Thursday, 31 December 2009

சென்னை புத்தக கண்காட்சி கடை எண் 402




தமிழ் அலை வடிவமைப்பில் வலைமொழி பதிப்பகத்தினரால் வெளியீடு செய்யப்பட்ட 'வெறும் வார்த்தைகள்' எனும் எனது கவிதைத் தொகுப்பு சென்னை புத்தக கண்காட்சியில் கவிஞர் அறிவுமதியின் 'வெள்ளைத்தீ எனும் நூலுடன் கிடைக்கப் பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நல்லதொரு வாய்ப்பை வழங்கிய தமிழ் அலை நிறுவனத்தாருக்கு எனது பணிவான வணக்கங்கள்.

மிகவும் நன்றி இஷாக்.

Wednesday, 16 December 2009

எழுத்துக்கு என்ன வயது?

பல வருடங்களாக எழுதிக்கொண்டே இருந்தாலும் எழுத்து என்னவோ அப்படியேதான் இருக்கிறது.

1994ல் எழுதின ஒரு கவிதையை என்னோட சின்ன சகோதரி படிச்சிப் பார்த்துட்டு 'என்னடா எழுதுற' எனத் திட்டிய 'திரும்பிப் பார்' கவிதைத் தொலைக்கப்படவே இல்லை. எனது சிந்தனைகள் தொலைக்கப்படவும் இல்லை.

வலைப்பூவில் எனது எழுத்துகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் நான் பெற்ற நண்பர்கள் சிலர். சிங்கையைச் சார்ந்த நண்பர் கோவியாரை இலண்டனில் சமீபத்தில் சந்தித்தேன். அவர் வலைப்பூவில் நான் பின்னூட்டம் எழுதும்போது என்னை 'ஐயா' என்றே விளித்து வந்தார். எனக்குக் காரணம் தெரியாது. எனது வயதோ, புகைப்படமோ அவர் பார்த்தது இல்லை.

ஒரு உணவகத்தில் குடும்பத்தாருடன் இனிய சந்திப்பு நிகழ்ந்தது. என்னை முதன்முதலில் பார்த்த அவர் ஏமாற்றம் அடைந்துவிட்டார் என்பதை நேரடியாகவேச் சொன்னார்.

'உங்க எழுத்துகளைப் பார்த்து உங்களை ரொம்ப வயசானவருனு நினைச்சிட்டேனே' என்றார்.

என்னை நேரில் பார்த்தாலும் வயது அதிகமாகத்தான் தெரிவேன் என்பது வேறு விசயம். அதை நிரூபிக்கும் வகையில் அவரது கேள்வியும் இருந்தது.

'உங்களுக்கு ஒரு 43 இருக்குமா?' என்றார்.

'இல்லை 34' என்றேன்.

எழுத்துக்களைப் பற்றிப் பொதுவாக பேசினோம். பலர் என்னை வயதானவனாகவே நினைக்கிறார்கள். மேலும் நான் எழுதுவது புரியும்படியாக இல்லை எனும் குறைபாடும் உண்டு என சொன்னேன்.

எனக்குள் எழுந்திருக்கும் சில கேள்விகள், எனக்கு வயதாகிக் கொண்டே இருப்பதால் இன்னும் சில பல வருடங்களில் எனது எழுத்துக்கும் எனக்கும் ஒரே வயது எனும் நிலை வருமோ? அதிசயிக்க வைத்த அப்பர், திகைக்க வைத்த திருஞானசம்பந்தர், தமிழ் ஆட்சி செய்த ஆண்டாள் என எழுதியவர்களின் எழுத்துக்கும் வயது உண்டோ?! உங்கள் எழுத்துக்கும், உங்கள் வயதுக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டோ?

Saturday, 12 December 2009

தமிழ்மணம் விருதுகள் - ஏக்கத்துடன் என் பதிவுகள்.

சிறுகதைப் போட்டிகள் அறிவிக்கப்பட்டு இருந்த நேரம் அது. சிறுகதை எழுதிவிடலாம் என தலைப்புகள் எல்லாம் தயார் செய்து காத்துக்கொண்டிருந்த நேரம் அது.

எனது கதை ஒன்றைப் பாராட்டி வித்யா அவர்கள் விருது வழங்கிய நேரம் அது. என்னை கோவியார் சந்தித்துச் சென்ற தருணமும் அது. இப்படி பல தருணங்கள் ஒன்றாய் சேர்ந்திருக்க இதையெல்லாம் தாண்டிய ஒரு தருணமும் என்னை நெருங்கிக்கொண்டிருந்தது. அதற்காக கொஞ்சம் எழுத்துப் பணியைத் தள்ளிவைத்துவிடலாம் என எண்ணம் கொண்டு தமிழ் உலகத்தையே சற்று மறந்துவிட்ட காலங்கள் என ஒரு மாதம் ஓடிப் போய்விட்டது.

இவ்வேளையில் என்னைச் சந்திக்க விரும்பிய மூத்த பதிவர் சீனா அவர்களைக்கூடத் தொடர்பு கொள்ள இயலாத வகையில் காலமும் நகர்ந்து போனது எனக்கே வியப்பாகத்தான் இருக்கிறது.

இந்நிலையில் தமிழ்மணம் விருதுகள் பற்றிய அறிவிப்பைப் பார்த்தேன். அதில் எனது பதிவுகளை இணைக்க நினைத்தபோது எதுவுமே இணைக்கமுடியாதபடி எல்லாம் வேறொரு இணையதளத்தில் வெளியானவை என நினைத்தபோது விருதிற்கு பரிந்துரை செய்ய தகுதியற்றுப் போனது என் பதிவுகள்.

இந்த சூழலில் எனது முதல் கவிதைத் தொகுப்பான 'வெறும் வார்த்தைகள்' அச்சிடப்பட்டு வெளியீடு செய்யப்படக் காத்துக் கொண்டிருக்கிறது. அடுத்த முறை விருதுக்கென பரிந்துரை செய்யும்வகையில் சில பதிவுகளும் எழுதிவிடலாம் எனும் எண்ணம் எழாமல் இல்லை.

விருதுகள் பெற்றிட அனைவரையும் வாழ்த்துகிறேன். மிக்க நன்றி.

Monday, 2 November 2009

விழுதுகள் நாங்கள்

தமிழ் மொழி தந்த அடையாளம்
தரணியெங்கும் பெயர் சொல்லும்
தமிழ்தனை மொழியாகக் கொண்டதால்
சொந்த நாட்டில் இடமின்றி போகுமோ?

விதையது விதைத்த நிலம்
புதையுண்டு போகுமோ எங்கள் பலம்
கதையதை பிறிதோர் பேசிட
பதைபதைக்குமோ எங்கள் நெஞ்சம்

உலகமெலாம் பரந்து விரிந்தோம்
உள்ளூரில் எங்கள் உயிர் துறந்தோம்
வேர்தனை வெட்டி வீழ்த்திட்டாலும்
விழுதுகளாய் எம்மினம் தாங்கி நிற்போம்

கேடுகளால் நலிந்தது எங்கள் மனம்
ஆறுதலற்றுப் போயினும், எம் சனம்
தேடுதலைத் தொலைத்திடாது
தமிழ் ஈழமே எங்கள் கவனம்

உயிர் கொல்லப்படலாம் எம் இனமே
உரிமையது கொல்லப்பட விடுவோமா
அதர்மம் வென்றது போன்றே தோன்றும்
கொண்ட தர்மம் அது வென்றே தீரும்

எமது குரல்கள் உலகமெலாம் ஒலித்திடும்
எமது ஈழத்து கனவு பலித்திடும்
எமது மரக்கிளைகள் ஒருபோதும் பட்டுவிடாது
விழுதுகளாய் நாம் தாங்கி நிற்போம்

பிஞ்சு குழந்தைகள் என்ன செய்தன
நஞ்சை ஊட்டியே நசியச் செய்தனன்
நெஞ்சம் கசிந்து எம் இனம் அலறினும்
அஞ்சி ஒளியோம் அறிந்து கொள்ளடா

எமக்கென்று ஓரிடம் உன்னிடம் கேட்க
தமக்கென்று எல்லாம் வைத்துக் கொண்டாய்
எமதிடத்தை உனதிடமாக்கிய உனது
கள்ளத்தனத்தைத் தூள் தூளாக்குவோம்

ஒரு கை மட்டும் அல்ல உதவிட
ஓராயிரம் கைகள் உண்டு எம்மிடம்
உன் மூச்சுத் திணறலைப் பார்த்திடும்
நேரம் நெருங்கியே விரைவில் வந்திடும்

எங்கள் இனத்தை நீ நசுக்கிட
போடும் வேசங்கள் எத்தனையோ
எங்கள் இனமது மீண்டிடும்
விழுதுகளாய் இருந்தே காக்கின்றோம்

வேரோடு அழித்திட நீ புறப்பட்டாய்
சேறினை முகத்தில் நீ பூசிக்கொண்டாய்
வீரம் விளைந்த நெஞ்சத்து
விழுதுகள் கொண்டே ஜெயித்திடுவோம்

எத்தனை கொடிய அரக்கன் நீ
அத்தனைக்கும் உனக்கு பதிலிருக்கு
எட்டப்பர்கள் யாவரும் உன்னிடமே
உன்னை குட்டிக் குட்டியேக் குலைத்திடுவார்

தமிழ்ஈழம் எங்கள் கனவு
தமிழ்ஈழம் எங்கள் வாழ்க்கை
தமிழ்ஈழம் எங்கள் பயணம்
தமிழ்ஈழம் அடைந்தே தீர்வோம்.

Wednesday, 28 October 2009

ஆன்மிகம் என்றால் சைவமா? யோகன் ஐயாவிற்கான பதில்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//ஆன்மிகம் என்பது உள்ளுணர்வு எனக் கொள்வதோடு மட்டுமின்றி, வாழ்க்கையில் நேர்மையாகவும், நியாயமாகவும், நீதி தவறாமலும், ஒழுக்கமாகவும், அமைதியாகவும், தன் மற்றும் பிற உயிரினங்களின் மேல் அன்பு செலுத்தக்கூடியதாகவும் இருப்பது. //

மிக அருமையான முத்தாய்ப்பு...என்னை வெகுநாட்களாக குடையும் கேள்வி!


நான் அசைவம் உண்பவன். எனவே" குருவிக்கு அரிசியைப் போட்டுவிட்டு"; மற்றைய உயிர்கள் மேல் அன்பு செலுத்துகிறேனெனச் சொல்வது சுத்த பொய்.

//ஒரு உண்மையை மிகவும் தைரியமாகச் சொன்னதற்காக எனது பணிவான வணக்கங்கள் ஐயா. நீங்கள் அசைவம் உண்பது என்பது தங்களின் உணவுப் பழக்க வழக்கம் என எடுத்துக் கொள்ளலாம் //

இதே வேளை ஆத்மீக வாதியாக வாழ ;

அன்புடையவனாக வாழ ;

ஒழுக்க சீலனாக வாழ;

உண்மைபேசுபவனாக வாழ;

உழைத்து உண்பவனாக வாழ..

அவன் சைவ உணவுதான் உண்ண வேண்டுமா? ஆமெனில் துருவத்தில் வாழும் மக்கள், இந்தோனேசியக் காட்டுவாசிகள்; அமேசன் காட்டு வாசிகள், வேடர்கள் இவ்வுலகில் வாழத் தகுதியற்றவர்களா? அவர்களிடம் ஆத்மீகம் இல்லையா?


//சைவ உணவு உண்பவர்கள் மட்டுமே மேற்கூறப்பட்ட குணநலன்களுடன் வாழ்கிறார்கள் என வரையறுத்துவிட இயலாது என்பதுதான் உண்மை. அதே வேளையில் மேற்கூறப்பட்ட குணநலன்களுடன் அசைவ உணவு உண்பவர்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் உண்மைதான். சைவ உணவுப் பொருட்களை உண்டு ஒரு உயிரினத்தால் வாழ இயலும் எனச் சூழ்நிலைச் சந்தர்ப்பங்கள் இருக்கும்போது ஏன் அசைவ உணவு வகைகளை உண்டு வாழும் நிலையை உருவாக்கிக் கொண்டோம் எனச் சிந்தித்துப் பார்ப்பது அவசியமாகும். அசைவ உணவு உண்பவர்கள் வாழத் தகுதியற்றவர்கள் எனச் சொல்ல இயலாது, அவர்களிடம் ஆன்மிகம் இல்லை எனவும் மறுக்க இயலாது. எனினும் இதன்படி நடந்தால் சிறப்பு என்று மட்டுமே ஒரு விசயத்தைச் சுட்டிக் காட்ட இயலும், ஏன் அதன்படி நடக்காமலும் சிறப்பாக இருக்க இயலாதா எனக் கேள்வி கேட்டால் இரு சிறப்புகளுமே வெவ்வேறு அர்த்தம் கொண்டவை என்று மட்டுமேச் சொல்ல இயலும் //


எனவே இந்த மற்றும் உயிர்மேல் அன்பென்பது ஒரு இடைச்செருகல்... குறிப்பாக இடைக்கால இந்தியாவில் உள்னுளைந்த சமாச்சரமோ? ஆடையே இல்லாமல் வாழ்ந்த மனிதன் ஆடைகட்டி; இப்போ மானம் காக்கிறோம்; என்று சொல்வது போல்.


//காலப்போக்கில் எல்லாமே மாற்றம் கொள்ளும் நிலையை அடைந்தது. உயிர் கொன்று வாழும் மனித இனங்களே முன்னாலிருந்தது. நரபலி கொடுக்கும் மனிதர்களும், நரமாமிசம் சாப்பிடுவோர்களும் வாழ்ந்து வந்தனர். எதையுமே சாப்பிடும் சீனர்கள் என ஒரு பொது கருத்தும் உண்டு. பிற உயிர்களை கொலை செய்வது என்பது மட்டும் பார்க்கப்படவில்லை, பிற உயிர்களை வதைத்து வேலை வாங்கும் தன்மையும் கண்டு இளகிய மனம் படைத்தோர் உருவாக்கிய எண்ணம் எனக் கொள்ளலாம். பிற உயிர்கள் என்பது சக மனிதரையும் குறிக்கும் என்பது முக்கியம். //


அதனால் ஆத்மீகத்துக்கும் மற்றைய உயிர் கொல்லாமல் வாழ்வதற்கும்;சைவ உணவுப் பழக்க வழக்கத்துக்குமான தொடர்பு வெறும் இட்டுக்கட்டலா? அதனால் மற்றைய உயிர்களின் மேல் அன்பு செலுத்த முடியாத; அசைவமுண்ணும் நான் ஆத்மீகத்துக்கு உகந்தவனில்லை எனக் கருதுகிறீர்களா?


