பழங்காலச் சுவடுகள் - 11
சிறிது நேரத்திற்கெல்லாம் மழை ஓய்ந்தது. இருவரும் ஒளி கற்கள் கோபுரத்தை அடைந்தனர். கோபுரத்தில் உள்ளே செல்வதற்காக அனுமதி பெற்று நுழைந்ததும் இருவரும் ஒருவித அமைதியை உணர்ந்தனர். மனம் இலேசாகியது. அங்கேயே பல மணி நேரம் கழிந்தது. புத்தம் புதிய உலகத்தில் இருப்பது போன்று இருந்தது.
மாலை நேரம் வந்ததும் பெருவின் இயற்கை அழகை ரசித்தபடியே பல இடங்களை சுற்றி பார்த்தனர். நேராக கோவிலில் சந்தித்தவரின் வீட்டிற்குச் சென்றனர். இவர்களின் வரவை எதிர்நோக்கியவாறே மெகாய்ட் காத்து இருந்தார்.
''வாங்க வாங்க''
''நல்ல மழை பெய்தது''
''எங்கும் தண்ணீர் தேங்கியிருக்காதே''
''இல்லை, மிகவும் துடைத்துவிட்டது போன்று இருந்தது''
''அமருங்கள், என்ன சாப்பிடுகிறீர்கள்''
''வெளியில் சாப்பிட்டுவிட்டோம்''
''பழரசமாவது அருந்துங்கள்''
''ம்ம் சரி''
பழரசங்கள் எடுத்து வந்தார் அவர். தானும் குடிக்க எடுத்துக்கொண்டார். அப்பொழுது ஒருவர் அங்கே வந்தார்.
''இதோ இவன் பெயர் ஜொவியன், மற்றொரு கோவிலில் தலைமை பூசாரியாக இருக்கிறான்''
''காலையில் சந்தித்தோம், என்மீது தெரியாமல் மோதிவிட்டார்''
''ஓ சந்திப்பு நடந்துவிட்டதா, நாங்கள் இருவர் மட்டுமே இங்கே தங்கி இருக்கிறோம்''
''திருமணம் ஆகவில்லையா''
''இருவரும் திருமணம் செய்து கொள்ள மாட்டோம், அதே கோவிலில் பணிபுரிவதே எங்கள் கடமையாக கருதுகிறோம்''
''ஒளிகற்கள் கோபுரம் சென்று இருந்தோம், மனம் இலேசாகியிருந்தது''
''பூமி எல்லாமே இப்படித்தான் இருக்கும், ஆனால் ஒரு இடத்தில கோபுரத்தைக் கட்டி அங்கே அமைதியான உணர்வும், கடவுள் உணருர தன்மையும் இருக்கிறதா பழங்காலத்தில உருவாக்கின காரணம் எப்பவும் சண்டையும் சச்சரவுமா இருக்கிறவங்களை அமைதிபடுத்தத்தான்; மொத்த பூமியும் அப்படித்தான் இருக்கும்னு உணருர மாதிரி சுவடுகளை எந்த ஒரு மனித நாகரிகமும் வளர்க்கலை, அதுதான் இன்னமும் பிரிவினைக்கெல்லாம் காரணம், இதெல்லாம் அழிஞ்சி மொத்த பூமியும் தெய்வீக உணர்வை உணருமாறு ஒரு புது நாகரிகம் தோன்றனும், அந்த நாகரிகம் எல்லாரையும் வசப்படுத்தனும், இல்லைன்னா இந்த பழங்காலச் சுவடுகள் மனசில வலியை உருவாக்கிக்கிட்டே இருக்கிற வடுக்களாகத்தான் இருக்கும்''
''எங்க நாட்டிலயும் பல கோவில்கள், சிற்பங்கள், சிந்து சமவெளி நாகரிங்கள்னு எல்லாம் சிதைந்து போயிருக்கு''
சின்னசாமி பேசி முடித்ததும் அகிலா சொன்னாள்.
''இரகசியங்கள் பத்தி சொல்லுங்க''
அப்பொழுது அந்த இரவில் ஒரு சிலர் அங்கே வந்தார்கள். வந்தவர்கள் நேராக மெகாய்ட்டிடம் இரகசியங்களைத் தருமாறு கேட்டார்கள். மெகாய்ட் மறுத்தார். வந்தவர்கள் இதோடு பலமுறை வந்துவிட்டதாகவும் இனிமேலும் பொறுமை காக்கமுடியாது என்றும் கோபத்துடன் கூறினார்கள். அகிலாவையும் சின்னசாமியையும் பார்த்தார்கள். இவரிடம் இரகசியங்கள் பெற வந்திருக்கிறீர்களா எனக் கேட்டுக்கொண்டே இரகசியங்கள் பெற்று இருந்தால் உடனடியாகத் தருமாறு கேட்டார்கள். அகிலாவும் சின்னசாமியும் இல்லையென சொன்னார்கள். ஜோவியன் அவர்களை அங்கிருந்து போகுமாறு கேட்டுக்கொண்டான். ஆனால் அவர்கள் இந்த முறை இரகசியங்கள் பெறாமல் செல்வதில்லை என மேலும் சொன்னார்கள்.
சின்னசாமி மெகாய்ட்டிடம் இரகசியங்கள் தந்துவிடுமாறு கூறினார். மெகாய்ட் ஒரு சின்னதாளில் எழுதி அந்த மனிதர்களிடம் கொடுத்தார். பூமியில் எல்லா இடமும் அமைதியானது என்பதை உணர்த்தும் வகையில் எந்த ஒரு நாகரிகமும் தோன்றவில்லை அதுவே இந்த பூமியின் இந்த கொடூர நிலைக்கு காரணம் இதுவே ஒவ்வொருவரும் அறிய வேண்டிய இரகசியம் என்பதை வாசித்ததும் வந்தவர்களின் ஒருவன் மெகாய்ட்டின் தலையில் ஓங்கி அடித்தான். தடுக்க வந்த ஜோவியனை மற்றொருவருன் தாக்கினான். பலமாக இருவரையும் அடித்துவிட்டு அகிலாவையும் சின்னசாமியையும் ஒன்றும் செய்யாது ஓடினார்கள். மெகாய்ட் முனகினார். அகிலாவும் சின்னசாமியும் செய்வதறியாது பயத்தில் உறைந்து போயினர். மெகாய்ட் கோவிலில் கிழக்குப்பகுதியில் ஒரு சுரங்க அறை ஒன்று இருப்பதாகவும் அங்கேதான் எல்லா உலக ரகசியங்கள் இருப்பதாகவும் எப்படியாவது இந்த நாட்டில் தங்கிவிடுமாறும் கூறிக்கொண்டே சாவியினை சின்னசாமியின் கைகளில் தந்து மரணம் அடைந்தார். ஜொவியன் முன்னரே மரணமடைந்து இருந்தான்.
காவல் அதிகாரிகள் வந்தனர். அகிலாவும் சின்னசாமியும் நடந்ததை சொன்னார்கள். சுரங்க அறைக்கான சாவியை தந்தார்கள். இருவரின் நேர்மையை காவல் அதிகாரிகள் போற்றினார்கள். உடனே எந்த கூட்டம் இதற்கான பின்னணியில் இருக்கும் என கண்டுபிடித்து அந்த இரவோடு இரவே அவர்களை சிறையிலடைத்தனர். மறுநாள் கோவிலில் அகிலா சின்னசாமியை வைத்தே சுரங்க அறையை திறந்தனர். அங்கே சூரியன் ஒளி தருவது போன்று சுவரெல்லாம் வரையப்பட்டு இருந்தது. மொத்த பூமியும் ஒன்றான நிலப்பரப்பாக இருந்தது போன்ற வரைபடம் எல்லாம் இருந்தது. எகிப்தியர்கள் மாயன்கள் இடத்திற்கு வந்து போனதாகவும் ஆரியர்கள் எகிப்துக்கு வந்து சென்றதாகவும் குறித்து இருந்தது. லெமூரியர்களும் மாயன்களும் அட்லாண்டிஸுகளும் தொடர்புடையவர்களாக காட்டி இருந்தது. அஜ்டெக்குகளும் இன்கா சமூகமும் தொடர்புடையவை என குறித்து இருந்தது. அந்த அறையின் சுவர்களிலே இந்த விபரங்கள் மட்டும் குறிக்கப்பட்டு இருந்தது.
அறையில் இருந்த இரும்பு பெட்டிகளை திறந்தபோது ஏடுகள் இருந்தது. அதை எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தினர். அகிலாவும் சின்னசாமியும் உடன் இருந்தனர். நாம் அறியாத ஒரு நாகரிகம் பற்றி குறிப்பிட்டு இருந்தது. மேலும் மாயன்கள் இன்கா அஜ்டெக்குகள் எகிப்தியர்கள் பயன்படுத்திய நாட்காட்டிகள் இருந்தது. பல்லாயிரக்கணக்கான வருடங்கள் வாய்மொழியாகவே விசயங்கள் சொல்லப்பட்டு வந்திருக்கின்றன என்பதை மறுக்கும் வண்ணம் பல இலட்ச வருடங்கள் முன்னரே எழுத்துக்கள் உருவாக்கப்பட்டன என்பதை பறைசாற்றும் வண்ணம் அந்த ஏடுகள் இருந்தது. அந்த எழுத்துக்களைப் பார்த்து அகிலாவும் சின்னசாமியும் பரவசமடைந்தனர். அனைத்து ஏடுகளும் தமிழ் மொழியிலே எழுதப்பட்டு இருந்தது. எழுத்துக்கள் இந்திய எண்களே என பறைச்சாற்றும் வண்ணம் பூச்சியம் எல்லாம் இருந்தது. கடைசியாக எழுதப்பட்ட வருடம் 129304 என குறிக்கப்பட்டு இருந்தது.
