பேகன் நடைபாதை வழியாக பல வருடங்கள் கழித்து அன்று செல்ல வேண்டியிருந்தது. நடைபாதையில் நடப்பதற்கு இடமில்லாமல் இருபுறங்களிலும் கடைகள் வைத்து பொருட்களை விற்றுக் கொண்டு இருந்தார்கள். பேகனின் கண்கள் நேராக பார்த்துக் கொண்டு சென்று கொண்டிருந்தது. கடைகளில் என்ன வைத்து இருக்கிறார்கள் என்று கூட அவருக்கு பார்க்கத் தோணவில்லை.
கடையில் பொருட்களை கூவி விற்றுக் கொண்டிருந்தார்கள்.
'சார் சார் இந்தாங்க சார் வாங்கிக்கோ சார்'
பேகனின் முகத்தின் முன்னால் ஒரு பொம்மையை காட்டினார் ஒரு கடைக்காரர். அந்த கடைக்காரரை சட்டை செய்யாமல் பேகன் நடந்து கொண்டிருந்தார்.
''ஆப்பிள் ஆப்பிள், ஆரஞ்சு நாலு ஐம்பது பைசா ம்மா '
''பெல்ட்டு இது சாதா பெல்ட்டு இல்ல, லெதர் பெல்ட்டு இரண்டு ரூபாதான் சார்''
பலருடைய பேச்சுக்கள் மொத்தமாக கேட்டதால் ஒன்றும் உருப்படியாக பேகனுக்கு கேட்கவில்லை. கேட்காதது போல் தலையசைக்காமல் நடந்து சென்றார் பேகன். ஒவ்வொரு கடையிலும் குழுமியிருந்த மக்களை வேறு விலகிச் செல்ல வேண்டியிருந்தது. இந்த பாதையை கடந்து செல்லும் முன்னர் நா வறண்டு, கால்கள் பின்னிக்கொள்ளும் போலும் என நினைத்துக் கொண்டு முகத்தில் புள்ளியிடத் தொடங்கிய வியர்வைத் துளிகளை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டு நடந்தார்.
''கர்சீப் நாலு ஒரு ரூபா சார், புதுசா வாங்கிக்கோ சார் இதுல மல்லிகை வாசனை வரும்''
என்றபடியே கட்டாக இருந்த கைக்குட்டைகளை பேகனிடம் காட்டினார் மற்றொரு கடைக்காரர். பதில் எதுவும் அளிக்காமல் பாதையில் நடப்பதையே குறிக்கோளாக வைத்துக் கொண்டார் பேகன். அடிக்கின்ற வெயிலைப் பொருட்படுத்தாது வியாபாரம் பண்ணிக் கொண்டு இருந்தவர்களின் நிலையை பற்றி சிந்தனை ஏதும் இல்லாமல் சென்று கொண்டிருந்தார் அவர்.
''சார் நீங்க கட்டியிருக்க வாட்ச் பழசு, அதைத் தூக்கிப் போட்டுட்டு இது ரோலக்ஸ் வாட்ச்சு நூறு ரூபாதான், எடுத்துக்கோங்க சார்'
பேகனுக்கு முதன்முதலாக கோபம் முணுக்கென்று எட்டிப் பார்த்தது. கோபத்தை சட்டை செய்யாமல் பதில் அளிக்காமல் ஒருவழியாய் அந்த நடைபாதையை கடந்தார். அந்த நடைபாதை கடைசியில் ஒரு குளிர்பானக் கடை இருந்தது. தாகமாக இருந்தது அவருக்கு. ஒரு நல்ல கடை கண்ணுக்கு எட்டும் தொலைவில் கூட இல்லை. அப்பொழுது அந்த குளிர்பான கடைக்காரர் பேகனைப் பார்த்து சொன்னார்.
''இதமா ஒரு இளநீர் குடிச்சிட்டுப் போங்க சார்''
பேகன் நின்றுவிட்டார்.
''இனாமாத் தருவியா?''
''இல்லை சார், இரண்டு ரூபாதான்''
''இனாமாத் தருவியா, மாட்டியா''
''தரமாட்டேன் சார்''
பேகன் கடைக்காரரிடம் எதுவும் பேசாமல் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார்.
''பாக்கறதுக்கு பெரிய இடத்து ஆளு மாதிரி இருக்கு, ஒரு இரண்டு ரூபா கொடுத்து இளனி வாங்கிக் குடிக்க வக்கில்ல''
கடைக்காரர் முணுமுணுத்தார். பேகன் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் வீடு போய் சேர்ந்தார்.
''அப்பப்பா, நடக்கிற பாதையில கடையை வச்சிக்கிட்டு பொருள் விற்கிறாங்க, யாருதான் அதை வாங்குவாங்க''
பேகன் சலித்துக் கொண்டார். பேகனின் தந்தை கடிந்து கொண்டார்.
''பேசுவடா, வசதி வாய்ப்புனு வந்துட்டா ரோட்டில விற்கிற பொருள் எல்லாம் சீயினுதான் இருக்கும், ஒரு காலத்தில ரோட்டில விற்கிற பொருளை வாங்கித்தான் குடும்பம் நடத்துனேன் அதை மறந்துராத, ரோட்டுல விற்கிற பொருளை நம்பி வாழுற குடும்பங்கள் இன்னும் எத்தனையோ நம்ம நாட்டுல இருக்கு''
உழைக்கும் வர்க்கத்தினை நினைக்கையில் பேகனுக்கு சுர்ரென்றது.
முற்றும்
1 comment:
ஒரு சாதாரண சிறுகதை தலைப்புக்காக மட்டுமே தமிழிஷில் சூடான சங்கதிகளில் வந்ததை கண்டு பிரமிப்பு மட்டுமே மிஞ்சியது.
Post a Comment