// ஆன்மிக உணர்வு என்பது எந்தத் தீங்கும் விளைவிக்காது இருப்பது. சைவ உணவுப் பழக்கமும், ஆன்மிகமும் ஒன்றுக்கொன்றுத் தொடர்புடையதாகக் கருத வேண்டிய நிர்பந்தம் எதுவுமில்லை. ஆனால் பிற உயிர்களின் மேல் அன்பு செலுத்துவது என்பது ஒரு பொது நலம் கருதிய செயலாகக் கருதலாம், அதுவே ஆன்மிகம் எனவும் கொள்ளலாம். அசைவம் உண்ணும் தாங்கள் ஆன்மிகத்துக்கு உகந்தவரா என்பதை நீங்கள் தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். மருத்துவ ஆராய்ச்சியில் உயிர் கொன்று பணி புரியும் நான் என்னை ஒரு ஆன்மிகவாதியாக எப்போதுமே எண்ணிக் கொண்டதில்லை. //


என் மனம் கத்தரிகாய்ப் பிஞ்சுக்கும்; முளைக்கீரைக்கும் உயிர் இருக்கிறது. அதையும் வெட்டி; அவித்து; பொரித்து, வறுத்து உண்பதுகூட பாவமாகத்தான் படுகிறது. ஆனால் நான் வாழ வேண்டும் எனும் சுயநலம் என்னைத் தடுக்கிறது. அதனால் அது பாவம் இல்லை;இது பாவம் என சால்சாப்பு தேடுகிறது.


//அசைவம் உண்பவர்கள் இதை ஒரு கருத்தாகக் கொள்வது உண்டு. தாவரங்கள் தானே உணவு உற்பத்தி பண்ணும் திறன் உடையவை. மரத்திலிருந்து பழம் பறித்து உண்பது என்பது கொலையாகாது, ஆனால் அந்த மரத்தையே வெட்டுவது கொலையாகக் கருதப்படும் எனக் கொள்ளலாம். மேலும் கத்தரிக்காய்தனை அப்படியே விட்டுவிட்டால் அழுகிப் போய்விடும். எனவே அவையெல்லாம் கொலை எனவோ, பாவம் எனவோ கருதுவது கூடாது. தாவரங்கள் அல்லாத பிற உயிர்கள் தாவரத்தை முதல் உணவாகக் கொண்டு வாழ்வது என்பது சாத்தியமே. தானாக இறந்த விலங்குகளை உண்பது தவறில்லை எனக் கொள்வது சரியென சொல்வாரும் உண்டு. ஆனால் ஒரு உயிரைக் கொன்று அதை உண்பது பாவப்பட்ட செயலே ஆகும். இதில் தாவர இனங்கள் உட்படா //


ஆத்மீகவாதிகளும், அறிவு படைத்தோரும் தமக்கு வசதியானதைக் கூறி அதையே பொது விதி ஆக்குவார்கள்.என்னைப் போன்ற பரதேசிகள் ஏற்கவேண்டும்; அல்லது சாகவேண்டும்.
அந்த பொது விதியில் தான்....ஒபாமாவுக்கு நோபல் பரிசும் கொடுத்தார்கள்.


//அப்படியெல்லாம் எதுவும் இல்லை ஐயா. பொது விதி என்பது பொதுவான விசயத்திற்காக வைக்கப்பட்டது. அவரவர் வசதிற்கேற்ப வாழ்க்கை அமைத்துக் கொண்டு வாழ்வதுதான் நடந்து கொண்டு வருகிறது. 'எது உனக்குச் சரியாகப்படுகிறதோ, அதை நீ சந்தேகமின்றி, சந்தோசமாகச் செய்து கொண்டு வா' என்பது கூட ஒரு பொது விதி தான். அப்படியெனில் கொலைகாரர், கொள்ளைக்காரர் எல்லாம் தனது செயல் சரியே என வாதிடக் கூடும். எது எப்படியோ, இந்த உலகம் இருளும் வெளிச்சமும் கொண்டு இருக்கிறது என்பதே உண்மை. //




Friday, 16 October 2009

கடவுள் = ஏழேழு உலகம் = ஒன்றுமில்லை

உலகம் எப்படி உருவாகி இருக்கும்?

பலருக்கும் தெரிந்திருக்கும், புரிந்திருக்கும்.

ஞானிகள் சொல்லி வைத்தது உண்மையென நம்பிடச் சொல்லும் அறிவியல்.

சூன்யத்திலிருந்துதான் எல்லாமேத் தொடக்கம்.

அந்த சூன்யம் எதில் தொடக்கம்?

சூன்யம், சூன்யத்தில் இருந்துதான் தொடக்கம்.

பெரு வெடிப்புக் கொள்கை தான் மிகச் சரியான கொள்கை என அறிவியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டதே. பிறகு ஏன் தேவையில்லாமல் மற்றொரு சிந்தனை உலகம் எப்படி உருவாகி இருக்குமென!

ஒரு உலகம் என்றுதானே எல்லோரும் நினைத்து இருப்பார்கள். அதுதானே மிகவும் சரியாகக் கருதப்படுகிறது. இல்லையில்லை, பல உலகம் என சொல்லி வைத்திருக்கும் வேதங்கள் சொன்னதுதான் சரியெனச் சொல்லும் அறிவியலாளர்களும் உண்டு.

பெரு வெடிப்புக் கொள்கை பல விசயங்களை ஒழுங்காக விளக்குவதில்லை, அந்த ஒழுங்காக விளக்கப்படாத விசயங்களை விளக்கி இந்த உலகம் எப்படித் தோன்றியிருக்கும் என எந்த எதிர் கேள்விகளுக்கும் வாய்ப்பில்லாமல் செய்ய வேண்டும் என வரையறுக்கப்பட்டதுதான் பழுக்கம் கொள்கை.

ஆனாலும் இந்த பழுக்கம் கொள்கையை நிரூபிக்கக் கொடுக்கப்பட்ட ஆதாரங்கள் பழுக்கம் கொள்கைக்கு மட்டும் தான் என எடுத்துக் கொள்ள முடியாது எனச் சொன்னதும் இந்த பழுக்கம் கொள்கையை உருவாக்கிய அறிவியலாளர்களான கூத், லிண்டே, ஸ்டெயின்ஹார்ட், மற்றும் ஆல்ப்ரெஹ்ட் மனதில் புழுக்கம் கொண்டனர்.

(தொடரும்)

Thursday, 15 October 2009

ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு - 4

4.

ரகுராமன் வீட்டுக்கு வந்ததும் கட்சிக்கான கொள்கைகள் எதுவெல்லாம் என யோசித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது அவனது தந்தை ரங்கராஜ், ரகுராமனை அழைத்தார்.

''எதோ கட்சி ஆரம்பிக்கப் போறியாமே''

''யாருப்பா சொன்னா''

''கட்சி கொள்கை, எந்த கட்சிக்கு ஓட்டுப் போடறீங்கனு வேற கேட்டுட்டு இருக்கியாமே''

''ஆமாம்பா, அப்படியொரு எண்ணம் இருக்கு''

''இருக்கும் இருக்கும், கட்சி கொள்கை, கட்சி கொள்கைனு பேசறியே, உனக்குனு ஒரு கொள்கை எப்பவாச்சும் வைச்சிருக்கியா?ஒவ்வொரு தனி மனிசன் சேர்ந்ததுதான் ஒரு கூட்டம், அமைப்பு எல்லாம். அந்த அந்த தனி மனிசனுக்குனு ஒரு கொள்கை இருக்கும், இருக்கனும். ஆனா கொள்கையோட இருக்கிற ஒரு தனிமனுசனக் காட்டுப் பாக்கலாம், ஆடிக்கு ஒரு தரம், அமாவாசைக்கு ஒரு தரம்னு கொள்கை மாத்திட்டே இருக்கறவனுகதான் எல்லாரும், நேரத்துக்கு, காலத்துக்கு ஏத்தமாதிரி தன்னை மாத்திக்கிர பயலுகதான் எல்லாரும். புரிஞ்சிக்கோ!

ஒரு கூட்டத்தில இருக்கிற எல்லா தனி மனிசனுக்கும் ஒரே கொள்கை இருக்குமானு உன்னால சொல்ல முடியுமா! ஒரு தனிமனிசனோட கொள்கையை கையில வைச்சிக்கிட்டு செம்மறியாடு கூட்டம் மாதிரி அந்த கொள்கைக்குப் பின்னால போறவங்கதான் பெரும்பாலானவங்க. அவங்க அவங்களுக்கு ஒரு ஒழுங்கான கொள்கையா இருந்தா அந்தத் தலைவரோட கொள்கை, இந்தத் தலைவரோட கொள்கைனு அநாவசியமாப் பேசிட்டு எவனும் இருக்கமாட்டான், அவனவனோட கொள்கையை நிறைவேத்திரதுல உறுதியா இருப்பான், அதைப் புரிஞ்சுக்கோ முதல்ல, கட்சி ஆரம்பிக்கப் போறேனு பட்சி சொல்லிச்சினு அடிப்படை விசயத்தைப் புரிஞ்சிக்காம உலகத்தைத் திருத்த நினைக்காதே, இதுதான் உனக்கு நான் கடைசியா சொல்றது, பொழப்ப பாரு அவ்வளவுதேன், போ!''

ரகுராமன் விக்கித்து நின்றான்.

''என்ன நின்னுட்டே இருக்கே, போயி காலேஜுல ஒழுங்காப் படிக்க வழியப் பாரு. இதோ பாரு, அரசியல் ஒரு சாக்கடைனு சொல்வாங்க, ஆனா அந்த சாக்கடை உருவாக காரணமே நம்மளைப் போல இருக்கிறவங்கதானு ஒரு பயலும் நினைச்சிக்க மாட்டான், எப்படியாவது உலகத்தை மாத்திப்புடனும், அவர் வந்தா நல்லா இருக்கும், அவர மாதிரி ஆட்சியத் தரனும் பேசற எவனுமே தன்னோட செயலை ஒரு நிமிசம் கூட பரிசோதிக்க மாட்டான் அதை தெரிஞ்சிக்க''

ரகுராமன் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது. அவனது தந்தை இத்தனை கடுமையாக எப்போதுமே அவனிடம் பேசியதில்லை. அவர் செய்யும் தொழிலில் நேர்மையாகவும், பிறரிடம் அன்பாகவும், கரிசனையுடன் மட்டுமே அவர் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்து இருக்கிறான். எந்தவொருப் பிரச்சினையெனினும் மிகவும் சுமூகமாகவே பேசித் தீர்த்துக் கொள்வதில் மிகவும் வல்லவர் அவர். அவரை கிராமத்தில் மதித்து நடப்பவர்கள் அதிகம். தேவையில்லாத சச்சரவுகளில் நேரத்தைச் செலவழிப்பதை விட ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்யலாம் என எப்போதும் ஒரு துடிதுடிப்புடன் செயலாற்றுபவர்.

ரகுராமன் தனது அறையில் அமர்ந்தான். தனக்கென என்ன கொள்கை இருக்கிறது என நினைத்துப் பார்த்தான். ஒரு கொள்கையும் தென்படவில்லை. அவனது மனதின் ஓரத்தில் சந்தானலட்சுமி தைரியம் கொடுத்துக் கொண்டிருந்தாள். சந்தானலட்சுமி, ரகுராமனுடன் படிக்கும் பெண். இருவருக்குமிடையிலான காதல் பலருக்கும் கல்லூரியில் தெரிந்தே இருந்தது.

இத்தனை பேசிய தந்தை ஏன் ஒரு கட்சிக்கு என இன்னமும் வாக்கு அளித்துக் கொண்டிருக்கிறார் என எண்ணினான் ரகுராமன். உலகில் நடக்கும் அநியாய செயல்களைப் புறக்கணிக்கிறோம் என வாக்கு அளிக்காமல் இருப்பது சிறந்தது என எப்படி சொல்லலாம், ஒரு மாற்றம் வேண்டுமெனில் அதற்கான ஆயத்தங்கள் மிகவும் அவசியம் என தோணியது ரகுராமனுக்கு.

பேசிப் பேசியேப் பொழுதைக் கழித்து மாற்றம் தேவையெனினும் அவர் மாறட்டும், இவர் மாறட்டும் என வறட்டுத்தனமாகப் பேசி வாழ்க்கை கழிக்கும் மனிதர்கள் இருக்கும் வரை, தவறெனினும் சகித்துக்கொண்டு, தானும் அந்த தவறில் உழன்று வாழும் மனிதர்கள் உள்ளவரை குறையுள்ள உலகமாகவே இருக்கும் என்பதுதானே எழுதாத வரலாறு!

(தொடரும்)

Wednesday, 14 October 2009

ஒரு நூல் அச்சாகிறது - வெறும் வார்த்தைகள்.



இந்த கவிதை நூல் விரைவில் வெளிவர இருக்கிறது என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நூல் அழகு: தமிழ் அலை ஊடக உலகம். சென்னை - 15
அச்சு : ஜெம் கிராபிக்ஸ், சென்னை-14

Tuesday, 13 October 2009

அடியார்க்கெல்லாம் அடியார் - 4

கதிரேசனிடம் பாடல் பற்றி பேசினார் சிவநாதன். சிவனை நோக்கி சொல்சிவனே என பாடக்கூடாது என்றார். மேலும் அவர், சிவன் யாருக்கும் எதற்கும் எதுவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றார். கதிரேசனுக்கு தர்மசங்கடமாக இருந்தது. ''என்ன எதுவும் பேசமாட்டேங்கிற?'' என்றவரிடம் கதிரேசன் ''பாடுறதுல தப்பில்லையே சார்'' என்றான். ''பாடுறதுல தப்பில்லை, ஆனா சொல்சிவனே அப்படினு பாடக்கூடாதுனுதான் சொல்றேன், அதுவும் நீ பாடின பாடல் சிவனை தரம் தாழ்த்துவதாக இருக்கிறது, இப்படி அதிகபிரசங்கித்தனமாக நீ நடந்து கொள்வது சரியில்லை'' என்றார். மெளனம் சாதித்தான் கதிரேசன்.

''நீ என்ன பண்ற?'' என்றார். ''நான் உங்க காலேஜ்ல பாலிடெக்னிக் முத வருசம் சேர்ந்திருக்கேன் சார்'' என்றான். ''விடுதியிலதான் தங்கியிருக்கியா, உன் பேரு என்ன?'' என்றவரிடம் ''ஆமா சார், பேரு கதிரேசன்'' என்றான். ''நீ இப்படி பாடினதுக்கு மன்னிப்புக் கேள், இனி பாடமாட்டேனு சொல்லு'' என்றார். ''நான் பாடினதுல எந்த தப்பும் இல்லை சார், இதுபோல பாடுறதை நான் நிறுத்த வேண்டிய அவசியமும் இல்லை சார், சிவன் பொதுவானவர், சொல்சிவனே என பாடுவது மூலம் அவர் தரம் தாழ்ந்திட போவதில்லை, இதை நீங்கள் ஒரு பெரிய விசயமா எடுத்துக்கிட்டு என்னை மிரட்டுறது அந்த சிவனுக்கே அடுக்காது'' என மனதில் தோன்றியதை பயம்தனை மறந்து போன கதிரேசன் படபடவென பேசினான். சிவநாதன் அங்கிருந்து விருட்டென வெளியேறினார்.

''ஏம்ப்பா அவர்தான் பாடக்கூடாதுனு சொல்றாருல, பாடமாட்டேனு சொல்ல வேண்டியதுதான, கொஞ்சம் கூட மரியாதையில்லாம'' என்றார் அங்கிருந்த ஒருவர். அப்போது உடலெல்லாம் திருநீரு பூசியிருந்த வயதான ஒருவர் கதிரேசனையேப் பார்த்துக் கொண்டிருந்தார். கதிரேசன் கோவிலிருந்து நேராக விடுதிக்குச் சென்றான். தெய்வேந்திரன் இவனுக்காகவே காத்திருந்தது போல ''உள்ளே வா'' என கதிரேசனை தனது அறைக்குள் அழைத்தார்.

''உன்கிட்ட என்ன சொன்னேன், பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்கனும்னு சொன்னேன்ல. பிரின்சிபால்கிட்டயே நீ முறைச்சிட்டு நின்னுருக்க. உன்னை விடுதியை விட்டு உடனே வெளியே அனுப்பச் சொல்றார், நீ எல்லாம் எடுத்துட்டு கிளம்பு. அப்படி நீ எடுத்துட்டுப்போகலைன்னா உன்னை காலேஜ்ல இருந்து நீக்கிருவோம்னு சொல்ல சொன்னார்'' என்றார் தெய்வேந்திரன். கதிரேசனுக்கு தான் கேட்பது உண்மைதானா என தன்னைத்தானேக் கேட்டுக்கொண்டான். ''கிளம்பு, கிளம்பு, வீணா என் கோவத்தைக் கிளராதே'' என்றார் தெய்வேந்திரன்.

கதிரேசனின் மனம் பதறியது. அம்மாவை நினைக்கையில் மயக்கமே வந்தது. ''சார், இப்போ எங்கே போவேன், எனக்கு இங்க யாரும் தெரியாது சார்'' என அழ ஆரம்பித்தான் கதிரேசன். ''நீ படிக்கனும்னு நினைச்சா வெளியே போ'' என்றார். ''ஒருதரம் பிரின்ஸிபால்கிட்ட பேசிப் பாருங்க சார்'' என அழுதுகொண்டே சொல்ல ''நீ என்னை வேலையை விட்டுப் போகவச்சுரவ போலிருக்கு, அவர் ஒருதரம் முடிவா சொல்லிட்டா அவ்வளவுதான். காலேஜ்ல இருக்கச் சொல்றாரே அதை நினைச்சிட்டுப் பேசமா போ'' என அடிக்க கையை ஓங்கினார். ''போறேன் சார்'' என்றான் கதிரேசன்.

எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு அழுகையுடனே கிளம்பினான். கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் எல்லாம் கதிரேசனை பரிதாபமாகப் பார்த்தார்கள். பின்னர் பெட்டியுடன் நேராக பிரின்சிபால் அறைக்குச் சென்றான். கொஞ்ச நேரம் காத்திருக்கச் சொன்னார்கள். பின் உள்ளே அனுப்பினார்கள்.

''சார், எனக்கு இங்க யாரையும் தெரியாது சார், என்னை விடுதியில சேர்த்துக்கச் சொல்லுங்க சார்'' என அழுதான் கதிரேசன். ''நீ எங்கேயாவது தங்கிக்கோ, விடுதியில நீ தங்கக்கூடாது'' என்றார் சிவநாதன். ''பாடுனதுக்கா சார் இந்தத் தண்டனை?'' என்றான் கதிரேசன். ''நீ மரியாதையில்லாம நடந்துகிட்டதுக்குத் தான் இந்த தண்டனை, இந்த நிலைமை தொடர்ந்துச்சினா காலேஜ்ல இருந்தே உன்னை வெளியேத்த வேண்டியிருக்கும்'' என்றார் அவர். ''சொல்சிவனே னு பாடுறதல என்ன சார் தப்பு, இதெல்லாம் ஒரு காரணமா?'' என்றான் கதிரேசன் அழுகையுடன். ''பாடியதுமில்லாம எதிர்த்துப் பேசிட்டே இருக்க, நான் சொன்னா நீ கேட்கனும்'' என்றார் மேலும். ''என்னோட கருத்தைச் சொல்லக்கூடாதா சார்?'' என்றவனிடம் ''நீ சொல்ற விதம் சரியில்ல, இதோ பாரு, நீ எங்கேயாவது தங்கிக்க, விடுதியில தங்க வேண்டாம், உனக்கு நான் சொல்றது பிடிக்கலைன்னா நீ காலேஜ்ல இருந்து நின்னுக்கலாம்'' என சொல்லி வெளியேப் போகச் சொன்னார்.

கதிரேசன் இனியும் அங்கே நிற்பது கூடாது என கண்கள் கலங்கியபடியே வெளியேறினான். பெட்டியுடன் சிவன் கோவிலுக்குள் சென்றான். முதல் நாளிலேயே தனக்கு கல்லூரியில் ஏற்பட்ட அவமானம் அவனை மிகவும் வருத்தத்துக்கு உள்ளாக்கியிருந்தது. எங்கு சென்று தங்குவது, எப்படி கல்லூரிக்குச் செல்வது என குழம்பியவன் சிவனை நோக்கி கண்ணீர் மல்க பாடினான்.

''அன்னையும் தந்தையும் அறிந்த முதல் அறிவே
நின்னை யான் விளித்த பொருட்டு
ஓரிடம் இல்லை என்றே ஒதுக்கித் தள்ளினார்
பாரிடத்து யாவும் உனதிடமோ சொல்சிவனே''

பாடி முடிக்கையில் கதிரேசனின் கையை உடலெல்லாம் திருநீரு பூசியிருந்த அந்த வயதானவர் பிடித்துச் சொன்னார். ''நீ என்னோட வா, என்னோட வீட்டுல நீ தங்கிக்கிரலாம், நீ காலேஜ்க்குப் போய்ட்டு வா'' என்றார். கதிரேசன் உடல் கிடுகிடுவென ஆடியது.

(தொடரும்)

Wednesday, 7 October 2009

அடியார்க்கெல்லாம் அடியார் - 3

சிறிது நேரம் கழித்துஉணவு அறைக்குச் சென்றான் கதிரேசன். அங்கே தெய்வேந்திரன் ஒருவனை அடித்துக்கொண்டு இருந்தார். அதைப்பார்த்த கதிரேசனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. ஏன் இப்படி எடுத்ததுக்கெல்லாம் இவர் அடிக்கிறார் என்ற கேள்வி மனதில் ஓடியது. பின்னர் அவர் சமையல் அறைக்குள் சென்று அங்கு சமையல் செய்தவர்களைச் சத்தம் போட ஆரம்பித்தார்.

நேராக அந்த மாணவனை நோக்கிச் சென்ற் கதிரேசன். ''உன்னை ஏன் அவர் அடிச்சார்?'' எனக் கேட்டான். கதிரேசனை சற்று வித்தியாசமாகப் பார்த்துவிட்டு ''சாப்பாடு சரியில்லாமல் இருந்தது, அதான் ஏன் இப்படி சமைக்கிறீர்கள், சற்று அவர்களைச் சொல்லக்கூடாதா'' எனக் கேட்டேன், அதற்கு அவர் ''மற்றவங்க எல்லாம் பேசாமத்தான சாப்பிடுறாங்க, உனக்கு என்ன வந்துச்சு, சேர்ந்தன்னைக்கே இப்படியா'' என அடிக்கத் தொடங்கிவிட்டார். ''வலிக்கிறதா?'' என்றான் கதிரேசன். ''அம்மா அடிச்சாலும் வலிக்கத்தானே செய்யும், தாங்கித்தான் ஆகனும்'' என்றவன் தட்டினைக் கழுவிக்கொண்டு கதிரேசனுடன் மேலும் பேசினான். அவன் மதுசூதனன், காட்பாடி. எஞ்சினியரிங் தகவல் துறையில் இணைந்து இருக்கிறான்.

கதிரேசன் தன் பெயரை சொன்னான். ''ஓ நீ சைவ குலமோ'' என்றான் மதுசூதனன். ''ஆமாம், உன் பேரு என்ன?'' என்றான் கதிரேசன். ''நான் வைணவம், என் பேரு மதுசூதனன், அறை எண் 40ல் நான் இருக்கிறேன், நீ எந்த அறையில் இருக்கிறாய்?'' எனக் கேட்டான் மதுசூதனன். ''நான் அறை எண் 46, நான் ரசம் குடித்துவிட்டு வருகிறேன்'' என சென்றான் கதிரேசன்.

கட்டுப்பாட்டிற்குள் எதையும் கொண்டு வரவேண்டுமெனில் அச்சப்படுத்துதலும், கொடுமைப்படுத்துதலும் பெரும் ஆயுதங்களாகவேப் பயன்பட்டு வருகின்றன. இத்தனை மாணவர்களையும் ஒழுங்கில் வைத்திருக்க வேண்டுமெனில் அத்தனை சாதாரண விசயமில்லைதான் என கதிரேசன் எண்ணிக்கொண்டே உணவு அறைக்குள் நுழைந்தான். அங்கே இருந்த பணியாளாரிடம் ரசம் வேண்டும் என கேட்க அவரும் ரசம் ஊற்றிக்கொடுத்தார். ரசம் குடித்தபோது மிகவும் புளிப்பாக இருந்தது. ஊர் ஞாபகம் மனதைத் தொட்டது. புளியமரங்கள் கல்லடிபட்டு புளியம்பழங்களை உதிர்த்துக்கொள்வதும் அவைகளை சுவைத்த போது இருந்த சுவையும் நினைவுக்கு வந்தது.

'அம்மா இந்நேரம் தூங்கி இருப்பாளோ' என நினைக்கும்போதே மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ஒவ்வொரு தினமும் ஒரு கதை சொல்வாள் அம்மா. கதை சொல்வதற்கு என்றுமே சலித்துக் கொள்ளமாட்டாள். கதைக் கேட்டுக்கொண்டே தூங்கிப்போன நாட்கள் மிகவும் அதிகம். இன்று யாருக்கு கதை சொல்வாளோ? என எண்ணியபோது கதிரேசனின் கண்கள் கலங்கியது.

அறைக்குள் வந்து பேசாமல் படுத்துக்கொண்டான். தூக்கம் துக்கமாக அன்றுதான் தோன்றியது. அதிகாலை எழுந்து குளித்தான். வரிசையில் நின்று ஒருவர் பின் ஒருவராகத்தான் குளிக்க வேண்டும். குளிப்பதற்கு என தனி அறை எல்லாம் கிடையாது. குளித்து முடித்தவன் சிவனை வணங்கிவிட்டு எதுவும் சாப்பிடாமல் சிவன் கோவில் நோக்கிச் செல்ல நினைத்து மதுசூதனனிடம் சென்று, சிவன் கோவிலுக்கு வருகிறாயா? எனக் கேட்டபொழுது, ''நான் சிவனை தொழுவதில்லை'' என அழுத்திச் சொன்னான் மதுசூதனன். அவனிடம் எதுவும் மேற்கொண்டு கேட்காது சிவன் கோவிலை அடைந்தபோது கல்லூரி முதல்வர் சிவநாதன் அங்கே வந்திருந்தார். அவரை இதற்கு முன்னர் ஒரே தடவைப் பார்த்து இருந்தாலும் அவரது முகம் பளிச்சென மனதில் பதிந்திருந்தது. வெகு சிலரே கோவிலில் இருந்தார்கள்.

''வணக்கம் சார்'' என்றான் கதிரேசன். அவரும் வணக்கம் சொன்னார். கோவிலில் உள்நுழைந்தபோது நிசப்தம் நிலவியது. பாட ஆரம்பித்தார் சிவநாதன்.

''ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்''


பாடல் பாடி முடித்துவிட்டு சிவன் கோவிலில் இருந்து வெளியே கிளம்பினார் சிவநாதன். கதிரேசன் பாடத் தொடங்கினான்.

''முக்கண்ணனே மூவுலகமென யாவுலகமும் பரவிக் கிடப்போனே
எக்கணமும் நீங்கா நிலையைக் கொண்டோனே
உயிரோடு வைத்த உடல் ஒப்புவித்துக் கொண்டேன்
பயிரது மாண்டிடாது செழித்திடுமோ சொல்சிவனே''

அங்கிருந்த சிலர் அவனையேப் பார்த்தார்கள். பாடலைக் கேட்ட சிவநாதன் திரும்பிக் கோவிலுக்குள் வந்தார்.

புளியம்பட்டியில் களையெடுத்துக் கொண்டிருந்த செல்லாயி தனது கையில் ஏதோ ஒன்று குத்திவிடவே 'கதிரேசா' என கண்கள் கலங்கிட அவனது பெயரைச் சொன்னார். கதிரேசன் கிளம்பிச் சென்றதிலிருந்து மிகவும் மனம் வேதனையுற்றிருந்தார் செல்லாயி.

(தொடரும்)

Thursday, 1 October 2009

ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு - 3

ரகுராமன் சுப்பிரமணியின் கேள்விக்கு நிதானமாகவே பதில் சொன்னான்.

''ஆமாடா சுப்பு, ஒரு கட்சி ஆரம்பிக்கத்தான் போறேன்''

''அண்ணே, நெசமாவாண்ணே, நம்ப முடியலண்ணே''

அனைவரும் ரகுராமனைச் சூழ்ந்து கொண்டார்கள்.

''இன்னைக்கு கட்சி பேரு, உடனே ஒரு கட்சி கொடி, நாளைக்கு கட்சி மாநாடுனு ஆரம்பிச்சி என்ன ஏதுனு பேசத் தெரியாம பேசப் போற கட்சியா இது இருக்காது, அதுக்கு நாளாகும், இப்ப விளையாடலாம்''

ரகுராமன் சொன்னதும் அவர்களுக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டார்கள். ஊருக்குத் தலைவராக வழியக் காணோம், இந்த நாட்டுக்குத் தலைவராகப் போறாராம்.

விளையாட ஆரம்பித்தார்கள். ரகுராமன் வீசிய பந்தினை சுப்பிரமணி ஓங்கி அடித்திட மட்டை உடைந்து போனது.

''இருக்கறதே ஒண்ணு, அதையும் உடைச்சிப் பூட்டியாடா, நொண்டிக்கார மவனே''

சுப்பிரமணியை பழனிச்சாமி அடிக்க ஓடி வந்தான். பிறர் தடுத்தார்கள். வேணும் என்றா அவன் செய்தான் என பழனிச்சாமியைத் திட்டினார்கள்.

''நாம சேர்த்த காசை வைச்சி ஒரு பேட் வாங்கிரலாம், பழனி, எவ்வளவு பணம் இருக்கு இப்போ?''

ரகுராமன் கேட்டதும் பழனிச்சாமியின் முகம் சற்று வித்தியாசமானது.

''ரகு, எந்த பணமும் என்கிட்ட இல்ல''

''டேய் பழனி, முன்னூறு ரூபா இருக்குனு என்கிட்ட அன்னிக்கி சொன்ன, என்ன விளையாடுறியா''

''அழபா, அன்னிக்கி சொன்னேன், இன்னிக்கி இல்ல''

''இவனிட்ட பணத்தைக் கொடுக்காதீங்கனு அன்னிக்கே நான் சொன்னேன், எவனும் கேட்கலை, இவன் சீட்டாட்டத்துக்கும், குடிக்கும் அந்த காசை தொலைச்சிருப்பான்''

''அழபா, அடிச்சேனா செவுலு பிஞ்சிரும்''

''அடிராப் பார்க்கலாம், காசை தின்னுட்டு மிரட்டுறியா''

''ரெண்டு பேரும் நிறுத்துங்க, பழனி, நீ காசை ஏற்பாடு பண்ண வழியப் பாரு, சுப்பு நீ இனிமே காசு பொறுப்பு ஏத்துக்கோ, நாளைக்கு அவங்ககிட்டயே பேட் வாங்கிக்குவோம், முடியாதுனு சொன்னா மேட்சை கேன்சல் பண்ணிருவோம்''

''ரகு, என்ன உடனே பொறுப்பில இருந்து என்னைத் தூக்குற, நீ வைச்சதா சட்டம்? அந்த காசையெல்லாம் திருப்பித் தரமுடியாது, அது போனது போனதுதான்''

பழனிச்சாமி பேசிக்கொண்டிருக்கும்போதே அழகர்பாண்டி பழனிச்சாமியை ஓங்கி அடித்தான். இருவருக்குமிடையில் சண்டை நடந்தது. ரகுராமனும் மற்றவர்களும் அவர்களை விலக்கி விட்ட பின்னரும் இருவரும் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டார்கள்.

''பழனி, அழபா, நீங்க ரெண்டு பேரும் நாளைக்கு விளையாட வேணாம், ரமேஷூ நீயே நாளைக்கு கேப்டனா இரு''

ரகுராமன் சொன்ன முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட்டார்கள். பழனிச்சாமியும், அழகர்பாண்டியும் கோவித்துக் கொண்டுச் சென்றார்கள்.

இரவு வீட்டினில் உட்கார்ந்து ரகுராமன் கட்சிக்கான கொள்கை எது என யோசிக்கலானான். சொந்த ஊர் அணியில் நடக்கும் பிரச்சினைகளை சமாளிப்பது என்பதே எத்தனை அசெளகரியமாக இருக்கிறது என மனம் சஞ்சலம் அடைந்தான்.

அடுத்த நாள் காலையில் வக்கானங்குண்டினை அடைந்தார்கள். பழனிச்சாமியும், அழகர்பாண்டியும் வந்திருந்தார்கள். சண்டை போட்டுக் கொள்ளமாட்டோம் என இருவரும் சொன்னதும் இருவரையும் அணியில் சேர்த்துக்கொண்டான் ரகுராமன்.

போட்டி ஆரம்பித்தது. வக்கனாங்குண்டு அணியினர் முதலில் மட்டை பிடித்தனர். இருபது ஓவர்கள் என நிர்ணயித்துக் கொண்டார்கள். போட்டியில் வக்கனாங்குண்டு அணியினரே வழக்கம் போல வெற்றி பெற்றனர். பணத்தை கொடுத்துவிட்டு ரகுராமனும் மற்றவர்களும் திரும்பி நடந்தபோது பழனிச்சாமி நடுவர்களிடம் சென்று வாக்கு வாதம் செய்து கொண்டிருந்தான். என்னவென ஓடிச் சென்றுப் பார்த்தனர்.

''டேய் ரகு, இவனுங்க ரெண்டு பேரும் ஃபிக்ஸ் பண்ணி நம்மளைத் தோக்க வைச்சிட்டானுங்கடா''

இரண்டு அணியினருக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது. அந்த இரண்டு நடுவர்களுமே வக்கனாங்குண்டுக்காரர்கள் பணம் தருவதாக சொன்னார்கள் என ஒப்புக்கொண்டனர். பழனிச்சாமி அவர்களை மிரட்டி கொடுத்தப் பணத்தைத் திரும்ப வாங்கினான்.

''டேய் ரகு, உன்னை மாதிரி இருந்தா உன் கட்சி உருப்படாதுடா, என்னை மாதிரி அடிதடினு இருந்தாத்தான் எதையும் இந்த உலகத்தில சாதிக்க முடியும், என்னை மாதிரி ஆளுகளையும் தயார் பண்ணு''

''அண்ணே, அடாவடித்தனம் பண்ணித்தான் எதையுமே நடத்தனுமாண்ணே''

சுப்பிரமணியின் தோய்ந்த குரலைக் கேட்டபோது ரகுராமனின் முகம் சோகத்தில் மூழ்கியிருந்தது.

நேர்மை, சத்தியம், ஒழுக்கம் என்பதெல்லாம் ஒரு குறிப்பிட்ட பொறுப்பில் உள்ளவர்களுக்கு மட்டுமே உரியது என்றும், சாதாரண மக்களுக்கு அதுபற்றிய விபரங்களில் அக்கறை தேவையில்லை என சின்ன சின்ன விசயங்கள் தானே என தவறி நடக்கும் மக்கள் தங்களைத் தாங்களே எப்பொழுது திருத்திக் கொள்வது?

(தொடரும்)

Friday, 25 September 2009

எட்டு திசைக்கும், எட்டும் திசைக்கும்

உயர்பவரெல்லாம் இறக்கத்திலிருந்தே தொடக்கம்
இறக்கமடைந்தாலும் மேன்மையது தவறுவதில்லை
அடக்கமது கொண்டு வாழ்வினை சிறப்பித்தே
எதற்கும் எப்பொழுதும் விழித்திருக்கும் மக்கள்

இறக்கத்திலிருந்து எழும்போது அடக்கமும் விழித்தலும்
மேன்மையிலிருந்து விழும்போது அடக்கமும் விழித்தலும்
உயர்நிலையில் வைத்தே உரிமை கொண்டாடும்
இருள் துடைத்து வெளிச்சமாக்கும் மக்கள்

பூக்கள் சூடிய தோல்கள் சுருங்குவதில்லை
இறை கிடைக்காத எறும்புகள் நடுங்குவதில்லை
கிடைக்காத காற்றுக்கு சிலநுண்ணுயிர்கள் ஏங்குவதில்லை
அனைத்துக்கும் உறுதியாய் இறுதியாகும் மக்கள்

குளிரது எரிக்கும் வெப்பமது விறைக்கும்
கொண்ட கடமையில் பொறுமை கண்டு
வெற்றிதனை வகுத்து காட்டிச் சிறக்கும்
மரணமில்லா தொடரும் முடிவுகள் மக்கள்

அழிவினைத் தடுக்க அன்பினால் பாலம்கட்டி
கொடுமையினைத் தவிர்த்திட கொள்கை மாறாது
அமைதியின் அர்த்தம்தனை விளங்கியே விளக்கி
வேதனை அறியாது வாழ்ந்திடும் மக்கள்

சீற்றம் கொள்ளும் இயற்கை கொல்லும்
நல்வழி தவரும் செயற்கையும் கொல்லும்
கொல்லும் வழியதை கரைகொண்டு அடைத்திட
உயிரதில் உறங்கி வேண்டிக்கிடக்கும் மக்கள்

புரியாத வழி புரிதலுக்கு மொழி
அறியாத புதிரும் அறிதலின் அறிவும்
கொடுப்பது இங்கே எடுப்பது இல்லை
கொடுத்து மகிழ்ந்தே குபேரனாகும் மக்கள்

ஒற்றைச் சூரியன் ஒன்றாக இல்லை
ஒன்றே பூமி ஒற்றுமையாய் இல்லை
என்றோ தொடங்கிய இறக்கமது அரக்கமது
நன்றே அடக்கியே ஒருமனம்காணும் மக்கள்

இசையில் உயிர் போடும் அசையுடன்
வசைச் சொற்கள் ஏற்பில்லா மொழியுடன்
திசையெங்கும் ஒன்றென போற்றும் ஒளியுடன்
இசைந்து வாழ்வாரே இனிதான மக்கள்.

Wednesday, 23 September 2009

தாய்மையை போற்றுக; வேண்டாம் தூற்றுக

தாய்மையைக் கேள்வி குறியாக்கும் செய்திகள் தொடர்ந்து அறிந்து கொண்டே வரும் வேளையில், சமீபத்தில், தனது இரண்டு குழந்தைகளை உயிருடன் கொன்ற தாய் பற்றிய செய்தி அறிந்ததும், ஒரு தாய் எப்படி தனது குழந்தைகளைக் கொல்லத் துணிவாள் எனும் கேள்வி மனதில் எழாமல் இல்லை. நம் வீட்டில் எதுவும் நடக்காதவரை எல்லாமே கேள்விக்குறியாகத்தான் இருக்கும் என்பதை அறியாமல் இல்லை.

நல்லதங்காள் கதையைக் கேள்விபட்ட போதே எப்படி ஒரு தாய் இப்படி தன்னைத் தயார் படுத்திக் கொள்கிறாள் எனும் கேள்வியும் எழுந்தது.

தனது மகள் வேறொருவனைக் காதலிக்கிறாள் என அறிந்ததும் அந்த மகளை உயிருடன் எரித்த தாய் பிறந்த ஊரில் தான் நானும் பிறந்து இருக்கிறேன் என எண்ணும்போதே இந்த தாய்மையை பற்றி சிலாகித்துப் பேச மனம் முன்வருவதில்லை.

தாய்மை உணர்வைத் தூக்கி எறிந்துவிட்டு நவநாகரீகத்தில் உழலும் பெண்கள் பற்றி பேசினால் ஆணாதிக்கம் எனும் அவச்சொல் வந்து சேர்ந்துவிடும் என்பதாலேயே நடப்பதெல்லாம் நடக்கட்டும் என இருந்துவிடத்தான் ஆசை.

வாழ்க்கையில் போராட முடியாமல், அவமானம் தாங்க இயலாமல் தாய்மை தள்ளாடுகிறது. இதுபோன்ற தாய்மை பற்றி விரிவாக எழுதத்தான் ஆசை. ஆனால் உலகம் அறிந்த மக்களிடம் ஒன்றைப் பற்றி நாம் சொல்ல வருமுன்னரே, அது என்ன ஏது என அறியாமல், அதைப்பற்றிய திசைமாறிய எண்ணங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும் என்பதால் இப்படியே விட்டுவிடுகிறேன்.

இதுகுறித்து எழுதுவோர் எழுதட்டும்.

Tuesday, 22 September 2009

இறைவனும் இறை உணர்வும் - 3

3.
உண்மையாய் வாழ்வது துன்பம் என்றிருந்தேன்
உண்மையாய் வாழ இயலாது தவித்திருந்தேன்
பொய்மையை மனதில் நிறைத்து இருந்தேன்
கயமை குணத்துடனே வாழ்வை கழித்து இருந்தேன்
ஐயனே உன்னை அறிந்த பின்னும்
பொய்யனாய் வாழ்வது முறையோ?

என பாடிய ஒருவரை எதேச்சையாகச் சந்தித்த மற்றொரு நபர், பாடியவரிடம் சென்று நன்றாக இருந்தது பாடல், சிலர்தான் தங்கள் செயல்களை பரிசீலனை செய்து முறையாக வாழப் பழகிக் கொள்வார்கள் என வாழ்த்திவிட்டுச் சென்றார்.

சில வருடங்கள் பின்னர் அந்த பாடலை பாடியவரைச் சந்திக்கும் வாய்ப்பு எதிர்பாரா விதமாக மீண்டும் அந்த நபருக்கு கிட்டியது. பாடலும் ஒலித்தது. அதே வரிகள். ஐயனே உன்னை அறிந்த பின்னும் பொய்யனாய் வாழ்வது முறையோ? என்றே முடித்ததைக் கேட்டதும் அந்த நபரிடம் சென்று ‘’சில வருடங்கள் முன்னர் இதே வரிகளைத்தான் பாடீனீர்கள், நீங்கள் பொய்யான வாழ்க்கையில் இருந்து மீள முயற்சிப்பதில்லையா’’ என்று கேட்டார்.

‘’முடியவில்லை, பொய்யாகவே வாழ்ந்து பழகிவிட்டது. அந்த பொய்யில் இருந்து உண்மையாய் வாழ்வது என்பது இயலாததாக இருக்கிறது’’ என்றார் பாடியவர். ‘’இறைவனைத்தானே ஐயன் எனக் குறிப்பிட்டீர்கள், இறைவனை அறிந்த பின்னும் பொய்யாக வாழ்வது முறையா என்றுதானே அர்த்தம் சொல்கிறது பாடல்’’ என்றார் அந்த நபர்.

‘’ஆமாம், எனது இயலாமையைத் தான் ஐயனிடம் சொல்லி புலம்புகிறேன்’’ என்றார் பாடியவர். ‘’இறைவனிடம் இப்படி புலம்புவதன் மூலம் எப்படி நீங்கள் உண்மையாக வாழ முடியும், உண்மையாக வாழ முயற்சி செய்ய வேண்டுமல்லவா’’ என்றார் அந்த நபர்.

‘’முயற்சி செய்து கொண்டிருக்கிறேன், ஆனால் முடியவில்லை. என்னை ஆட்டிப்படைக்கும் ஐயனிடம் அதனால்தான் மன்றாடிக் கேட்கிறேன். ஐயனை அறியாதபோது செய்த தவறெல்லாம் ஐயனை அறிந்த பின்னும் தொடர்வது ஐயனின் விளையாட்டுதானேயன்றி வேறென்ன?’’ என்றார் பாடியவர்.

‘’ஐயனின் விளையாட்டு அல்ல அது, இது உங்கள் விளையாட்டு. மன தைரியத்துடன் உண்மையாகவே வாழ்வது என பொய்மையையும், கயமையையும் ஒழித்துவிட்டு வாழ்ந்து பாருங்கள். உண்மையாய் வாழ்வது இன்பம் எனப் பாட வரும்’’ என்றார் நபர்.

‘’அந்த ஐயனே உங்களை அனுப்பி இருக்கிறார். என்ன தவம் செய்தேன் நான்’’ என்றார் பாடியவர்.

‘’எந்த ஒரு ஐயனும் என்னை அனுப்பவில்லை, நீங்கள் ஒரு தவமும் செய்யவில்லை. எதேச்சையாக உங்களை நான் பார்க்க நேரிட்டது. எனக்கென்ன வருத்தமெனில் நீங்கள் அந்த ஐயனை அறியவே இல்லை. அந்த ஐயனை அறிந்து அந்த ஐயன் வழி நடந்திருந்தால் நீங்கள் பொய்யான வாழ்வினை வாழ மாட்டீர்கள்’’ எனச் சொல்லிவிட்டு நடக்கலானார் அந்த நபர்.

இறைவனை நம்புவர்கள் மட்டுமே உண்மையாக இருப்பார்கள் என எவர் எங்கு எழுதிக் கொடுத்த நியதி?. இறைவனை நம்பாதவர்கள் உண்மையாக இருக்கமாட்டார்கள் என எழுதித் தரப்பட்டா இருக்கிறது? சில வேதங்கள் அப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்கின்றன. அதனாலேயே நான் மிகவும் உண்மையானவன், ஆனால் இறைவனை நான் நம்புவதில்லை, நான் இறைவனை நம்பாத காரணத்தினால் உண்மையில்லாதவன் என என்னைச் சொல்ல இயலுமா என குரல்கள் எழுப்பப்படுகின்றன.

இறைவன் ஒரு உண்மை. அந்த உண்மையை நம்பாதபோது நீ எப்படி உண்மையாக இருக்க இயலும் என்றே எதிர் குரல்களும் ஓங்கி ஒலிக்கின்றன. அப்படியெனில் உண்மையின் சொரூபமாக மட்டுமேத் திகழ்பவரா இறைவன்?

(தொடரும்)

Monday, 21 September 2009

அடியார்க்கெல்லாம் அடியார் - 2

வீட்டுக்குத் திரும்பாமல், திரும்பிச் சென்றால் அம்மா ஏதாவது நினைக்கக்கூடும் என கண்கள் கலங்கியவாறே தொடர்ந்து நடக்கத் தொடங்கினான் கதிரேசன்.

கல்லூரியானது சிங்கமநல்லூரிலிருந்து சற்று உள்ளே தள்ளி அமைந்து இருந்தது. சிங்கமநல்லூர்தனை ஒரு நகரமோ, அல்லது ஒரு கிராமமோ எனச் சொல்லிவிட முடியாதபடி இருந்தது.

மாணவியர்கள் விடுதியானது கல்லூரி வளாகத்திலிருந்து சற்று தள்ளி இருந்தது. மாணவர்கள் விடுதி கல்லூரிக்கு உட்பட்ட இடத்திலேயே அமைந்து இருந்தது. எஞ்சினீயரிங் கல்லூரியும், பாலிடெக்னிக்குடன் சேர்ந்தே இருந்தது. பாலிடெக்னிக்கில் பெரும்பாலும் மாணவர்களே சேர்ந்து இருந்தார்கள். இந்த கல்லூரியை நிறுவி இதோடு எட்டு வருடங்கள் ஆகிறது. இந்தக் கல்லூரியின் முதல்வராக இருந்து வருபவர் சிவநாதன். இவர் ஒரு சிவபக்தர். மிகவும் கண்டிப்பானவர். கருநிற முடியும், துறுதுறுவென இருக்கும் இவரது செயலும் இவரை இளமையானவராகவேக் காட்டிக் கொண்டிருக்கிறது. கல்லூரியை ஒட்டி பெரிய சிவன் கோவில் ஒன்றையும் அவர் கட்டி இருந்தார். கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் மற்றும் சிங்கமநல்லூர் ஊர்க்காரர்களும்அந்த சிவன் கோவிலுக்குச் செல்வது உண்டு.

கதிரேசன் சிங்கமநல்லூர் சென்று அடையும்போது மாலை நேரம் ஆகிவிட்டது. விடுதிக்குச் செல்லும் முன்னர் நேராக தான் கொண்டு வந்திருந்த தகரப் பெட்டியை கோவிலின் வாயிலில் ரசீது கொடுப்பவரிடம் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு சிவன் கோவிலின் உள்ளே சென்றான் கதிரேசன். சிவனை வணங்கிவிட்டு சிறிது நேரம் கோவிலில் அமர்ந்துவிட்டு பின்னர் விடுதியைச் சென்று அடைந்தான். வரிசையாக பல மாணவர்கள் அவரவர் தாய் தந்தையரோடு நின்று இருந்தார்கள். தானும் அவர்கள் வரிசையில் சென்று நின்று கொண்டான்.

அனைவரும் உற்சாகமாகத் தென்பட்டார்கள். அம்மாவை இம்முறையும் உடன் அழைத்து வந்திருக்கலாமோ என கதிரேசனுக்கு மனதில் பட்டது. கண்டிப்பும், கோபமும் அதிகமே நிறைந்த விடுதி காப்பாளர் தெய்வேந்திரனிடம் சென்று அறைக்கான எண்ணையும், அறைக்கதவுக்கான சாவியையும் பெற்றுக்கொண்டுவிட்டு ‘ஒவ்வொரு சனிக்கிழமை ஊருக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை வரலாமா சார்’ எனக் கேட்டான் கதிரேசன். ‘நீ ஊருலேயே இருக்க வேண்டியதுதானே, படிக்க வந்தியா ஊருக்குப் போக வந்தியா’ எனக் கடுமையாகவேச் சொன்னார் அவர். கதிரேசனுக்குப் பின்னால் நின்று இருந்தவர்கள் பயந்துதான் போனார்கள். ஆனால் கதிரேசன் பயப்படாமல் ‘படிக்கத்தான் வந்தேன் சார், வாய்ப்பு இருக்குமானு கேட்டேன்’ என்றான். முறைத்தார் தெய்வேந்திரன். தலையை குனிந்து கொண்டான் கதிரேசன். ‘ரூமுக்குப் போ’ என அதட்டியவர் கதிரேசன் பெயரை மனதில் பதித்தார்.

தயக்கத்துடனே அறையில் சென்று தனதுப் பெட்டியை வைத்துவிட்டு சுற்றிப் பார்க்க தனக்கு முன்னரே இரண்டு பேர் அந்த அறைக்கு வந்திருப்பது தெரிந்தது. ஒவ்வொரு அறையிலும் மூன்று பேர் தங்கிக்கொள்ளலாம். கட்டில் எல்லாம் கிடையாது. தரையில்தான் படுத்துக் கொள்ள வேண்டும். அறையில் புதிதாக வர்ணம் பூசி இருந்தது தெரிந்தது. மிகவும் சுத்தமாக இருந்தது. பெட்டிக்கு அருகில் அமர்ந்து கொண்டான் கதிரேசன்.

பெட்டியைத் திறந்தான். பெட்டியில் உள்புறம் ஒட்டப்பட்டு இருந்த சிவன் அபயம் அளித்துக் கொண்டு இருந்தார்.

‘தென்னாட்டுச் சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’

எனச் சொல்லிக்கொண்டே சின்னத் தலைகாணியும், போர்வையும் எடுத்து கீழே வைத்தான். தட்டு, டம்பளர், மிட்டாய், சேவு, முறுக்கு என எல்லாம் எடுத்து வைத்தான். பெட்டியை மூடினான். கதிரேசன் அறையில் தங்கிக்கொள்ளும் இரண்டு மாணவர்கள் உள்ளே வந்தார்கள்.

சிறிது நேரம் பின்னர் மூவரும் அறிமுகம் செய்து கொண்டார்கள். ஒருவன் நாகராஜன், காரியநேந்தல். மற்றொருவன் கார்த்திகேயன், வடமதுரை. அப்பொழுது அறைக்குள் தெய்வேந்திரன் வந்தார். ஒவ்வொரு பெயராக அழைத்தார். மூவரும் ஆம் என்றார்கள். கதிரேசனுக்கு அருகில் வந்தார் தெய்வேந்திரன். கதிரேசனை ஓங்கி ஒரு அறை விட்டார் அவர். 'சிவனே' என்று அலறினான் கதிரேசன்.

அருகில் இருந்து இருந்தால் அம்மா உன்னையே அழைத்திருப்பேன் என மனதுக்குள் கேவினான். ‘என்ன தைரியம் இருந்தா நீ வந்ததும் வராததுமா என்னை எதிர்த்துப் பேசுவ’ என்றார் தெய்வேந்திரன். மெளனமானான் கதிரேசன். ‘இங்க ஒழுக்கம்தான் முக்கியம். பெரியவங்களை மதிச்சி நடக்கனும். எதிர்த்துப் பேசினா கழுத்தைப் பிடிச்சி வெளியே தள்ளிருவேன், ஒழுங்காப் படிச்சி வெளியேப் போக வழியைப் பாரு’ எனத் திட்டிவிட்டுச் சென்றார். மற்ற இருவரும் நடுங்கினார்கள். கதிரேசன் பெட்டியைத் திறந்தான்.

‘உள்ளூர ஆசையில் ஒருவினாவும் கேட்டு வைத்தேன்
எள்ளிநெருப்பாடி என்மேல் எச்சமிட்டுச் சென்றார்
அம்மாவின் அரவணைப்பில் நானும் இருந்து இருந்தால்
சும்மாதான் அவளும் இருப்பாளோ சொல்சிவனே’

கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது. துடைக்க மன விருப்பமில்லாமல் தொடர்ந்து மெல்லிய குரலில் பலமுறை இதே பாடலைப் பாடினான். மற்ற இருவரும் பயத்துடனே இருந்தார்கள். கதிரேசனின் கண்கள் பெட்டியில் ஒட்டப்பட்டிருந்த சிவன் படத்தின் மேல் நிலையாய் நின்றது.

(தொடரும்)

Friday, 18 September 2009

அடியார்க்கெல்லாம் அடியார் - 1


புளிய மரங்கள் அதிகம் வளர்ந்து செழித்து இருந்த அந்த கிராமம்தான் புளியம்பட்டி. வாகன வசதிகள் எல்லாம் இல்லை. ஆனால் சாலையெல்லாம் போடப்பட்டு இருந்தது. லாரிகள் புளியம்பட்டிக்கு அருகில் இருக்கும் ஆற்றுப் படுகையில் மணல் அள்ளி செல்லும், அதற்காகவே இந்த சாலைகள் பயன்பட்டுக் கொண்டிருந்தது.

கிராமத்தில் பள்ளிக்கூட வசதியும் கிடையாது. அருகில் இருக்கும் சின்னாளம்பட்டிக்குத்தான் ஐந்து வரை படிக்கச் செல்ல வேண்டும். படிக்கச் சிரமப்பட்டு ஊர் சுற்றுபவர்களே இங்கு அதிகம். விவசாயத்தையும், நெசவுத் தொழிலையும் மட்டுமே நம்பி, ஊரில் இருப்பவர்கள் எல்லாம் பணக்காரர்களாக ஆவதென்பது சாத்தியமில்லாமல்தான் இருந்து வருகின்றது. இதில் மணல் லாரியில் வேலைக்குச் செல்பவர்களும் உண்டு. சிறுக சிறுக பணத்தை சேமிக்கலாம் என்றால் உடல் வலி நீங்கும் என சாராயமும், வெற்றியாளர்கள் என நிரூபிக்க சீட்டாட்டமும் பணத்தை பழுது பார்க்கும். பொறுப்பற்றவர்களாக இளைஞர்கள் இருக்கிறார்களெனில் அவர்களது தந்தையர்களும் பொறுப்பில்லாமலே இருந்து வருகிறார்கள். வீட்டு வேலை பார்ப்பதோடு தோட்ட வேலையென பார்த்து கிடைத்தவரை போதும் என அடுப்படிக்குள் புகைந்து போகும் தாய்மார்கள்தான் இங்கு அதிகம்.

வார இறுதி நாட்கள் என வந்துவிட்டால் ஒரு பஞ்சாயத்தாவது நடக்காமல் இருக்காது. சத்தமும் சண்டையுமாகவே அந்த நாட்கள் கழியும். பின்னர் எதுவும் நடக்காதது போல அனைவரும் சகஜமாக பழகி கொள்வார்கள். சாதிப் பிரச்சினை அவ்வப்போது தலை தூக்கும். ஆனால் வெட்டிக் கொள்ளமாட்டார்கள். இப்படி மிகவும் பின் தங்கிப் போய் எந்த ஒரு முன்னேற்றத்தையும் காணாமல் இறந்து போனவர்களும், இருந்து போகப்போவோர்களும் கிராமத்து கணக்கில் அதிகமாகவே தெரியும்.

அந்த புளியம்பட்டியில் வசித்து வந்த செல்லாயி தனது ஒரே மகன் கதிரேஷனை கஷ்டப்பட்டு பன்னிரண்டு வரை படிக்க வைத்து விட்டார். படிப்பினை சிரமம் இல்லாது படித்து வளர்ந்தான் கதிரேசன். கதிரேஷனுக்கு நான்கு வயதாகும் போதே காச நோயினால் அவனது தந்தை முருகேசன் சிவலோக பதவி அடைந்தார். புளியம்பட்டியில் மறுமணம் எல்லாம் செல்லுபடியாகாது. செல்லாயி தனது மகனே வாழ்க்கை என வாழ்ந்து வருகிறார்.

