையில் பிறந்தோமில்லை
முதல் இடை கடைநமது வசத்திலில்லை’ என்றான் மகாகவி பாரதி

'ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவர்க்கு
எழுமையும் ஏமாப் புடைத்து' என்றான் வள்ளுவன்.

ஆகவே பிறவிகள் ஏழு என்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நம்மவர் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.


இப்படி எங்குப் பார்த்தாலும் இந்து சமயம் ‘ஊழ்வினை’ என்பதை மிகவும் அழுத்தமாகவேச் சொல்கிறது என்பதை அறியலாம். இப்பொழுது இதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்வேன். பிறக்கும் முன்னர் நான் எப்படி இருந்தேன், இறந்த பின்னர் நான் எப்படி இருப்பேன் என்பதிலெல்லாம் எனக்கு எந்தவிதமான கவலையும் இல்லை. பூர்வ ஜென்ம பலன் காரணமாகத்தான் இந்த வாழ்க்கையில் நான் அனுபவித்துக்கொண்டிருப்பது அடுத்த பிறவியில் அனுபவிக்கப் போவது எனக்கொள்வோம் எனில் எனக்கு எவ்விதப் பிரச்சினையும் இல்லை. ஆனால் ஒன்று மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும், பல விசயங்களை நமது கட்டுப்பாட்டுக்குள் அத்தனை எளிதாகக் கொண்டு வர இயலுவதில்லை. இது மனவலிமையின்மையா? இறைவனின் தன்மையா? என்றெல்லாம் என்னால் சிந்தித்துக் கொள்ள இயலவில்லை. அதன் காரணமாகவே ‘எல்லாம் தீர்மானத்தின் பேரில் நடக்கிறது’ என இந்து சமய தத்துவத்தையே நுனிப்புல்லில் எழுதினேன்.

அதேவேளையில் நமது செயல்களுக்கு நாமே பொறுப்பு ஏற்க வேண்டும் எனும் கொள்கை என்னுள் உண்டு, இதில் இறைவனை பங்காளியாக்கிக் கொள்ள ஒருபோதும் துணிவதுமில்லை. ஆனால் மகான்கள், ரிஷிகள், முனிவர்கள் என பலரும் ஊழ்வினை கருத்தை வலியுறுத்தி வந்திருக்கிறார்கள்.

'ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்' என்கிறார் வள்ளுவர்.

'ஊழ்வினை வந்து உறுத்தூட்டும்' என்கிறார் இளங்கோ.

‘எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்’ என்கிறார் மாணிக்கவாசகர்.

ஆனால் எனக்கோ இதையெல்லாம் ஒப்புக்கொள்ள இயலுவதில்லை, அவர்கள் அறிந்ததுபோல் நான் ஒருவேளை அறியாமலேயே இருக்கலாம். இதற்கான காரணம் நடக்கும் விசயங்களுக்கு நம்மால் உண்மையான விளக்கம் சொல்ல இயலுவதில்லை. ஆனால் இதை மிகவும் அருமையாக ‘இயற்கைத் தேர்வு’ எனும் கொள்கைக்குள் கொண்டு வந்தார் சார்லஸ் டார்வின். ‘சுற்றுப்புறச் சூழல் பொருத்தே ஒரு உயிரினம் தன்னை தற்காத்துக் கொள்வதோடு, தனது இனத்தைப் பெருக்கிக்கொள்கிறது’ என்கிறார் இவர். எது எப்படியிருப்பினும் ஊழ்வினை பற்றிப் படிக்க மிகவும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. ஒவ்வொருவரும் இதுகுறித்து பேசும்போது கேட்பதற்கு ஆசையாகத்தான் இருக்கிறது.

சுவாமி விவேகாநந்தர் ‘மனிதனின் மனம் பலவீனப்பட்டு இருக்கும்வரை இறைவன் அத்தியாவசியமாகத் தெரிகிறார்’ என்கிறார். இப்படி ஒவ்வொருவரின் கருத்துக்களையும், பல நூல்களையும் படித்த பின்னர் ஒருவர் எடுத்துக்கொள்ளும் முடிவு கூட ஊழ்வினையாகத்தான் இருக்கும் என முடிப்பது எத்தனைப் பொருத்தமாக இருக்குமோ எனக்குத் தெரியாது, ஆனால் வள்ளுவர் அப்படித்தான் சொல்கிறார்.

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.

