இளந்தென்றல் வீசும் மலையோரத்தில் ஓலைக் குடிசையில் மதி எழுதிக் கொண்டிருந்தான்.
''பெண்ணினமே!
வீறு கொண்டு உன் தன்
பேதைமையை அகற்று
விழியற்றுக் கிடக்கும் கண்ணை
ஓங்கி ஒலித்தும் கேளா செவியை
மாற்றிட புறப்படு
அதோ பழித்துக் கொண்டிருக்கும்
பகல் வேசக்காரர்களை
உலகு காண
பறைசாற்றிட கிளம்பு
நீ எழும் வேகத்தில்தான்
உன் எதிர்ப்பு அடங்கும்
எழு! போராடு!
உன்னைக் காக்க
உன் இனத்தை
தூசு தட்டிக் கொள்
அப்பொழுதுதான் தூய்மைப் பிறக்கும்''
கவிதையை அருவிபோல் கொட்டினான், அதனை வார இதழுக்கு அனுப்ப எழுந்து சென்றான் மதி.
இந்தியாவின் சிறந்த தொழிலும் மூத்த தொழிலுமான விவசாயம்தனை அவனது தாய் தந்தையர் செய்து வந்தனர். மதி நகரின் வாசலை அடைந்தான். அவனது விழிகள் ஒரு மதியை நோக்கியது. அது வானத்து மதியல்ல, மண்ணகத்து மதி.
இவனைக் கண்டு அவள் புன்னகைத்தாள். மறுபதிலாய் இவனும் புன்னகைத்தான். அறிமுகம் புன்னகையில் ஆரம்பமானது. இவனது எழுத்துக்கள் பல அவளை கவர்ந்திருக்கின்றன. அந்த எழுத்துக்கள் போல் இவனும் அவளுக்குப் பிடித்திருந்தது ஒன்றும் ஆச்சரியமல்ல.
ஆனால் அவள் செல்வந்தருக்கு செல்லச் சிட்டு, காதலை எப்படி அனுமதிப்பார் மனம் விட்டு. அவள் ஆதரவற்ற பூவையருக்கும் வழி தெரியா பெண்களுக்கும் நல்வாழ்வு மையம் நடத்தி வந்தாள். தந்தையின் பேருதவியால் தரணி போற்றுமளவு செயல்பட்டு வந்தாள்.
மதியின் கால்கள் நகரத்து வாசலை பலமுறை நாடின. நங்கையும் இவனை நாடினாள். புன்னகை சந்திப்பானது.
முதல் வார்த்தை ''நீங்க எழுதற கவிதைகளை நான் நிறைய இரசிப்பேன்'' என்றாள் ரதி.
''உங்க நல்ல செயலை கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்'' என்றான் மதி.
காலம் கடந்தது, காதலும் வளர்ந்தது. காதலைச் சொன்னான் மதி. மறுப்பேதும் சொல்லவில்லை தந்தை. மதியை முழுதாய் தெரிந்தவர் அவர். ஆனால் ரதியின் தந்தையோ தடையாய் நின்றார்.
காதலை தடுக்க களவு முறைகள் கையாளப்பட்டும் வானைப் போல் உயர்ந்து வளர்ந்தது. ரதியின் தந்தை இறுதியாய் ஓர் அஸ்திரத்தை ஏவினார்.
''இங்க பாரும்மா, நான் சொல்றதை நீ கேட்கலைன்னா நல்வாழ்வு மையம் நாளைக்கே மூடியிருக்கும், யோசனை செஞ்சுக்கோ'' என்றார்.
அவள் துடியாய் துடித்தாள், மறுமலர்ச்சி ஏற்பட மறுக்கும் பூமியில் புதியதாய் தோன்றும் மறுமலர்ச்சி மசிவதா? கண்ணீர் அருவியானது.
''உனக்கு ஒரு வாரம் அவகாசம் தாரேன்'' என்று காலக்கெடு விதித்தார் தந்தை ரதியை நோக்கி.
விதியை நோவதா, வளர்ந்த இடத்தை நோவதா மதியை நேசித்ததை நோவதா ஒன்றும் அவளுக்குப் புரியவில்லை. ஆத்தங்கரை மேட்டில் அந்தி சாயும் வேளையில் மதியை காண ரதி விரைந்தாள். மதி ஏற்கனவே காத்திருந்தான். விசயத்தைக் கூறினாள் விம்மலுடன். என்ன செய்வது எனக் கேட்டாள். அவனோ பதிலேதும் கூற முடியாது வானம் நோக்கினான்.
''காரணம் சொல்லுங்கள், நம் காதலை விட நான் செய்யும் காரியம் உயர்ந்ததா இல்லையா'' என்றாள் ரதி.
''என்ன சொல்வது, எனக்கே விளங்கவில்லை'' என்றான் மதி.
''முடிவைச் சொல்லுங்கள், மூன்று முடிச்சு முக்கியமா? முப்பத்து முப்பது பெண்களின் நல்ல நிலை முக்கியமா? விம்மலுடன் வந்த வார்த்தைகள் காற்றில் கரைந்தது.
''என்னை மறந்து விடு'' உள்ளத்தில் இடியாய் இறங்கியது அவனது வார்த்தை.
''காதலையா மறக்கச் சொல்கிறீர்கள், நினைவுகளையா இழக்கச் சொல்கிறீர்கள். முடியாது, என்னால் முடியாது'' அவளது வார்த்தையின் உள்ளன்பு இமயத்தின் உயரத்தைத் தொட்டு விம்மியது.
''பின் அவர்கள் வாழ்வு'' தன்னை தன் காதலை இழக்க தைரியம் அற்றவனாய் விக்கித்து கேட்டான், ஆனாலும் உறுதியாய் இருந்தான்.
''அர்த்தமற்றதாய் போகட்டும், நம் காதல் அர்த்தமாக வேண்டும்'' என்றாள் அர்த்தமே புரியாதவளாய்.
''நம் காதல் அர்த்தமுடையதாக வேண்டுமெனில் நீ நல வாழ்வு மையத்தை தவிர்த்தலாகாது செல்'' என்றான் உறுதி கொண்டவனாய். அவள் ஒன்றும் பேச முடியாதவளாய் அமைதியானாள். சில விநாடிகள் அடுத்து ''நம் காதல்'' என்றாள் தனக்கு இவன் இதயம் இல்லாது போகுமோ? என்ற அச்சத்துடன்.
''காதல் தெய்வீகமானது'' என்று ஆறுதல் அளித்தான். அது அவளுக்கு உறுதியாக தெரிந்து இருக்க வேண்டும், நல வாழ்வு மையத்தின் நலன் உறுதியாக புரிந்து இருக்க வேண்டும்.
நடந்தாள், நம்பிக்கையுடன் நடந்தாள் ரதி. இருள் சூழ இருந்த நலவாழ்வு மையத்தினை காத்திட்ட மகிழ்ச்சியில் தனக்கு அவள் இல்லாது போன கவலையினையும் மறந்து? நடந்து கொண்டு இருந்தான் மதி.
முற்றும்
No comments:
Post a Comment