அப்படிப்பட்ட வாழ்க்கைக்கு குறுக்கே பாலிடெக்னிக் படிப்பு வந்து நிற்கிறது. கதிரேசன் இன்று சாயந்திரம் விடுதிக்குச் சென்று சேர்ந்து, நாளையிலிருந்து படிப்புத் தொடங்க வேண்டும். விடுதிக்கான பணத்தை மாதம் தவறாமல் கட்டிவிட முடியும் என்ற நம்பிக்கையில் செல்லாயி கதிரேசனை மேற்கொண்டு படிக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டார். கதிரேசனும் படிப்பின் மேல் கொண்ட அக்கறையினால் சரியென கேட்டுக் கொண்டான். மன உறுதியுடன் செல்லாயி இருந்தாலும் மகனைப் பிரிந்து இருப்பது என்பது கடினமானதாகத்தான் இருக்கும் என உணரத் தொடங்கினாள். கண்கள் கலங்கியவாறே முறுக்கு, கடலை மிட்டாய், சேவு என எல்லாம் எடுத்து வைத்து 'பத்திரம்பா' என வழி அனுப்பியபோது இருந்த பாதி உயிரும் போனதாகவே உணர்ந்தாள் செல்லாயி.

ஓட்டு வீட்டிலிருந்து ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தவாரே நடந்தான் கதிரேசன். ஊரின் எல்லையைத் தாண்டிச் செல்லும் முன்னர் ஓடிப்போய் அம்மா முகத்தை மறுபடியும் பார்த்துவிட்டு வரலாமா என்றுதான் இருந்தது கதிரேசனுக்கு.

(தொடரும்)

Wednesday, 16 September 2009

மெருகு

சாகுபடி என தலைப்பு இடப்பட்டு
தமிழ் வார்த்தைகளால்
எண்ணங்கள் அலங்கரிக்கப்பட்டு
மேசையின் மீது
கவிதை ஒன்று
மிதந்து கொண்டு இருந்தது

விழிகள் கொண்டு
படித்துப் பார்க்கையில்
அற்புதம் எனப் பாராட்டி
அக்கவிதைக்கு ஒரு கவிதை
எழுதிவிட நெற்றி விரிந்தது

மீண்டும் வாசித்ததில்
வார்த்தை அலங்காரம்
பாமரனுக்குப் புரியுமோ
எண்ணியவாறே
கருவினைச் சிதைக்காது
வார்த்தைகள் மாற்றி
அக்கவிதையை வளர்த்தபின்
பல உள்ளங்களை
சாகுபடி செய்யும் என
இதயம் சிலிர்த்தது

உண்மை சமுதாயத்தின்
உணர்வு தாக்கம்தனை
ஒவ்வொரு ஜீவனிலும்
புகுத்திவிடும் என
அந்த படைப்பினை
கர்வம் கொண்டு பார்த்த பொழுது

''அம்மா
ஏதாவது போடுங்கம்மா''
வீட்டு வாசலில் இருந்து வந்த
சப்தம் கேட்டு
சில வரிகள் தன்னை
சாகுபடி கவிதையில் சேர்த்துவிடலாம்
என எண்ணியே
வாசலில் நின்றவருக்கு
நன்றி சொல்லி
எனக்கு மட்டும் இருந்த உணவை
அவருக்கு கொடுத்துவிட்டு
திரும்புகையில்
என் வெற்றுப்பானைகள்
மெருகேறி இருந்தன.

வலைப்பதிவர் ஆனேன்! தொடர்ந்து விளையாடுங்க (கிரி, தெகா, விதூஸ், ஜெஸ்வந்தி)




முத்தமிழ்மன்றத்தில் நான் எழுதியிருந்த பதிவுகளை மட்டுமே (சில பதிவுகள் தவிர்த்து) இங்கே வெளியிட்டுக் கொண்டிருந்த தருணத்தில் ''தேவதை வந்தாள்'' என அழைத்துச் செல்லக் கூறினார்கள் திருமதி.ஜெஸ்வந்தி அவர்கள். அவசர அவசரமாக பதில் சொல்ல வேண்டி தேவதையிடம் ஒரு வரம் கேட்டு அந்த தேவதையைத் தொலைத்துவிட்டேன். வலைப்பூக்களில் பார்வை இடும்போது அந்த தேவதை மிகவும் சந்தோசமாக வலைய வந்து கொண்டிருப்பதைக் கண்டு ம்னதில் சந்தோசம் கொண்டேன். ஒரு விசயத்தை எத்தனை ஈடுபாடுடன் செய்து கொண்டிருக்கிறார்கள் என.

இதோ தொடர் விளையாட்டுகளில் கலந்து கொள்வது மூலம் வலைப்பதிவராக அறிமுகம் ஆகிறேன்.

1. A – Available/Single? Not Available & Not Single : திருமணம் ஆகிவிட்டது. தனியாளானாக என்னைக் கருதிக்கொண்டால் பெரும் இடர்பாடுகள் வந்து சேரும்.

2. B – Best friend? : எனது மனைவி. எது சரி, எது சரியில்லை என அவர் பார்வையிலிருந்து சொல்வார். என் பார்வைக்கு ஏற்றபடி நான் நடந்து கொள்வேன்.

3. C – Cake or Pie?: கேக் தான், அதிக விழாக்களில் சாப்பிடுவதுண்டு.

4. D – Drink of choice? : எப்போதும் விரும்பி குடிக்க நினைப்பது 7up

5. E – Essential item you use every day? : ஆடைகள்

6. F – Favorite color? : வானத்து, கடலின், கிருஷ்ணரின் நீல நிறம் (கதையே எழுதி இருக்கோம்)

7. G – Gummy Bears Or Worms?: விளையாட, விருந்தாக இரண்டையுமே சேர்த்துக்கொள்வதில்லை.

8. H – Hometown? - மேலத்துலுக்கன்குளம். (எங்கே இருக்கிறது என பலருக்கும் தெரியாமலிருந்தால் இந்த கிராமம் விருதுநகர் மாவட்டத்தில் இருக்கிறது).

9. I – Indulgence? - கற்பனையில் மிதப்பது.

10. J – January or February? ஜனவரி, ஜனங்களுக்கு வரிகள் பல! எனினும் முழுமையான மாதம், முதல் மாதம்.

11. K – Kids & their names? ஒன்பது வயது நிரம்பிய ஒரு பையன். நவீன்.

12. L – Life is incomplete without? - அமைதி, திருப்தி.

13. M – Marriage date? 13-07-1998

14. N – Number of siblings? ஆறு - இரண்டு அக்காக்கள், நான்கு அண்ணன்கள்

15. O – Oranges or Apples? ஆப்பிள். உடலுக்கு நல்லது என பழமொழி கொண்டிருப்பதால்.

16. P – Phobias/Fears? மனிதர்களைக் கண்டு வெகுவாக அச்சப்படுவேன். 'நான் ஒரு ஏமாளி' என என்னை மிக எளிதாகச் சொல்வார்கள்.


17. Q – Quote for today? : 'நன்றாகச் சாப்பிடு, நன்றாகத் தூங்கு, எல்லா வேலையும் நன்றாகவே நடக்கும்'

18. R – Reason to smile? : 'புன்னகைக்குக் காரணமெல்லாம் சின்னதாய் தட்டிக்கொடுத்துக் கொள்வது'

19. S – Season? வெயில் மாறி தூறல் பொழியும் காலம்.

20. T – Tag 4 People? திரு. கிரி, திரு. தெகா, திருமதி. விதூஸ், திருமதி. ஜெஸ்வந்தி (சரியாகத்தான் பகிர்ந்து இருக்கிறேன்)

21. U – Unknown fact about me? உலகிற்கு நல்லது செய்ய வேண்டும் என எதுவுமே செய்யாமலிருப்பது.

22. V – Vegetable you don't like? பிடித்தத் காய்கறிகளைக் கேட்காமல் பிடிக்காத காய்கறி கேட்ட இந்த கேள்விதான். 'எதையும் சாப்பிடும் குப்பைத் தொட்டி என் வயிறு' என பிறர் கேலி செய்வதுண்டு, அசைவம் தவிர.

23. W – Worst habit? எதையும் எளிதாக நம்பிவிடுவது.


24. X – X-rays you've had? 2004ல் animal experiments செய்யும்போது ஏற்பட்ட உபாதையினால் எடுத்துக் கொண்ட நுரையீரல், இருதய எக்ஸ் கதிர் படம்.

25. Y – Your favorite food? :) சாதமும், சாம்பாரும் (இவையிரண்டும் நானே நன்றாக சமைப்பேன்). சிப்ஸும் பர்கரும்.

26. Z – Zodiac sign? Capricorn

அன்புக்குரியவர்கள்: அன்னையும், தந்தையும், மனைவியும், மகனும். உற்றாரும், சுற்றாரும், நட்பும், பகையும்.

ஆசைக்குரியவர்: கடவுள்

இலவசமாய் கிடைப்பது: காண்பதரிது

ஈதலில் சிறந்தது: எதுவும் இரவாமலிருக்கும்படி செய்வது.

உலகத்தில் பயப்படுவது: பொய்யும், உண்மையும்.

ஊமை கண்ட கனவு: எழுத்துக்களில் தெரிந்து கொள்ளலாம்.

எப்போதும் உடனிருப்பது: தலைக்கனம்

ஏன் இந்த பதிவு: கோவியாரின் அன்பு அழைப்பு.

ஐஸ்வர்யத்தில் சிறந்தது: நோயில்லா கல்வியும், செல்வமும்.

ஒரு ரகசியம்: சொல் எனும் சொல்

ஓசையில் பிடித்தது: பறவைகளின் சப்தம்

ஔவை மொழி ஒன்று: அறஞ் செய்ய விரும்பு (விரும்புவதை மட்டுமே செய்து வருகிறேன்)

(அ)ஃறிணையில் பிடித்தது: தாவரம் (இது இல்லாது போயிருந்தால் பிற அஃறிணைகளும், உயர்திணையும் இல்லாது போயிருக்கும்)


நன்றி கோவியாரே.

Tuesday, 15 September 2009

அழகிய சிலை

நடுங்கியே கைகள்
வடித்தன சிலை
கோணலும் மாணலுமாய்
என் கண்களுக்கு

பொருட்காட்சியில் வைத்தேன்
அருள்பாலிப்பது போன்றே
யார் இதை வாங்குவார்
அச்சத்தில் நான்

சிலைதனை எடுத்து
ஒருவர் ரசிக்கையில்
விலை சொல்ல மனமில்லை
விலகினேன் நான்.

Monday, 14 September 2009

தேவதை வந்தாள் வரம் தர தவித்தாள்

ஜெஸ்வந்தி அவர்கள் தேவதையை வந்து அழைத்துச் செல்லுமாறு அழைப்பு விடுத்தார்கள். நானும் சென்று தேவதையை அழைத்து வந்துவிட்டேன். எனக்கு தேவதையிடம் பத்து வரங்கள் கேட்க விருப்பமில்லை. ஒரே வரம் கேட்கலாம் என நினைத்து

''தேவதையே உன்னைப் போல் பிறருக்கு வரங்கள் அருளும் பாக்கியம் எனக்கு கிட்ட வேண்டும்'' என சொன்னேன்.

என்ன நினைத்தாளோ, தேவதை எங்கு போனாள் எனத் தெரியவில்லை!

எவரையும் வந்து அழைத்துச் செல்ல என்னிடம் அந்த தேவதை இப்போது இல்லை, மிகவும் வருந்துகிறேன்.











அடுப்பங்கரையில் அம்மா!

சேவலை எழுப்பிவிட்டு
முன்வாசல் துடைத்து தெளித்து
அழிந்துவிடுமென தெரிந்தும்
அளவு புள்ளிகளிட்டு சித்திரம் வரைந்து
வானத்து சூரியன் வருமுன்னே
நெருப்பு சூரியன் உதிக்க வைத்து
நெடுநேரமாய் அங்குதான் நிற்பாள் அம்மா.

அடுப்பினை ஊதினாலும்
புகைபடியாத சுவாசம்
"புகைபிடியாத" மன நேசம்
கண்களன்றி காதலித்து
காதலினால் கருத்தரித்து
"கருவறை சுத்தம்"
ஒருபோதும் செய்ததில்லை
"ஒவ்வாத பானம்" நுகர்ந்ததில்லை
ஒழுக்கமே வாழ்க்கையென
போற்றி வாழும் அம்மா
ஊர் எல்லை தாண்டியதில்லை
எங்கள் ஊர் காவல் தெய்வம் போல.

வீணான கனவுகள்
கலைய விருப்பமின்றி
உறங்கி நடிக்கும் என்
நடிப்புத் தூக்கம் துக்கம் கலைத்து
கல்வி கலை இசையென கற்றிட செய்து
இம்மியளவும் என் வாழ்க்கை
சலித்துபோய் விடாது
தினம்தோறும் எனக்காக வாழும் அம்மா.

ஊரெல்லாம் சுற்றி
காணாத மனிதர்கள் கண்டு
கையில் நடைபேசியுமாய்
காலில் கணினியுமாய்
அலைந்து திரிந்து வீடு திரும்புகையில்
அன்போடு அரவணைக்கும் அம்மா
அறிகின்றேன் உண்மையான அன்பும்
நல்ல ஒழுக்கமும்தான் வாழ்க்கையும் கடவுளும்.

யோசிக்கின்றேன்
இனிவரும் காலத்தில் அன்புக்காக என்பிள்ளை
யாருமில்லா அடுப்பங்கரையில்
துயரம் தாங்கி உலவ வேண்டும்
நானும் என் மனைவியும் வீடு சேரும் வரை.

கருத்துகளும் அதன் சுதந்திரமும்

வலைப்பூக்களில் எழுதுவோர் அனைவருக்கும் கருத்துக்களை வெளியிட சுதந்திரம் உண்டு, அதே வேளையில் கருத்துக்களை எவ்வாறு வெளியிட வேண்டும் என்கிற ஒரு வரைமுறையும் இருக்கிறது? என்பதை அனைவரும் அறிவோம்.

கருத்துக்களைப் பொருத்தவரை கருத்துக்களை வெளியிடுபவரின் மனநிலை, கருத்துக்களைப் படிப்பவரின் மனநிலை என இரண்டு விதமாகப் பிரித்துக் கொள்ளலாம். கருத்துக்களை வெளியிடுபவர் எந்த சூழ்நிலையிலும் சரி, எல்லாச் சூழ்நிலையிலும் சரி தனது கருத்துக்களுக்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதை எவரும் மறுக்க இயலாது.

கருத்துக்களை எடுத்துக்கொள்வது என்பது படிப்பவரின் மனநிலையைப் பொருத்தே அமைகிறது, அதாவது அந்த நேரத்தில் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதைப் பொருத்தும் அமைகிறது. படிப்பவர் ஒவ்வொருவரின் மனநிலைக்கு ஏற்ப கருத்துக்கள் எழுதுவது என்பது எளிதான காரியமில்லைதான் ஆனால் கருத்துக்களை திறம்பட எழுதும் விதம் உண்டு.

மேலும் ஒருவரால் வெளியிடப்படும் கருத்துக்களினால் ஏற்படும் மனஸ்தாபங்கள், அதனால் வரக்கூடிய மன உளைச்சல்கள் என கருத்தினை வெளியிடுபவரும், கருத்தினால் பாதிக்கப்படுபவரும் அடைகிறார் என்பதில் இரு கருத்து இல்லை. இதன் விளைவாக அவ்வப்போது தலைகாட்டும் பிரச்சினைகள் பெரிய விவாதங்களை ஏற்படுத்தி வருவது ஒருவரது எழுத்தின் நோக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் அமைந்துவிடுகிறது.

'குழப்பமில்லாது இருப்பின் தெளிவுக்கானத் தேடல் அவசியமில்லை' என்பதை அனைவரும் அறிவோம். பல விசயங்கள் குழப்பம் தரக்கூடியதாக இருக்கும் காரணத்தினாலேயே தெளிவுக்காக விசயங்கள் விவாதிக்கப்படுகின்றன. ஒரு மாறுபட்ட எண்ணம் மற்றவர் மனதில் எழுவதற்கு நமது கருத்துக்களும் காரணம் என்பதும் உண்மையே.

பொதுவாக எவரையும் புண்படுத்த வேண்டும் எனும் நோக்கத்தில் எவரும் பதிவுகளை இடுவதில்லை. கருத்துச் சுதந்திரத்தை நாம் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதை பரிசீலனை செய்வோம். 'நமக்குச் சரியெனத் தெரிவது பிறருக்குத் தவறாக இருக்கலாம்' நமக்குத் தவறெனத் தெரிவது பிறருக்குச் சரியாக இருக்கலாம்' எனும் உண்மையை உணர்ந்து கொண்டு விவாதத்தைத் தவிர்த்துவிட்டு கலந்துரையாடினால் அனைவரும் மகிழ்வுடன் இருப்பார்கள், நல்ல நல்ல விசயங்கள் கற்று மகிழலாம்.

எழுத்தின் நோக்கம் வெல்லட்டும், பல சிறந்த எழுத்தாளர்கள் உருவாகட்டும்!

Sunday, 13 September 2009

தாவரமே ஆதாரம்


முளைக்கும் விதைக்கு
ஒளித் தேவையில்லை
விழித்துக் கொள்ளும்
முளைத்து வந்தவுடன்

கோள்கள் வெடித்து சிதறியதும்
கரியமில வாயுதனை
ஆக்ஸிஜனாய் மாற்றி
உயிரின் ஆதாரமாய்
உரைத்து நிற்கும் இலைகள்

வேருக்கு தெரியாது
உணவு தயாரிக்க
தண்ணீரை உலைக்குத்
தருவதுப் போல்
தாதுவும் தந்து
இலை தயாரிக்க
வேர் பார்த்து ரசிக்கும்

ஒளியும் நீரும் இல்லையெனில்
ஒன்றுக்கும் ஆகா தாவரம்
உணர்ந்து கொள்ளுங்கள்
உலகின் வாழ்வுக்கு
தாவரமே ஆதாரம்.

Saturday, 12 September 2009

எங்க ஊரு ஆலமரம்.

''என்னடா ஆலமரத்தையேப் பார்த்துட்டு நிற்கிறே, போய் மாட்டுக்கு புல்லும், ஆட்டுக்கும் இலையும் பிடுங்கிட்டு வா''

''இருங்க முதலாளி, இப்போ போறேன்''

''ஏண்டா சொல்லிட்டே இருக்கேன், பதிலாப் பேசற''

தரையில் கிடந்த குச்சியை எடுத்து ஓங்கி கருத்தபாண்டியின் முதுகில் அடித்தார் பண்ணையார் குருபாண்டி. வலி தாங்கமுடியாமல் வார்த்தைகளை முனங்கியபடி ஓடினான் கருத்தபாண்டி.

மாட்டுக்கு புல்லும் ஆட்டுக்கு இலையும் பறித்துப் போட்டுவிட்டு மீண்டும் ஆலமரத்திற்கு கீழே போய் நின்றுகொண்டான். அவனுக்கு நேற்றிலிருந்து ஆலமரத்தின் மேல் ஒருவித ஈர்ப்பு வந்துவிட்டது. தாய் தந்தையை சிறுவயதிலே இழந்து தனது குழந்தை பருவம் முதற்கொண்டு பண்ணையார் வீட்டிலேயே வேலை செய்து காலம்தனை கடந்தான். பத்து வயதுதான் ஆனால் வேலைக்கு இது பத்தாது என பண்ணையாரா சொல்லப் போகிறார்.

''டேய் பாண்டி உன்னை பண்ணணயாரு வீட்டுக்கு வரச் சொல்லுறாருடா''

குரல் கேட்டதும் ஆலமரத்தின் மேல் வைத்த கண்ணை எடுத்துத் திரும்பி ஓட்டம் ஓட்டமாய் பண்ணையார் வீட்டை அடைந்தான்.

''ஏண்டா உன்னை ஒரு வேலை சொன்னா அதை மட்டும்தான் செய்வியா, ஏண்டா நேத்திலிருந்து ஆலமரத்துக்கு கீழேயே நிற்கிற''

கருத்தபாண்டி எதுவும் பேசாமல் நின்றுகொண்டிருக்க பண்ணையார் எழுந்து அவனை ஓங்கி ஒரு அறை விட்டார். கருத்தபாண்டி ஓ என அழுதுவிட்டான். அழுததை பொருட்படுத்தாமல் மேலும் சில அடிகள் கொடுத்தார்.

''ஏன் பச்சைப் புள்ளைய போட்டு இந்த அடி அடிக்கிறீங்க''

பண்ணையாரின் மனைவி கருத்தபாண்டியை அழைத்து சாதம் போட்டார். விக்கிக் கொண்டே சாதம்தனை விழுங்கினான்.

''அவர் எப்பதான் உன்னை அடிக்கிறதை நிறுத்தப் போறாரோ, ஏன் இப்படி இவர்கிட்டயே கிடந்து அடிவாங்கி சாகுற எங்காவது ஓடிப்போய் வாழ வேண்டியதுதான''

சாப்பிட்டுவிட்டு பதில் எதுவும் பேசாமல் திண்னையில் வந்து ஒரு ஓரத்தில் படுத்துக்கொண்டான். பண்ணையார் குருபாண்டி அவனருகில் வந்தார். கருத்தபாண்டி நடுங்கியவாறே எழுந்தான்.

''படுடா படு, நீ அந்த ஆலமரத்துக்கிட்ட நிற்கிறது எனக்குப் பிடிக்கலடா இனிமே உன்னை அங்க கண்டேன் கொன்னு போட்டுருவேன்''

ஆனால் அதிகாலை எழுந்து ஆலமரத்துக்குத்தான் போனான் கருத்தபாண்டி. அங்கேயே நின்று கொண்டிருந்தவன் நேரம் போவதை கவனிக்கத் தவறினான். பண்ணையார் நேராக அங்கே வந்தார்.

''பாண்டி பண்ணையார் வராருடா''

கருத்தபாண்டி திரும்பி பார்த்தவன் ஓட்டமாக ஓடினான். மாடுகளை அவிழ்த்துக்கொண்டு காட்டுப் பக்கம் போனான். பண்ணையார் மாடுகளை ஓட்டிச் செல்வதைப் பார்த்து பேசாமல் வீட்டிற்குச் சென்று விட்டார். மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவன் எங்காவது ஆலமரம் தென்படுகிறதா எனப் பார்த்தான். ஆனால் காட்டில் ஆலமரங்களே தென்படவில்லை. நன்றாக வெயில் அடித்ததும் மாடுகளை ஓட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

''ஏண்டா நேத்து என்ன சொன்னேன், நீ என்ன செஞ்ச அந்த ஆலமரத்துக்குக் கீழ போய் நிற்காதடா''

''அந்த ஆலமரத்துக்கு எத்தனை பறவை வருது ஐயா, மரம் விரட்ட மாட்டேங்குதே, வேலை வாங்க மாட்டுதே ஐயா''

சொல்லிவிட்டு ஓடிப்போனான் கருத்தபாண்டி. மிகவும் யோசித்தார் குருபாண்டி. அடுத்த தினமே தனது மனைவியை அழைத்துக்கொண்டு அந்த ஊரு பள்ளி தலைமை ஆசிரியரை சந்திக்கச் சென்றார் பண்ணையார் குருபாண்டி.

முற்றும்.

Friday, 11 September 2009

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 4

எலக்ட்ரானின் எதிர் தன்மையை காட்டியவர் ஜே. ஜே. தாம்ஸன். புரோட்டானின் நேர் தன்மையை காட்டியவர் கோல்ட்ஸ்டெயின். இவர்களின் ஆராய்ச்சியின்படி ஒரு அணுவின் மொத்த நிறையும் நேர்தன்மையுடைய புரோட்டான் துகளால்தான் வருகிறது எனவும் மிக மிக மெல்லிய நிறை கொண்டது எலக்ட்ரான் எனவும் தெரிய வந்தது.

உதாரணமாக எலக்ட்ரான் 1837 மடங்கு புரோட்டானை விட சிறியது என ஹைட்ரஜனில் நடத்தப்பட்ட ஆய்வு மூலம் தெரிந்தது.

இந்த எலக்ட்ரான்களினால்தான் அணுக்களின் எண் பற்றி எளிதாக அறிய முடிந்தது. இது குறித்து மோஸ்லியின் ஆராய்ச்சிகள் சொன்னது என்னவெனில் எலக்ட்ரான்கள் உலோகத்தினை மோதும்போது எக்ஸ்-ரே கதிர்களை உருவாக்குகிறது இந்த கதிர்களுக்கு எந்தவித தன்மையும் இல்லை அதே வேளையில் ஒரு தனிமத்தில் இருந்து மற்றொரு தனிமமாக மாறும்போது அத்தனிமத்தின் நிறை அதிகரிப்பதாகவும் அது புரோட்டானின் நேர்தன்மையினால்தான் என கண்டறிந்தார். எனவே புரோட்டான் தான் அணு எண்ணுக்கு காரணம் என அறிவித்தார் இது தான் ஒரு அணுவிற்கு அடிப்படையானதும் கூட. ஒரே எண்கள் கொண்ட வெவ்வேறு அணுக்கள் இல்லவே இல்லை என்பதைச் சொல்வதைக் காட்டிலும் இதுவரையிலும் எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

மெண்டலீவ் தனிம அட்டவணையை உருவாக்கியவர். இவரது கணிப்புகள் வேதியியலுக்கு பல வகையில் உதவி செய்தன என சொன்னால் மிகையாகாது. மென்டலீவின் ஒருங்கினைப்பு சிந்தனை அற்புதமான செயல்பாடு எனலாம்.

சாட்விக் நியூட்ரானைக் கண்டுபிடித்தார், கண்டுபிடிக்கப்பட்டு 85 வருடங்கள் கூட இன்னும் முற்றுப் பெறவில்லை. இந்த நியூட்ரானின் எடையும் புரோட்டான் எடையும் ஒன்றாக இருந்தது. இதனுடைய கூட்டுத்தான் ஒரு அணுவின் நிறை எனலாம் அதாவது நிறை எண்.

பொதுவாக இந்த எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் எல்லாம் எப்படி வந்தது என உள்நோக்கிப் பார்த்தால் ஒன்றுமே புரியாத விசயமாக இருக்கும். இப்படி ஒரு மின்சாரத் தன்மையான சக்தி எப்படி வந்தது?

முதலில் வாயுக்கள் போன்ற தூசுப் பொருட்கள் இருந்து இருக்கிறது என்று சொல்லும் போது அதனிலிருந்து தான் நட்சத்திரங்கள் உருவாகி இருக்கிறது என சொல்லும் போது வேதியியல் வேதம் பேசுகிறது என்று தான் தோன்றுகிறது.

இந்த சூரியனின் ஆயுட்காலம் 13.5 பில்லியன் வருடங்கள் வரை தான் அதில் தற்போது 4.5 பில்லியன் வருடங்கள் முடிந்து விட்டது இனி 7.5 பில்லியன் வருடங்கள் இருக்கிறது அதில் என்னவெல்லாம் நடக்கும் என பில்லியன் வருடம் வீதமாக சொல்லி வைத்து விட்டார்கள். முடிவில் ஒன்றுமே இல்லாத ஒரு சூரியனாய் போய்விடுமாம். இந்த ஆய்வு ஆச்சரியம் தருகிறது.

அறிவியல் கூற்றுப்படி தனிமங்கள் எல்லாம் பின்னால் தோன்றியவை, ஒன்றில் இருந்து ஒன்று மாறி வந்தவை எனும் போது இவையெல்லாம் முன்னால் இருந்தவை எனும் கூற்று அடிப்பட்டு போகும். அப்படி முன்னால் இருந்தவை என்றால் எதற்கு அனைத்து கோள்களும் ஒரே மாதிரியான நிலையை பெறவில்லை என்ற கேள்வியும் எழும். இயற்பியலும் வேதம் பேசுகிறது.

