Wednesday, 1 July 2009

வேத நூல் - 4

ரேண்ட்டர் எல்லா வசதிகளுடன் பயணத்தைத் தயார் செய்தார். ஆனால் சிரகமெராவை வரவேண்டாம் என ரேண்ட்டர் சொன்னதால் சாங்கோவும் செல்ல மறுத்தான். பின்னர் சமாதனமாகி சாங்கோ மட்டுமே செல்வதாக முடிவு செய்தான்.

ரேண்ட்டர் தான் நிறைய செல்வங்களை ஒரு நிலத்தில் இருந்து அள்ளிக்கொண்டு வரப்போவதாக மட்டுமேச் சொன்னார். ஆனால் எந்த திசையில் செல்வது எப்படிச் செல்வது என எதையும் முடிவு செய்யாமலே கடலில் பயணிக்க எண்ணியது சாங்கோவுக்கு விசித்திரமாக இருந்தது. ஆனால் மிபலோ மிகவும் சந்தோசமாக இருந்தான். எழுதுவதற்குத் தேவையான அளவு பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டான் சாங்கோ.

அந்த ஊரில் இருந்தவர்கள் ரேண்ட்டரை கடுமையாக எச்சரித்தார்கள். மேலும் இனிமேல் நீ திரும்பி வரப்போவதில்லை என்பதை உறுதி செய்கிறோம் எனவும் பயமுறுத்தினார்கள். மிபலோவையும், குவ்விலானையும் செல்ல வேண்டாம் என அவர்கள் வீட்டில் தடுத்தார்கள். ஆனால் இந்த பயணம் சிறப்பாகவே முடியும் என மிபலோ உறுதியுடன் சொன்னதைக் கேட்டு இருவர் வீட்டிலும் அமைதியானார்கள்.

பயணத்திற்காக பலநாட்களாகத் தயாரிக்கப்பட்ட படகில் நால்வரும் அமர்ந்ததும் மிபலோ மேற்கே நோக்கி படகைச் செலுத்தச் சொன்னான். அலைகளின் மேல் மிதந்தது. அலைகளும் வழி தந்தது. மிபலோவின் எண்ணங்களைச் சொல்லச் சொன்னான் சாங்கோ.

''இரவும் பகலும் சூரியக் கதிர்களால் உருவாகிறது. சூரியக் கதிர்களை ஓரளவுக்கு மறைக்கும் தன்மை பூமியின் மேலிருக்கும் வான்படலத்துக்கு உண்டு'' என்றான் மிபலோ. குவ்விலான் எழுதினான். ரேண்ட்டர் மிபலோவை ஆச்சரியமாகப் பார்த்தார். சாங்கோ யோசித்து வரிகளை மாற்றினான்.

''இரவு பகலை உருவாக்குகிறது, பகல் இரவை உருவாக்குகிறது. இந்த இரண்டும் உருவாகக் காரணம் சாத்தான்'' என எழுதினான் சாங்கோ. சாங்கோ என்ன எழுதினான் என்பதைப் படிக்க நினைத்த குவ்விலான் பார்த்தான். எழுதியதைப் படித்ததும் குவ்விலான் மிபலோவிடம் சைகையால் எதுவும் சொல்லாதே என நிறுத்தச் சொன்னான். ஆனால் மிபலோ நான் சொல்வதை நீ அப்படியே எழுதிக் கொண்டு வா, அவன் இஷ்டத்துக்கு எழுதட்டும் என்றான்.

ரேண்ட்டர் படகினை வேகமாகச் செலுத்தத் தொடங்கினார். நிலப்பரப்பு தென்பட்டது. படகை நிறுத்தினார். அங்கே ஆட்கள் யாருமே தென்படவில்லை. ஆனால் விலங்கினங்கள் தென்பட்டது. தன்னிடம் இருந்த ஆயுதங்களை எடுத்து வேட்டையாடத் தயாரானார் ரேண்ட்டர். மிபலோ தடுத்தான். ரேண்ட்டர் அதிசயமாக ஆயுதங்களை கீழே வைத்தார். சாங்கோவுக்குப் புரியாமல் இருந்தது. ஆனாலும் மிபலோ தடுத்தும் ஒரு விலங்குதனை வீழ்த்தினான் சாங்கோ.

சாங்கோ அந்த விலங்கினை அங்கேயே சமைத்தான். இது மிபலோவுக்குப் பிடிக்காது இருந்தது. அங்கேயிருந்த பழங்களை உண்டான். குவ்விலானும் மிபலோவின் வழியிலேயே சென்றான். ரேண்ட்டர் மிபலோவிடம் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினார். ஆனால் மிபலோவும் குவ்விலானும் மறுத்தார்கள்.

அங்கேயிருந்து படகினைச் செலுத்த பயணம் தொடர்ந்து கொண்டேயிருந்தது. கொண்டு வந்த உணவும், சேகரித்த உணவும் குறையத் தொடங்கியது. எங்கேதான் செல்கிறோம் எனக் கேட்டான் சாங்கோ, பொறுமையுடன் இரு என ரேண்ட்டர் அறிவுறுத்தினார். இந்த பயணத்தின்போது மிபலோ மிகச் சில விசயங்களையே சொல்லி இருந்தான். வழக்கம்போல சாங்கோ மாற்றிக்கொண்டே வந்தான். பலநாட்கள் பயணத்தின் பின்னர் ஒரு நிலப்பரப்பு தென்பட்டது. அனைவரும் உற்சாகமானார்கள்.

(தொடரும்)

No comments: