Thursday, 2 July 2009

கேள்வியும் பதிலும் - 1

முத்தமிழ்மன்றம் எனும் வலைத்தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு நான் அளித்த பதில்களும்.

1. அஹிம்சை என்ற உங்கள் ஆன்மீக எண்ணங்களுக்கு எதிர்மறையாக உங்கள் வேலை அமைந்தால் என்ன செய்வீர்கள்?

அப்படிப்பட்ட வேலைதான் செய்து கொண்டு இருக்கிறேன் சகோதரி!

நான் இந்தியாவில் இருந்த வரை (1998) அசைவம் சாப்பிடுவேன், அதுவும் எப்போதாவது தான். எங்கள் வீட்டில் எப்போதாவதுதான் அசைவம் சமைப்பார்கள். எனது அம்மாவிடம் அசைவம் சாப்பிடுவது பிடிக்கவில்லை எனக் கூறிக்கொண்டே சாப்பிட்ட தருணங்கள் பல. சாப்பிட்ட பின்னர் மிகவும் கவலையாக இருக்கும். இந்த எண்ணமெல்லாம் வந்தது ஒரு 18 வயது பின்னர்தான். அதற்கு முன்னர் அஹிம்சை பற்றி நினைக்கவே இல்லை. ஏதோ சாப்பிட வேண்டும் எனத் தோன்றும், அவ்வளவுதான்.

எனது தாயின் மரணத்திற்கு பின்னர் அசைவம் சாப்பிடுவது இல்லை என்ற முடிவு எடுத்தேன், எனது மனைவியும் (திருமணத்திற்கு முன்னர்) என்னிடம் அதிசயமாக அசைவம் பற்றி கேட்க நான் சாப்பிடமாட்டேன் என உறுதி அளித்தேன். அசைவம் சாப்பிடுவதை நிறுத்திய நாள் 12-04-1998. இதுநாள்வரை அசைவம் சாப்பிட்டது இல்லை. என்னை ஆச்சரியமாக என்னை அறிந்தவர்கள் பார்த்தார்கள், எனது நண்பர்கள் வியந்தார்கள், இதில் என்ன வியப்பதற்கு என்ன இருக்கிறது என என் அண்ணன் ஒருமுறை எதில் எதில் உறுதி கொள்ள வேண்டுமோ அதில் உறுதி கொள் என்றார். என்னைப் பொறுத்தவரை எதை ஒருவனால் ஒரு விசயத்தை சிக்கெனப் பிடித்துக் கொள்ள முடியுமோ, அதே வேளையில் மிகவும் பிடித்த விசயத்தை உடனடியாய் விட்டுவிடவும் முடியுமோ அவனால் கடவுளை உணர முடியும் என்ற கருத்தை எனக்குள் நான் புதைத்த காலங்கள் எனக்கு ஞாபகம் வந்து போகும். கடவுளை நான் உணரவில்லை என்பது வேறு விசயம்.

நான் இலண்டனில் ஆராய்ச்சியை ஆரம்பித்தபோது எனது ஆசிரியர் என்னிடம் கேட்ட கேள்வி இதுதான் 'நீ சைவம், உனக்கு விலங்குகளைக் கொன்று ஆராய்ச்சி செய்வதில் ஆட்சேபனை இல்லையா?' என்பது தான். இது எதற்கு கேட்டார் எனில் இங்கு இது போன்ற ஆராய்ச்சி செய்ய அனுமதி வேண்டும், தனிப்பட்ட படிப்பினை படிக்க வேண்டும், அதனால்தான் கேட்டார். நான் எதுவுமே நினைக்கவில்லை சரி என்று சொல்லி அன்று ஆரம்பித்து இன்றுவரை நிறுத்தவில்லை.

எனது மனம் பாடுபடும். கொல்வதற்கு முன்னர் மிகவும் கவலையாக இருக்கும். சில தினங்களில் கண்ணீர் வந்ததும் உண்டு. ஒரே நாளில் 250 எலிகளையெல்லாம் கொன்று இருக்கிறேன். பாவமாக இருக்கும், மனதில் எத்தனையோ சமாதானங்கள் சொல்லிக் கொள்வேன். இருந்தும் இந்த வேலை எனக்குப் பிடித்து இருப்பதால் எனது உடல்நலம் பற்றி கூட கருதாமல் பணிபுரிந்து வருகிறேன். இறக்கும் உயிர்களை தியாகச் செம்மல்கள் என மனதில் நினைத்துக் கொள்வேன். ஏதோ ஒரு நல்ல விசயத்துக்காக தங்கள் வாழ்வினை படைத்துக் கொண்ட அந்த விலங்கினங்கள் பாக்கியசாலிகள்.

நான் எனது ஆராய்ச்சி நூலில் எழுத நினைத்தது இதுதான்!

''Dedicated to my beloved mice''

இன்னும் அந்த உயிரினங்களை நினைத்து மனம் வலிக்கிறது, இருந்தும் தொடர்கிறேன், ஒருநாளாவது கண்ணன் வந்து எனக்கு கீதை சொல்லமாட்டானா என்று!

(தொடரும்)

5 comments:

அன்புடன் அருணா said...

நல்ல எண்ணம்....ஆனால் இப்படி நினைப்பதற்கும் செய்வதற்கும் ஒத்துப் போகவில்லையென்றால் மனம் கஷ்டப் படுமே???

Radhakrishnan said...

உண்மைதான்!

இருப்பினும் செய்யும் தொழிலில் இருக்கும் ஒருவித பிடிப்பே இதற்குக் காரணம். மேலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் வந்துவிடுவதால் 'எல்லாம் சரி' என்றே எண்ணம் எழுவதைத் தவிர்க்க இயலுவதில்லைதானே.

ஒரு நிமிடம் யோசித்தோமானால் 'எல்லோருக்கும் எல்லாம் பிடித்துக் கொண்டா வாழ்க்கையை நடத்துகிறார்கள்' என சமாளிக்கவும் தோன்றும்!

'குருமா'வுக்காக நடத்தப்படும் சில 'கர்மா'க்கள் இவை.

மிக்க நன்றி அருணா அவர்களே.

கோவி.கண்ணன் said...

தூக்கு தண்டனை நிறைவேற்றுபவர் தான் ஒரு கொலை செய்கிறோம் என்று நினைக்க மாட்டார், தான் அரசாங்கத்தின் ஒரு கருவி என்று மட்டுமே நினைப்பார். அவரது செயல் பாவ புண்ணிய கணக்கில் வருவதாக இதுவரை எந்த இறையியல் சித்தாந்தங்களிலும் சொல்லப்படவில்லை.

நோக்கத்துடன் விரும்பி செய்யும் செயல்களில் தான் பாவ/புண்ணிய ஹிம்சை, அஹிம்சை எல்லாம் வரும். உயிர்கள் என்றால் அனைத்தும் உயிர்தான். கண்ணுக்கு தெரியாத கிரிமிகளை கொல்ல ஆண்டி பயாட்டிக் எடுத்துக் கொ(ல்)ள்கிறோம். அதைப் பாவம் என்று நினைக்க முடியாதல்லவா, அது போல் உங்கள் தொழில் வழியாக கொல்லப்படுபவற்றிற்கும் நினைத்துக் கொள்ளுங்கள்

Radhakrishnan said...

மிக்க நன்றி கோவியாரே. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

பாவம், புண்ணியம் என்றெல்லாம் சில நீதி நியாயங்களுக்குப் பார்க்க முடியாததுதான்.

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்