Wednesday, 4 February 2009

லெமூரியாவும் அட்லாண்டிஸும் - அத்தியாயம் 1 தொடர்ச்சி.

காபி ரொம்ப சூடாத்தான் இருந்தது. அப்படியே சூடான காபியை குடிச்சதும் நாக்கு சுட்டுக்கிட்டது. ஸ்... சத்தம் கேட்டதும் பதறிப்போய் வீட்டுக்காரி ஓட முடியாம ஓடிவந்துட்டா. 'பாத்து குடிக்கப்படாதோ' அப்படினு சொல்லிட்டு டம்ளரை வாங்கிட்டுப் போனா. நாக்கு சுர்னு சுட்டுக்கிட்டே இருந்தது. அப்படியே அந்த ரங்கநாதனை பார்த்துட்டே இருந்தேன். அப்பத்தான் எனக்கு ஒரு யோசனை தோணிச்சி. இப்ப எழுதறப்ப எல்லாம் வேகமாக எழுத முடியறதில்லை, வரிக்கு வரி தகினதத்தோம் போடுது. சொல்ல சொல்ல யாராவது எழுத மாட்டாங்களானு அப்படியே அந்த வானத்தையே பார்த்துட்டு இருந்தேன். அப்பத்தான் தெரிஞ்சிச்சி, மாலை நேரம் ஆயிருச்சினு. அப்படியே எழுதுறதை எழுதாம எடுத்து வைச்சிட்டு போய் ஸ்நானம் பண்ணிக்கிட்டேன். வீட்டுக்காரியும் ஸ்நானம் பண்ணி தயாரா இருந்தா. 'போலாமா' னு கேட்டுக்கிட்டே வீட்டை பூட்டிட்டு நானும் வீட்டுக்காரியும் ஸ்ரீரங்கநாதனை சேவிக்க கிளம்பினோம்.

என்னை பத்தி அறிமுகம் சொல்லலை, நான் யாரோனு நினைச்சிட்டு இருப்பீங்கதான. என் பேரு தேவநாதன், எல்லோரும் நாதா நாதானு கூப்பிடுவாங்க, நீங்களும் அப்படியே கூப்பிடுங்க, என்னோட வீட்டுக்காரி பேரு தேவநாயகி, அவளை நாயகி நாயகினு கூப்பிடுங்க. மெல்ல நடந்து கோபுர வாசலை அடைஞ்சோம்.

மலர்கள் எல்லாம் நல்லா மணம் வீசிட்டு இருந்தது, அப்படியே மல்லிகைப்பூ வாங்கி வீட்டுக்காரிக்கு வைச்சி விட்டேன். அவளும் வெட்கத்தில சிரிச்சா. நானும் சிரிச்சேன். மெல்ல பிரகாரத்துக்குள்ள நுழைஞ்சதும் 'ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்' அப்படினு ஆண்டாள் பாசுரம் மெல்லியதா காதுல விழுந்தது. இப்ப எல்லாம் திருப்பாவை எல்லாம் மறந்துட்டு வருது எனக்கு.

'நீங்க இப்ப எல்லாம் பக்தி பாடலை எல்லாம் கேட்கறதில்லைன்னா' அப்படினு வீட்டுக்காரி சொன்னதும் 'நீ பாடேன், நான் தினமும் கேட்கறேனு' சொன்னதும் அந்த கோவில் பிரகாரத்தில் கம்பர் அரங்கம்னு ஒன்னு இருக்கு, அது பக்கத்தில நின்னு 'மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள்' னு பாட ஆரம்பிச்சிட்டா. அவ பாடினதை கேட்டதும் கூட்டம் கூடிருச்சி. எல்லாரும் சேர்ந்து பாட ஆரம்பிச்சிட்டாங்க. நானும் முணுமுணுக்க ஆரம்பிச்சிட்டேன். முப்பது பாசுரத்தையும் அத்தனை அழகா பாடினா. எல்லோரும் 'மாமி ரொம்ப நல்லா பாடினேள்'னு பாராட்டிட்டு போனாங்க. நான் ஒவ்வொருத்தரா போனப்பறம் அவகிட்ட போய் 'தேனாட்டம் இருந்தது நாயகினு' வார்த்தை வராம சொன்னேன். அவ கண்ணுல இருந்து பொல பொலனு கண்ணீர் கொட்ட ஆரம்பிச்சிருச்சி. 'அந்த ரங்கநாதர் கேட்டுருப்பாரோன்னா' என நா தழுதழுத்தாள். எனக்கு என்ன சொல்றதுனு தெரியலை, இருந்தாலும் ஒரு நம்பிக்கையில நிச்சயம் கேட்டுருப்பார்னு சொன்னதும் அவ முகம் மலர்ந்தது.
ஸ்ரீரங்கநாதனை சேவிச்சோம். 'ஏன்னா அவா கேட்டுருப்பானு எப்படி சொல்றேள்'னு கேட்டா. 'உன் குரலை கேட்காம அவா எப்படி இருப்பா'னு சொன்னேன். 'நீங்க பொய் சொல்றேள்னா, என்னோட எல்லாரும்தானே பாடினா'னு சொன்னா. 'அசடே உன் குரல் மட்டும்தான் என் காதுல விழுந்தது'னு சொன்னதும் 'அப்படின்னா அவா கட்டாயம் கேட்டுருப்பான்னா' னு அவளுக்கு நம்பிக்கை வந்தது. அப்படியே பிரகாரத்தில ஓரிடத்தில உட்கார்ந்தோம்.

'புதுசா என்ன கதை எழுதப் போறேள்' னு கேட்டு வைச்சா. 'என்ன எழுதப் போறேன் நானு, எதாவது ஒரு ஜீவனைப் பத்தித்தான் எழுதனும்' னு சொன்னதும் கோபுர தூணையெல்லாம் பாத்துட்டு இருந்தா. என்னோட நாலு கதையும் படிச்சிட்டு நல்லா இருக்குனு பாராட்டின மகராசி அவ. என்னோட கதை அவளுக்கு மட்டும்தான் தெரியும். பெத்த புள்ளைகளுக்குக் கூட கதையைப் பத்தி ஒரு மூச்சும் விடல. 'இந்த வாட்டி மனுசாளைப் பத்தி எழுதுங்கோண்ணா' னு சொன்னதும் எனக்கு பகீருன்னு ஆயிருச்சி.

மனுசாளைப் பத்தி என்ன எழுதப் போறோம், எல்லாம்தான் எழுதிட்டே இருக்காங்கனு சொன்னேன். 'இல்லைண்ணா மனுசாளைப் பத்தி எழுதுங்கோ'னு திரும்பவும் சொன்னா. ஐஞ்சாவது எழுத்து மனுசாளைப் பத்தி எழுதனும் போல இருக்குனு சொல்லிட்டு, ஆனா என்னால வேமா எழுத முடியறதில்ல, யாராவது நா சொல்ல சொல்ல எழுதினா நல்லா இருக்கும்னு என் யோசனையை சொன்னேன். அதுக்கு அவ 'உங்களால எப்ப எழுத முடியாத நிலை வருதோ அப்போ சொல்லுங்கண்ணா, நான் எழுதுறேன், அதுவரைக்கும் நீங்களே கைப்பட எழுதுங்கோண்ணா' னு சொன்னதும் எனக்கு புதுத் தெம்பு வந்த மாதிரி இருந்திச்சி. பிரசாதம் அங்கேயே சாப்பிட்டோம். நீங்களும் சாப்பிடறீங்களா?

(தொடரும்)

No comments: