முன்னுரை:
ஒருநாள் திடீரென என் அன்னையிடம் கேள்வி கேட்க ஆசையாக இருந்தது.
''அம்மா, எங்கே இருக்காரம்மா இறைவன்?''
''இறைவன், தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்''
''சகல இடங்களிலும் வியாபித்து இருப்பானாம்மா இறைவன்?''
''ஆமாம்பா, எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பான்''
''எனக்கு இறைவனை காட்ட முடியுமாம்மா உங்களால்?''
''உன் எதிரில் நிற்கிறேனப்பா, உன் கண்ணுக்குத் தெரியவில்லையா''
விழிகளில் கண்ணீர் வடியக் கட்டிக்கொண்டேன் என் அன்னையை. என் அன்னையும் ஒருநாள் இறந்து போனார். அழுகை பீறிட்டு வந்தது. இப்பொழுதெல்லாம் எவரிடமும் நான் இறைவன் எங்கே இருக்கிறார் எனக் கேட்பதே இல்லை. இதை எழுதும்போதே எனது கண்களில் நீர் கோர்த்து நிற்கிறது.
என் அன்னை, நான் இந்தத் தொடர் எழுதிடும் வண்ணத்தை வானத்தில் இருந்துப் பார்த்துக் கொண்டேயிருப்பார் என்கிற அசட்டுத்தனமான நம்பிக்கையுடனும், இத்தொடரை எழுத எழுத என்னிடம் அவர் வந்து ''நல்லா எழுதியிருக்கேடா'' எனச் சொல்லும் குரலையும் கேட்பேன் என்கிற நழுவி விடாத நம்பிக்கையுடனேத் தொடங்குகிறேன்.
மனநிலை பிறழ்வு என அறிவியல் இத்தொடருக்கு விளக்கம் சொன்னாலும் சொல்லும். அதையும் மறுக்காது ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். இருநிலை மனோபாவம் என அறிவிற் சிறந்தோர்கள் சொல்லக்கூடும், அதையும் ஏற்றுக்கொண்டே இதை எழுதுகிறேன்.
''அம்மா, நீ இதைக் கவனித்துக் கொண்டுதானே இருக்கிறாய்?''
என் அன்னை எனக்கு பதில் சொல்லவில்லை, ஆனால் மனதில் ஒரு மூலையில், எனது மூளையின் ஒரு பாகத்தில் ஒரு குரல் சன்னமாக ஒலித்துவிட்டுச் செல்கிறது.
''எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறான், எப்பொழுதும் கவனித்துக் கொண்டேதான் இருக்கிறான்''
(தொடரும்)
4 comments:
தொடருங்கள் உங்கள் பயணத்தை ... அன்னை, அம்மா, தாயார் எப்படி அழைத்தாலும் ... அவரின் ஆசிர்வாதமே போதும்
//விழிகளில் கண்ணீர் வடியக் கட்டிக்கொண்டேன் என் அன்னையை. என் அன்னையும் ஒருநாள் இறந்து போனார். //
உண்மை என்பதால் ரொம்ப உருக்கமாக இருக்கிறது !
//எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறான், எப்பொழுதும் கவனித்துக் கொண்டேதான் இருக்கிறான்''//
வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்கள்
கருத்திட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
Post a Comment