ஒவ்வொரு வருடத்திற்கு ஒரு பக்கம் மட்டுமே எழுதி இருந்தது. ஒரு வருட நிகழ்வுகளை மொத்தமாக குறிப்பிட்டு இருந்திருக்கக்கூடும் என சின்னசாமி யோசனை சொன்னார். அகிலாவும் வரலாற்று நிகழ்வுகளை நினைவுபடுத்திப் பார்த்தார், கடைசி எழுதிய வருடங்களில் இருந்த குறிப்புகள் நாம் அறிந்த நமக்குத் தெரிந்த வரலாற்று குறிப்புகளுடன் தொடர்புடையதாக எதுவும் இல்லை. முதல் பக்கத்தில் சூரியன் வரையப்பட்டு சின்ன சின்ன துகள்கள் போன்று வரைந்து இருந்தது. இரண்டாம் பக்கத்தில் உலக ரகசியம் உரைக்கப்பட்டு இருந்தது. மேலும் சில பகுதிகள் மட்டும் வாசித்துப் பார்த்ததில் உலகம் யாவும் அமைதியாகவே இருந்து இருக்கிறது. ஒரே நாகரிகம் தான் இருந்து இருக்கிறது என்பதை அறிய முடிந்தது. மனிதன் எப்படியெல்லாம் பரிணாம வளர்ச்சி அடைந்திருப்பான் என கையில் கத்தியும் வேலும் கொடுத்தது நமது கொடூர எண்ணங்களேயன்றி அதையே கருத்தில் கொண்டு கொடுங்கோலர்களாய் வளர்ந்தது, வளர்ந்து கொண்டிருப்பது நமது குற்றமேயன்றி மனிதர்கள் மனிதத்தோடு வாழ்ந்தார்கள் என ஒரு நாகரிகம் இருந்தது என்பதை எந்த ஒரு சுவடும் இல்லாமல் ஆக்கியது நாமே என அறிய முடிந்தது.
தனித்தனி நாகரிகங்கள் பற்றிய குறிப்புகளும் இருந்தது, அது அந்த அந்த நாகரிக சம்பந்தபட்ட மொழி தொடர்புடையதாக இருந்தது. நாம் அறிந்த தெரிந்த வரலாறும் அந்த சுரங்க அறையில் இருந்தது. தமிழ் சம்பந்தபட்ட விசயங்கள் மட்டும் பெற்றுத்தருமாறு அரசிடம் கோருமாறு இருவரும் வேண்டினர். அரசு அதனை நகல் எடுத்து தருமாறு உடனே உத்தரவிட்டது. இவையெல்லாம் எப்படி கோவிலில் வந்தது என்பது குறித்து விசாரணையை தொடங்க அரசு காவல்துறைக்கு ஆணையிட்டது. இதை ஒரு செய்தியாக வெளியிட காவல்துறையினர் மறுத்துவிட்டனர். மெகாய்ட் மற்றும் ஜொவியன் முன்விரோதத்தினால் கொலை என மொத்த விசயத்தையும் அரசு கட்டளைப்படி மறைத்தது.
அகிலாவும் சின்னசாமியும் பெரு நாட்டிலிருந்து தேன்நிலவு முடித்து தமிழகம் வந்தனர். சின்னசாமியின் தந்தை அகிலாவை அன்புடன் வரவேற்றார், சிலவாரங்களில் அவர் விமான நிலையத்தில் என்ன சொன்னார் என்பதையே மறந்து இருந்தார்.
அந்த மொத்த எழுத்துக்களையும் புத்தகமாக எழுதி வெளியிட இருவரும் திட்டமிட்டனர். அதற்கான தலைப்பும் தேர்ந்தெடுத்தனர். அந்த பழங்காலச் சுவடுகள் மூலம் உலகத்திற்கு ஒரு புதிய நாகரிகத்தை அவர்கள் காட்டிட எண்ணினார்கள். அந்த நாகரிகத்தை பற்றி தெரியவந்தால் இந்த மொத்த மனித குலமும் மனிதம் என்பதை பற்றி உணரும் என நம்பிக்கை கொண்டார்கள். அகிலா முதல் வரி எழுதினாள். இன்றைய மனிதர்கள் தலைகுனிந்தார்கள்.
முற்றும்.
No comments:
Post a Comment