‘எல்லாம் தீர்மானத்தின் பேரில் நடக்கிறது’ என அடுத்த பிறவியிலும் பேறோ தண்டனையோத் தொடரும் என நானும் இக்கேள்விக்குப் பதிலாக வைத்துவிடத்தான் நினைக்கிறேன் ஆனால் என் ஊழ்வினை என்னைத் தடுக்கிறது போலும். :)

9 comments:

கோவி.கண்ணன் said...

//‘எல்லாம் தீர்மானத்தின் பேரில் நடக்கிறது’ என அடுத்த பிறவியிலும் பேறோ தண்டனையோத் தொடரும் என நானும் இக்கேள்விக்குப் பதிலாக வைத்துவிடத்தான் நினைக்கிறேன் ஆனால் என் ஊழ்வினை என்னைத் தடுக்கிறது போலும். //

எல்லாம் தீர்மானிக்கப்பட்டபடியே நடக்கிறது என்பது பொருத்தமாக இருக்கும். மறுபிறவி நல்ல கான்சப்ட் என்னால் ஏற்றுக் கொள்ளக் கூடியது ஆகும். மனிதர்களில் அற்ப ஆயுள் மற்றும் ஏனைய கஷ்டங்களுக்கு இறைவனை குறை சொல்வதைவிட ஒருவரின் கர்ம வினையைக் காராணமாகச் சொல்வது பொருத்தமானதாகத் உணர்கிறேன். மனித சிந்தனைகள் இயல்பாக சுதந்திரமானவையே, சமூகத்தையும் மனிதனே கட்டமைத்திருக்கிறான். அதில் அவன் தவறிழைக்கும் போது தற்காலிகமாக (அந்த பிறவியில்) தப்பினாலும் அவனுடைய செயலுக்கான எதிர்வினை அவனை அடைந்தே தீரும். பாவப்பட்ட ஜென்மங்கள் என்று சொல்வதற்கு அச்சமாகத்தான் இருக்கிறது, ஒருவரையும் அவ்வாறு சொல்வது அறிவுடமையும் இல்லை. ஒருவர் பாவம் செய்து ஏதும் தண்டனை அனுபவிக்கிறார்கள் என்று சொல்ல எந்த மனிதனுக்கும் உரிமையே கிடையாது. தனது துன்பத்தினால் ஏற்படும் மனவுளைச்சலில் இருந்து மீள பாதிக்கப்பட்டவர் வேண்டுமானல் தனது முற்பிறவியின் செயலுக்கான எதிர்வினையாக இருக்கும் என்று ஆறுதல் பட்டு, அடுத்து தனது செயல்களை நற்காரியங்கள் செய்ய முனைவதற்கு கொள்கை கான்சப்ட் பயனாக இருக்கும்.

துன்பப்படுபவர்களைப் பார்த்து ஊழ்வினையால் துன்பம் அடைகிறார்கள் நாமேன் உதவவேண்டும் என்று நினைப்பவர் எவரும் அவரை துன்பப்படும் மனிதரின் இடத்தில் வைத்து பார்த்து ஒருவேளை அடுத்த பிறவியில் நான் இப்படி இருந்தால் எனக்கும் ஒருவரும் உதவ முன்வரமாட்டார்கள் என்றே நினைத்தால் எவருடைய துன்பத்தையும் முன்வினைப் பயன் என்று ஒதுக்காமல் உதவுவார்கள்.

முற்பிறவி பலன் என்பது தனிப்பட்ட ஒருவர் குறித்தது, அதை பிறர் விமர்சனம் செய்ய எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. அதாவது பிறரின் துன்பத்தைவிட தன்னுடைய துன்பத்திற்கான காரணம் ஊழ்வினை என்று நினைப்பதில் தவறே இல்லை. பாதிப்பில் இருந்து மீளும் மனம் கிடைக்கும். இதைவிட எந்த ஒரு நிகழ்வுக்கும் நான் கருவி மட்டுமே, தவறான செயல்களுக்கு இனி நான் கருவியாக இருக்க 'என்னை' அனுமதிக்கமாட்டேன் என்று நினைப்பது மன அளவில் நல்ல பலனைத் தரும். ஒரு பிறவி என்பது ஒரு நாடகம் போல் நமக்கு கிடைத்திருப்பது ஒரு பாத்திரம், அடுத்த பிறவியில் வேறொரு நாடகத்தில் நமக்கு இராஜாவேடம் கூடக் கிடைக்கலாம். எது கிடைத்தாலும் கிடைப்பது அனைத்தும் வெறும் பாத்திரங்களே என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்தால், அல்லது நாடகத்தில் நடித்தாலும் ஒரு பார்வையாளனாக நடப்பது நாடகம் என்று உணர்ந்தால் நாம் எதற்காக துன்பப் படப் போகிறோம் ?

கொஞ்சம் நீளமாக எழுதிவிட்டேன். நீங்கள் தொட்ட கான்சப்ட் மிகவும் பிடித்தமாக இருந்தது !

நிகழ்காலத்தில்... said...

ஊழ்வினையினால் வந்தது என்ன என்பதை ஆராய்ச்சியோடு இருந்து உணர்ந்து இப்பிறவியிலேயே தீர்க்க முயலவே இவ் உயர் மனிதப்பிறவி.

இப்பிறவியில் நான் செய்ய வேண்டியது என்ன என்பதில் தெளிவு வந்துவிட்டால் மறுபிறவியைப் பற்றி கவலை தேவையே இல்லை

Radhakrishnan said...

//எல்லாம் தீர்மானிக்கப்பட்டபடியே நடக்கிறது என்பது பொருத்தமாக இருக்கும்.//

இந்தக் கருத்தை நான் எடுத்துக்கொண்ட ஆண்டு 1992 என நினைக்கிறேன்.அப்பொழுது ஈராக்கில் போர் நடந்து முடிந்திருந்தது. ஒரு பத்திரிக்கையைப் படித்தபோது அந்த போரினால் பாதிக்கப்பட்டவர் சொன்னது 'நான் எதிர்காலத்திலும் வாழ்ந்திருக்கிறேன்' என்பதுதான். இதைத்தானே இந்து தத்துவம் சொல்கிறது. இவையெல்லாம் சேர்த்தே எல்லாம் தீர்மானத்தின் பேரில் நடக்கிறது என எண்ணம் உருவாக்கினேன். பல நண்பர்கள் 'ஆம்' என்றார்கள். ஆச்சரியம் தான், நீங்களும் தீர்மானிக்கப்பட்டபடியே நடக்கிறது என சொல்லியிருப்பது. இருக்கலாம்!

//இறைவனை குறை சொல்வதைவிட ஒருவரின் கர்ம வினையைக் காராணமாகச் சொல்வது பொருத்தமானதாகத் உணர்கிறேன்.//

ஆம், நம் செயல்களுக்கு நாமே பொறுப்பு!

//பாவப்பட்ட ஜென்மங்கள் என்று சொல்வதற்கு அச்சமாகத்தான் இருக்கிறது, ஒருவரையும் அவ்வாறு சொல்வது அறிவுடமையும் இல்லை.//

மிகவும் உண்மைதான். இப்படித்தான் இங்கிலாந்து கால்பந்து மேளாளர் ஒருமுறை சொல்லப்போய் தனது பதவியை துறக்க வேண்டி வந்தது.

//எவருடைய துன்பத்தையும் முன்வினைப் பயன் என்று ஒதுக்காமல் உதவுவார்கள்.//

உதவுவது கூட முன்வினைப் பயன் என இருக்க வேண்டும் என்று ஆகிவிட்டதே! நீங்கள் சொல்லும் கருத்தை உள்வாங்கினால் நிச்சயம் உலகம் செழிப்பாகவே இருக்கும்.

//அதாவது பிறரின் துன்பத்தைவிட தன்னுடைய துன்பத்திற்கான காரணம் ஊழ்வினை என்று நினைப்பதில் தவறே இல்லை. பாதிப்பில் இருந்து மீளும் மனம் கிடைக்கும். இதைவிட எந்த ஒரு நிகழ்வுக்கும் நான் கருவி மட்டுமே, தவறான செயல்களுக்கு இனி நான் கருவியாக இருக்க 'என்னை' அனுமதிக்கமாட்டேன் என்று நினைப்பது மன அளவில் நல்ல பலனைத் தரும்.//

பயன் தரும் என்பது என்னவோ உண்மை, ஆனால் பல நேரங்களில் அவ்வாறு நடப்பதில்லை, அதனால் தான் ஊழ்வினை முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது.

அருமையான, தெளிவான பின்னூட்டத்திற்கு நான் உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Radhakrishnan said...

//ஊழ்வினையினால் வந்தது என்ன என்பதை ஆராய்ச்சியோடு இருந்து உணர்ந்து இப்பிறவியிலேயே தீர்க்க முயலவே இவ் உயர் மனிதப்பிறவி.

இப்பிறவியில் நான் செய்ய வேண்டியது என்ன என்பதில் தெளிவு வந்துவிட்டால் மறுபிறவியைப் பற்றி கவலை தேவையே இல்லை//

சிக்கனெப் பிடித்தேன், எங்கு எழுந்தருள்வது நீயே! என இறைவனைப் பாடி வைத்தார்கள். தெளிவு கிடைப்பதே ஊழ்வினைப் பயன் என உரக்கச் சொல்லிச் சென்றுவிட்டார்கள், ஆனால் இப்பிறவியில் எத்தனை நல்லது செய்ய இயலுமோ அத்தனை செய்து வாழ்ந்தால் மறுபிறவி பற்றிய கவலை தேவையில்லைதான். மிக்க நன்றி.

essusara said...

முன்பெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் பிறக்கின்ற அனைவருக்குமே ஜாதகம் எழுதி விடும் வழக்கம் நம்மிடயே உண்டு.

அப்படி எழுதும்போது முதல் பக்கத்தில் ஒரு சுலோகம் கண்டிபாக எழுதுவது உண்டு.

"ஜனனி ஜன்ம ஸொவ்க்யநம்
வர்த்ச நீ குல சம்பிரதம்
பதவி பூர்வே லிகிதே
ஜன்ம பத்ரிகா" (சுலோகம் முழுமையாக நினைவில் இல்லை. என் அறிவுக்கு எட்டியதை குறிபிட்டுலேன்)

இதன் பொருள் பூர்வ ஜன்ம வினைகளுகேற்ப தற்போதைய வாழ்வு அமையும் என்பதை சுட்டி காட்டவே.

தற்போதைய மரபியல் தொடர்பான விசயங்களுக்கும் , பூர்வ ஜன்மமும் நெருங்கிய தொடர்பு உண்டு என்றே தோன்றுகிறது.
சிந்தனைக்குரிய கட்டுரை தந்தமைக்கு நன்றி.

Radhakrishnan said...

மிக்க நன்றி சாரா அவர்களே.

நல்லதொரு சுலோகம், விரைவில் தேடிப்படித்து விடுகிறேன்.

மரபியல் தொடர்பான விசயங்கள், பூர்வ ஜென்ம் நல்லதொரு இணைப்பு.

Mukhilvannan said...

கர்மவினை என்பதை கிறிஸ்தவர்கள்கூட ஒப்புக்கொள்ளுகின்றனர்.
முற்பகல் செயின் பிற்பகல் விளையும் என்பதே கர்மாக்கொள்கை.
விதைஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?
என்பதும் இதுதான்.
கர்மாக்கொள்கை எங்கு சோம்பேறித்தனத்தில் கொண்டுபோய்விட்டுவிடுமோ என்ற ஆதங்கத்தில் பிறந்ததுதான்: “செயலாற்றுவது உன் கடமை. விளைவில் உனக்குப் பங்கில்லை” எனும் கீதைப்பேருரை.

Radhakrishnan said...

//கர்மவினை என்பதை கிறிஸ்தவர்கள்கூட ஒப்புக்கொள்ளுகின்றனர்.//

கிறிஸ்துவர்கள்கூட ஒப்புக்கொள்கின்றனர் எனச் சொல்லும்போதே,அவர்கள் ஏதோ இதை ஒப்புக்கொள்ளாதவர்கள் போல ஒருத் தோற்றமும், அவர்களே ஒப்புக்கொள்வதால் கர்மவினைச் சரியே எனும் தோற்றமும் உருவாக்கப்படுவது போல் இருக்கலாம்.

இன்னார் இன்னார் ஏற்றுக்கொண்டால் தான் ஒரு கொள்கை சரியெனச் சொல்வேமெனில் எந்த கொள்கையும் சரியாகப்படாது.

கீதைப் பேருரை சொன்னாலும் சொல்லாவிட்டாலும் கர்மவினை என்பது நாம் செயலாற்றுவதைப் பொருத்தே அமைகிறது.

ஒரு செயல் அதன் வினை. ஒரு செயல் ஒரே வினை என இருந்திருந்தால் எந்தப் பிரச்சினையும் இருந்திருக்காது எனப் பொருள்படுத்தலாம்.

ஒரு செயல் பல வினைகள் என வருவதால் தான் பல விசயங்கள் விவாதிக்கப்படுகின்றன.

நன்றி சகோதரி.

Anonymous said...

‘எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்’ என்கிறார் மாணிக்கவாசகர்

இந்த சிவபுராணம் ஒன்றே போதும்