இந்த தட்பவெப்ப நிலையே உயிர் வாழச் சாதகமானது என சொல்லப்படும் பட்சத்தில் காற்றில்லாமல் வாழும் உயிரினங்கள், தரையில் வந்தால் செத்துப் போகும் உயிரினங்கள், தண்ணீரில் சென்றால் தவித்துப் போகும் உயிரினங்கள் என பிரிந்து இருக்கும் பட்சத்தில் மற்ற கோள்களிலும் உயிர்கள் இருக்கத் தானே செய்யும்? கண்ணுக்குத் தெரியாமல் வாழும் உயிரினங்களா அவை? கேட்கும் சப்தம் இருக்கிறதே அதைக் கூட அளந்து வைத்து இருக்கிறார்கள். அதனை டெசிபல்ஸ் எனப்படும். அந்த அளவுக்கு உட்பட்ட சப்தம் மட்டுமே நாம் கேட்கமுடியும்! அப்படியெனில் உயிரியலும் வேதம் பேசுகிறது!

எழுத நினைத்ததும்

கவிதை எப்படி வருமாம்
காதலித்தால் வருமாம்
கற்பனை இருந்தால் வருமாம்
கலங்கி கிடக்கும் நெஞ்சம்
புலம்பி தவிக்கையில் வருமாம்

துயரம் கண்டு துடிதுடிக்கையில்
துள்ளிக்கொண்டு சீறிப்பாய்ந்து வருமாம்
கண்ணை மூடி கடவுளை நினைக்கையில்
கனிந்து தவழ்ந்து வருமாம்

கண்ணீர் சிந்தி அழுவதற்கு பதில்
எழுதுகோல் சிந்தி அழுது வருமாம்
வார்த்தை அலங்காரம் செய்துவிட
வேடிக்கைக் காட்டி வருமாம்
வண்ணத்துபூச்சிப்போலே பறந்து
வண்ணகனவுகளுடன் வருமாம்

எழுத நினைத்தும்
எழுத வார்த்தைகளன்றி இருப்போர்க்கு
ஊமையாகவும் வருமாம்
புன்னகையாகவும் வருமாம்
அழுகையாகவும் வருமாம்
தோழமையாகவும் வருமாம்

இனி
கவிதை வந்தவிதம்தனை
நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

Thursday, 10 September 2009

காதல்

உன்மேல் எனது ஈர்ப்பு
உயிரின் பாதுகாப்பு
தொட்டதற்கெல்லாம் குற்றம்
தொலையாது மனம் சுற்றும்
விட்டுவிட்டு போக நினைக்கையில்
கால்களுக்கும் மனம் இருக்கும்
வாசல் கடக்காது
கட்டுப்பட்டே நிற்கும்!

என்ன கொணர்ந்தேன் என
கைகளைப் பார்த்துக்கொண்டே
இதயத்தில் நுழைவாய்
அன்புதனை விடவா
பொருள் பெரிதென்றால்
பொருள்தான் பெண்ணின் அழகு
பொருள்படச் சொல்வாய்
புரிந்தவனாக நான் இல்லை!

காதலை மனதில் பூட்டிக் கொண்டால்
கண்கள் எப்படி சொல்லிக் காட்டும்
ஊடலின் வலி என்னுள் விதைத்து
பூட்டினை உடைப்பாய் கட்டியே அணைத்து
விழிகளில் வழிந்தோடும் கண்ணீர்த் துளிகள்
விருப்பமில்லாத விளக்கங்கள் சொல்லி வழியும்
பொருளில் இல்லை காதல் என்பதை
உனது புன்னகைச் சொல்லிக் கிறங்கும்

எனது ஆயுள் உன்னில் அடங்கும்
பிள்ளைப்பேறினால் உலகம் இருக்கத் தொடரும்
கைகள் இணைத்து நடந்தே செல்கையில்
ஒருவருக்கொருவர் முதுமையில் முதுகில் சாய்கையில்
எப்படி வாழ்ந்தோம் என எண்ணியே
முகத்தோடு முகம் ஒட்டுகையில்
இறைவனாக நாம் இயங்க வைத்த
காதலை கணக்கிட்டு சொல்லவும் கூடுமா?
உன்மேல் எனது ஈர்ப்பு
நமது உயிரின் பாதுகாப்பு!

(நம்பிக்கை குழுமம் நடத்திய போட்டியில் சிறப்பு பரிசு பெற்ற கவிதை)

Wednesday, 9 September 2009

சிறுகதைப் பட்டறை - ஆச்சரியமளிக்கிறது.

சிறுகதைப் பட்டறை குறித்த இன்றைய பதிவு ஒன்றைப் படித்ததும் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. முன்னர் இதே சிறுகதைப் பட்டறை சிறப்பாக நடைபெற வாழ்த்துகள் தெரிவித்தும் இருந்தேன்.

நானூறு ரூபாய் நுழைவுக் கட்டணம் என்று எழுதப்பட்டு இருந்ததைப் படித்துதான் மிகவும் ஆச்சரியப்பட்டு போனேன். தொழில்ரீதியாக தங்களை மெருகேற்றிட பணம் செலவழித்து பல பட்டறைகளில் தங்களை இணைத்துக்கொள்பவர்களிடையே எழுத்துத் தொழிலையும் போற்றி இந்த சிறுகதைப் பட்டறை மூலம் தங்களை மெருகேற்றிட நினைத்து இருக்கும் பல ஆர்வலர்களை நினைக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இடத்திற்கே அதிக பணம் செலவழிந்துவிடும் என்பதுதான் வருத்தத்துக்குரிய விசயம். சிறுகதை எழுதிட அமைதியான சூழல் அவசியம், ஆடம்பரமான சூழல் அல்ல!

பிறந்தநாள் விழா, தலைவர் படம் என விழாக்கள், சினிமா என செலவிடும் பணத்தைப் பார்க்கும்போது இந்த பணம் ஒருவிதத்தில் மிகவும் குறைவுதான். ஆனால் இந்த பணத்தைக் கூடத் தர இயலாமல் எழுதத் துடித்துக் கொண்டிருக்கும் ஒருவர் இருக்கவும் கூடும்.

இன்றைய வாழ்க்கை சூழலில் தானாக கற்றுக் கொள்வது என்பது குறைந்து போய்விட்டது. எதையும் எவரேனும் சொல்லித் தந்தால் மட்டுமே கற்றுக் கொள்ளும் பழக்கம் வந்துவிட்டது. இதற்கு அடிப்படை காரணம் இதற்காக தனியாக நேரம் செலவிட முடியாததும், தன் முனைப்பு இல்லாததும் காரணமாகும். இது போன்ற பட்டறைகளில் கலந்து கொள்வதால் நாம் மெருகேறிவிடலாம் என கனவு காண்பவர்கள், இதன் மூலம் பெறும் அனுபவங்களை முயற்சியாக்க வேண்டும் என நினைவுடன் இருந்தால் மட்டுமே வெற்றி காண முடியும்.

இப்படித்தான் லண்டனில் மருத்துவத் துறைக்குச் செல்ல மருத்துவம் சம்பந்தமாக இரண்டு நாட்கள் மட்டுமே நடக்கும் பட்டறைகளில் பணம் செலவழித்து கலந்து கொள்ளும் மாணவ மாணவியர்கள் இங்கு அதிகம் பேர் உள்ளனர். இதுபோன்ற பட்டறைகளில் கலந்து கொள்வதால் ஒரு விழிப்புணர்வும், நல்ல அனுபவமும் கிடைக்கக் கூடியதாகவே கலந்து கொள்பவர்கள் கூறுகிறார்கள், மேலும் இவ்வாறு கலந்து கொண்டதற்கான தரப்படும் சான்றிதழ் பெரும் மதிப்பு உடையதாக இருக்கிறது.

சிறுகதை பட்டறை சிறப்பாக நடந்திட வாழ்த்துகள்.

உனக்கென இருக்கும் உடல்

உயிரை உடலுக்குள் எங்கு
வைத்து இருக்கிறாய்
இந்த உடல் வளர வளர
உயிர் சுருங்கிக் கொண்டே வருமோ
உடல் வளரும் முன்னே
சுருங்கிப் போன
உயிர்களும் உண்டே இங்கு!

வெளியில் விடுதலையுடன் இருந்த
உயிரையா உடலுக்குள் வைத்தாய்
வெளிச் செல்ல வேண்டுமென்றா
தினமும் போராடுகிறது
இருக்குமிடம் அறியாத எனக்கு
அதன் போராட்டம் புரிவதில்லை!

ஆதியும் அந்தமும் இல்லாத
உயிரினை எங்ஙனம் படைத்தாய்
உறுப்புகள் உடல் பிரிகையில்
உயிரும் துணை சென்று வருமோ
உன்னை உணர்ந்திட
உடல் தேடி வருவதேன்!

உயிருக்கு உன்னை உணர வைக்கும்
ஒரு வழி காட்டியது இவ்வுடல்
புதைக்கவோ எரிக்கவோ வேண்டாம்
மீண்டும் அதே உயிர்
உணர்தல் தொலைத்து உடல்
தேடி வரலாம் பாதுகாத்து வையுங்கள்.

Tuesday, 8 September 2009

உனக்காக ஒரு பொழுது

நீ பிறந்தவுடன்
நீதான் எனக்கென
எனது கன்னம் பிடித்து
தட்டிக்கொடுத்து நம் திருமணம்
குறித்துப் போன உன் தந்தை!

முடிந்து வளரும் தினமெல்லாம்
நான் பார்த்து ரசிக்க
நீ வாங்கி வந்த வரமாம்
உனது பிறப்பிற்கு பின்னர்
மறுபிறப்பு எடுத்த என் உயிர்
பொய் பேசாமல் சொல்லும் என் அம்மா!

அருகருகே அமர்ந்த மழலை மொழிகள்
காதல் புரியாமலே காதல் பார்வைகள்
முடியாத சக்தியெல்லாம் என்னில் இருப்பதாய்
என்னுயிர் காக்கின்றாய் உன்னுயிர் காத்துக்கொண்டு!

உன்னில் என்னை புதைத்த காலங்கள்
எனது கனவினை சுமக்கும் நேரங்கள்
சிறுவயது காலம் முதல்
இவ்வயது காலம் வரை
எனக்காக நீ வாழ்வது
எனக்காக மட்டுமில்லை அறிவாயா?
உனக்காக ஒரு பொழுதேனும்
உனக்காக மட்டும் ஒதுக்கி வை
உன்னில் இருக்கும்
என்னைப் பற்றிய நினைவுகள்
இளைப்பாறட்டும்!

அன்புள்ள காதலனுக்கு,

நீங்கள் எழுதிய
கவிதை வரிகள் கண்டு
என் வாழ்வின்
வசந்தம் உணர்ந்தேன்

பாலைவனத்தில் மழை பெய்து
பூஞ்சோலை உருவானால்
அதை பார்ப்பவருக்கு
எவ்வளவு மகிழ்ச்சியோ
அதைவிட அளவிலா
மகிழ்ச்சி அடைந்தேன்

தந்தையின் மனம் மாறவில்லை
ஆனாலும் நம் காதலை
மறுக்க முடியவில்லை
காலம் செல்லும் போக்கில்
அவர் தன் மனதை
மாற்றுவார் என்று எதிர்பார்க்கிறேன்

முறையில்லா வாழ்க்கைக்கு
முடிச்சு போடாதீர்கள்
என்று சொன்னேன்
முரண்பட்டவற்றில் உள்ள
முடிச்சை சிக்கலாக்குவதே
என் உயரிய தொண்டு என்றார்

தாயில்லா எனக்கு
தயவு காட்டுங்கள் என்றேன்
தாய்மையின் பெருமையை
நீ உணரும் வரை
என் நிலை விளங்காது என்றார்

நிலவு வரை
காதல் போய்விட்டது
ஏன் நிலவறைக்குள் அடைக்கிறீர்கள்
என்றேன்
பெண்ணை பெற்றவனுக்கு
பெரும்பாடு என்று
மண்ணின் பாட்டை
மறுபடியும் கூறினார்

எனக்கு வரன் பார்ப்பதாக
என்னிடம் கூறினார்
தட்சிணை வைப்பதாய்
இருந்தால் அந்த
காரியத்தை தள்ளி வையுங்கள்
என்றேன்

இந்த காலத்தில்
தட்சிணையின்றி தாலியா
அதற்கு சாத்தியமில்லை என்றார்
அப்படியென்றால்
காதலற்ற மணத்திற்கும்
சாத்தியமில்லை என்றேன்

நீங்கள் கூறியது போல
எல்லாம் அவர் குற்றம்
என்றார்
புரிந்து கொண்டால் நல்லது
என்று புரையோடியவிட்ட
புண்ணை கீறிவிட்டேன்

மருந்து போடுவதற்கு
ஆயத்தமானேன்
நீங்கள் காட்டுபவரை
நான் கைபிடித்து
வாழ்வு சரியாகாதுப் போனால்
அதற்கு என்ன உத்தரவாதம் என்றேன்

ஆனால்
என்னையே அவர்
திருப்பிக் கேட்டார்
காதலரை மணந்தால்
இந்நிலை ஏற்படாது என்று
என்ன உத்தரவாதம் என்றார்

காதல் உத்தரவாதம் என்றேன்
காறித் துப்புகிறது மேலை நாடுகள் என்றார்
நாம் மேலை நாட்டின்
நிலையில் இல்லை என்றேன்
எழுபத்து ஐந்து சதவிகிதம்
தாண்டிவிட்டோம் என்றார்
இருபத்து ஐந்து காப்பாற்றும் என்றேன்

வாக்குவாதம்
வரிகளால் அர்ச்சனை
செய்யப்படும் போது
அவர் விலகி நிற்க
ஆசைப்பட்டார்
என் தந்தையின் மனது
குழப்பமானதை
நானும் உணர்ந்து
விலகி விட்டேன்
நீங்கள் வரும்வரை
நிச்சயம் காத்து இருப்பேன்.

Monday, 7 September 2009

செவ்வாயில் தண்ணீர்

இருக்கும் பூமியில் தண்ணீர்
இல்லாமல் போகும் நிலைக்கு
மாற்றுவழி கண்டு மனம்
மகிழ்ந்திட வழியின்றி
பக்கத்து கிரகத்தில்
சேரோடு சகதியில்
தண்ணீர்தானா என தவித்து

பூமியில் வாழும் மனிதர்களுக்கு
நல்வழி காட்டி மகிழாது
பொருளையெல்லாம் கொட்டி
பிஞ்சு உள்ளம் வெந்து
சாவதை கண்டு துடிக்காது
என்ன இந்த விஞ்ஞானம்

எண்ணிப் பார்க்கையில் விந்தைதான்
என் பையில் கொஞ்சம் பணம்
அதிகமாகவே இருக்கிறது
அழுது கொண்டு நிற்கும்
அந்த பையன் இன்னும்
அழுதபடியே!