இறைவனும் இறைஉணர்வும் – 1
இத்தொடரைத் தொடங்கிட கடவுள் வாழ்த்து எழுத வேண்டும், ஆனால் இப்பொழுது எந்த இறைவனுக்கு வாழ்த்துச் சொல்லி எழுதுவது? எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இறைவன்கள் எல்லாம் எனக்கு மனிதர்களாகவேத் தெரிகிறார்கள் அல்லது இறைவனே மனிதவடிவில் கடவுளராக வந்ததாகச் சொல்லி இருக்கிறார்கள். மொத்தத்தில் இறைவன் இறைவனாகவே வந்ததாக எனக்கு பாடம் எவருமே நடத்தவில்லை அதாவது அப்படியொரு பாடத்தை நான் இதுவரை கற்றத் துணிந்தது இல்லை என எழுதுவதே மிகச்சரியாக இருக்கும். அசரிரீ என்றெல்லாம் கேள்விபட்டு, மனதில் உள்ளே குரல் ஒலிக்கிறது என்றெல்லாம் சொல்லிவிடும் தருணம் எதுவாக இருப்பினும் இறைவனின் குரல் இதுநாள்வரை நான் கேட்டதே இல்லை. இது இப்படியிருக்க எங்ஙனம் இறைவன் வாழ்த்துத் தொடங்குவது?.
தெய்வப்புலவர் எனப் போற்றப்படும் திருவள்ளுவர் எழுதிய கடவுள் வாழ்த்து போல் எழுதினால் திருவள்ளுவர் சமணர், இந்து என அவர் மீது சமய, மத முலாம் பூசுவது போல் இந்த எழுத்துக்கு ஆகிவிடும், அவரது அரிய கருத்துக்கள் பேச்சுப்போட்டிக்கும், கட்டுரைப்போட்டிக்கும் மிகவும் பயனுள்ளதாக இருப்பது போல எனது எழுத்தும் ஆகிவிடும் எனும் அச்சமெல்லாம் எனக்கு இல்லை. என் பெயரைப் பார்த்ததும் வைணவன் என அவரவராக முடிவு கட்டிக்கொள்வார்கள், ஒருவேளை எனது எழுத்துக்களைப் பார்த்து இறைநம்பிக்கை அற்றவன் என முடிவுக்கும் பலர் வரக்கூடும்.
ஒருவருக்கு இறை நம்பிக்கை இருக்கிறதா? இறை நம்பிக்கை இல்லையா? என்பதா நமது வாழ்க்கையில் முக்கியம் என்பது பலருக்குத் தெரியாது என எழுதும்போதே அவரவருக்கு அததது முக்கியமாக இருக்கும் என்பதையும் குறிப்பிட்டுவிட்டேனெனில் மிகச் செளகரியமாக இருக்கும். இதைச் சொல்வதற்குக் காரணம் இறைவன் அவரவர் செளகரியத்துக்கு ஏற்ப மாற்றப்பட்டார் என்றால் எவரேனும் மறுப்புத் தெரிவித்து விடுவீர்களோ என எண்ணுவதற்கெல்லாம் இடமே இல்லை. எங்கேயும் இறைவன் இறைவனாக காட்சித் தருவதில்லை, ஆனால் காட்சிப் பொருளாகக் காட்டப்படுகிறார் அது வெற்றிடமாக இருப்பினும் கூட! இறைவன் மேல் அலாதிப் பிரியம் எனக்கு உண்டு. ஆகவே எந்த இறைவனுக்கு வாழ்த்துச் சொல்வது என்பதை ஒரு பொருட்டாக கருதாமல் அனைத்துலகுக்கும் சொந்தமான இறைவனுக்கு ஒரு வாழ்த்து எழுதுவதே முறையாகும்.
இறைவன் வாழ்த்து.
மறைந்திருக்கும் உண்மையே நீயாவாய்
மறைமூலம் வெளிப்படுத்தப்பட்ட உண்மையும் நீயாவாய்
உண்மையாய் இருப்போர்க்கே உண்மையராய்
உம்மையும் எமக்கு அறிவித்தார் இப்பாரினில்
முதலாய் முடிவாய் இருப்பவராய்
இடையில் எம்மை இருந்திடச் செய்தீரோ
புதையலாய் எங்கு புதையுண்டீர்
தடையின்றி உள்ளத்தில் இருப்பீராம் அறிவித்தார்
ஆக்கிட அழித்திட முடியாது
அணுவின் சிறப்பைப் போல நீயிருப்பாய்
நீக்கமற நிறைந்திருக்கும் சிந்தையே
பணிவுடன் யாம் வாழ்த்துவோம் உம்மை.
உண்மையாய் இருப்போர்க்கே உண்மையினைப் பற்றித் தெரிய வாய்ப்புண்டு. அதாவது உண்மை என நம்பிக்கைக் கொண்டோர்க்கு என அர்த்தப்படுத்திக் கொள்வதேச் சாலச் சிறந்தது. மனிதர்களாகிய ஞானிகள் உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் பொருட்டு தாங்கள் அறிந்தவற்றை பேசியதன் மூலம் இறைவனை வெளிக்கொண்டு வர முயற்சித்தார்கள். பின்னர் எழுத்துக்கள் மூலம் எழுதி இறைவனை உலகுக்கு அறிமுகம் செய்தார்கள். இறைவன் அவரவருக்கு மட்டுமேத் தெரிந்த உண்மையாக இருப்பதாகக் காட்டப்பட்டது. அனைவருக்கும் தெரிந்த உண்மையாக இறைவனைக் கொண்டுவர வேண்டுமென எழுதப்பட்டதுதான் மறை நூல்கள்.
இந்த மறை நூல்கள் மறைந்திருக்கும் உண்மையை வெளிச்சொல்ல வந்ததேயெனினும் இறைவன் இரகசியமானவனாகவே இருந்து வருகிறான், இல்லையெனில் இறைவன் மறுப்புக்கொள்கை ஒன்று தோன்றியிருக்கவே இருக்காது, மேலும் ஒரு இறைவனைச் சொல்ல பல வேதங்கள், மதக் குருமார்கள், ஞானிகள் என அவசியமே இருந்திருக்காது. எல்லா மக்களும் இறைவன் என நிம்மதியாய் இருந்திருப்பார்கள். மனிதர்களுக்கு இறைவனின் அவதாரங்கள், தூதர்கள் என இறைவனை வலியுறுத்திய வசனங்களுக்குத் தேவை ஏற்பட்டிருக்காது. இறைவனை அடைய பல வழிகள் என இருக்கும் நம்பிக்கைகள் எல்லாம் சரியே என சொற்பொழிவு ஆற்ற வழியின்றிப் போயிருந்திருக்கும். மேலும் இதுபோன்ற காரியங்களால் மட்டுமே இறைவன் தனிமைப்படுத்தப்பட்டு உண்மை அறிவு சாதாரண பார்வைக்கு மறைந்தே இருப்பது போல் தோற்றம் அளிக்கிறது.
அப்படியெனில் இறைவன் யாராக இருக்கக் கூடும்? என்றே கேட்டு வைத்தேன். கொஞ்சம் கூட யோசிக்காமல் எதைப் பற்றியும் சிந்திக்காமல் உடனடியாக பதிலும் வந்து விழுந்தது, இறைவன் யாராகவும் இருக்கக் கூடும். உண்மையிலேயே இறைவன் யாராகவும் இருக்கக் கூடுமோ?!
(தொடரும்)
No comments:
Post a Comment